திமுக ஆட்சியின் 33 மாத சாதனைகள்… பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

மிழ்நாடு சட்டசபையில் இன்று, ஆளுநர் உரை மீதான விவாதத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியாவில் தலைசிறந்த மாநிலம் தமிழ்நாடு என்ற பெருமையை நாம் அடைய, தமிழும், தமிழ்நாடும், தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞரும் என ஐந்து இயங்கு சக்திகள் இயக்கிக்கொண்டிருப்பதால்தான், உற்சாகமாக உயர்ந்து கொண்டு இருப்பதாகவும், அதற்குக் காரணம் இந்த உன்னத தலைவர்கள் போட்டுத் தந்த வழித்தடம்தான் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “ஒரு காலத்தில் ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது’ என்று நாமே முழங்கினோம். இன்று, “தெற்கு வளர்கிறது; வடக்கிற்கும் சேர்த்து தெற்கு வாரி வழங்குகிறது” என்ற அளவுக்கு நாம் வளர்ந்துள்ளோம். இத்தகைய தகுதியும் பெருமையும் தமிழ்நாட்டிற்கு சாத்தியமானது திராவிட இயக்கத்தால்தான்” என ஸ்டாலின் மேலும் கூறினார்.

திமுக ஆட்சியின் 33 மாத சாதனைகள்

தொடர்ந்து பேசுகையில், “ என் கையில் முதலமைச்சர் என்ற பொறுப்பு வந்து 33 மாதங்கள் ஆகிறது. இவை “முன்னேற்ற மாதங்கள்!” “சாதனை மாதங்கள்!” இந்தியாவின் பொருளாதாரத்துக்கு 9 விழுக்காடு பங்கைத் தருகிறது தமிழ்நாட்டின் பொருளாதார வளம்! இது, திராவிட மாடல் ஆட்சியின் முதல் சாதனை. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது; இது, இரண்டாவது சாதனை.

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சி 7.24 விழுக்காடாக இருக்கும்போது தமிழ்நாட்டின் வளர்ச்சியானது 8.19 விழுக்காடாக உயர்ந்துள்ளது! இது, மூன்றாவது சாதனை. இந்திய அளவில் பணவீக்கமானது 6.65 விழுக்காடாக இருக்கும்போது, தமிழ்நாட்டில் அது 5.97 விழுக்காடாக குறைந்து உள்ளது! இது, நான்காவது சாதனை.

ஏற்றுமதி தயார் நிலைக் குறியீட்டில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது! இது, ஐந்தாவது சாதனை. மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கிறது! இது, ஆறாவது சாதனை. தொழில் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக 14-ஆவது இடத்தில் இருந்த தமிழ்நாட்டை 3-ஆவது இடத்துக்கு உயர்த்தி உள்ளோம்! இது, ஏழாவது சாதனை.

கல்வியில் இரண்டாவது இடத்துக்குத் தமிழ்நாட்டை உயர்த்தியது இந்த ஆட்சியின் எட்டாவது சாதனை. புத்தாக்கத் தொழில்கள் வரிசையில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பது ஒன்பதாவது சாதனை. இளைஞர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், விளிம்புநிலை மக்கள், ஒடுக்கப்பட்டோர் ஆகியோர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, தங்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து வருவதாகச் சொல்லத் தொடங்கி இருப்பதுதான் திராவிட மாடல் ஆட்சியின் பத்தாவது சாதனை.

இந்தப் பத்து மட்டுமல்ல, இந்தியாவின் தென் மூலையில் ஒரு ஆட்சி நடக்கிறது; அதன் திட்டங்களைத் தெரிந்து வந்து நம் மாநிலத்தில் செயல்படுத்துங்கள் என்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்த்துச் செல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியின் வரலாற்றுச் சாதனை. இப்படி, இன்று முழுவதும் என்னால் பட்டியலிட்டுக் கொண்டே இருக்க முடியும், ஆனால், நேரம் போதாது” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The technical storage or access that is used exclusively for anonymous statistical purposes. Liban deux casques bleus blessés dans une frappe israélienne. Revengeful sleep procrastination : the dark side of late night vengeance.