மறைந்தார் விஜயகாந்த் … கட்சியினர், ரசிகர்கள் சோகம்… திரையுலகத்தினர் வேதனை!
உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். அவரது மறைவால் அவரது கட்சித் தொண்டர்கள், ரசிகர்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், தமிழ்த் திரையுலகினர் மத்தியிலும் அவரது மரணம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
71 வயதாகும் விஜயகாந்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை மேற்கொண்டு வந்தார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு அவ்வப்போது இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டும் வந்தது. கடந்த மாதம் 18 ஆம் தேதியன்றும் இதே காரணத்துக்காக அவர் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில், அடுத்த சில நாட்களில் நுரையீரல் பிரச்னை ஏற்பட்டதால் அவரால் இயல்பாக சுவாசிக்க முடியவில்லை. இதையடுத்து நுரையீரல் ஆதரவு சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்டு, தொடர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். பிறகு படிப்படியாக நலம் பெற்றார். மருத்துவ சிகிச்சைகள் முடிந்து டிசம்பர் 11 ஆம் தேதி அன்று விஜயகாந்த் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மீண்டும் அதே மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நுரையீரல் அழற்சிகாரணமாக அவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கூடவே கொரோனா தொற்றும் ஏற்பட்டதால், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. இதனையடுத்து அவரது மனைவி பிரேமலதா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரும் துயரம் தாங்க முடியாமல் கதறி அழுதனர்.
முன்னதாக விஜயகாந்தின் உடல் நிலை குறித்து அறிய இன்று காலையில் இருந்தே மியாட் மருத்துவமனையில் தேமுதிக தொண்டர்கள் குவியத் தொடங்கினர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில், அவர் காலமான செய்தி அறிந்து ஏராளமான தேமுதிக-வினரும் ரசிகர்களும் அதிர்ச்சியில் அழுது புலம்பியவாறு குவிந்துவிட்டனர். அதேபோல் சென்னை வளசரவாக்கத்தில் அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியிலும் தேமுதிக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டனர். அங்கும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்த் திரையுலகினர் மத்தியிலும் அவரது மரணம் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலும் வேதனையும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.