தவெக சின்னம் விசிலா, கிரிக்கெட் மட்டையா, மோதிரமா..? தீவிரமாக ஆலோசிக்கும் விஜய்!

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சியாக உள்ளது. இந்த நிலையில், 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகும் வகையில், இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்க அக்கட்சி தயாராகி வருகிறது.
தவெக பட்டியலில் இடம்பெற்றிருக்கும் சின்னங்கள்
தவெகவின் பொதுச் செயலாளர் என். ஆனந்த், இந்திய தேர்தல் ஆணையத்தின் 190 இலவச சின்னங்களின் பட்டியலிலிருந்து சில சின்னங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை கட்சித் தலைவரான விஜய்க்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தவெக மாவட்ட அளவிலான தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளிடமிருந்து எந்த சின்னத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த விருப்பங்களைப் பெற்று வருவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கட்சி நிர்வாகிகள் தெரிவித்த விருப்பங்களின் அடிப்படையில் தவெகவின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் தயாரித்துள்ள பரிந்துரை பட்டியலில்,
கிரிக்கெட் மட்டை, வைரம், ஹாக்கி மட்டை மற்றும் பந்து, மைக் (மைக்ரோஃபோன்), மோதிரம் மற்றும் விசில் ஆகியவை முதன்மையாக இடம்பெற்று உள்ளன. இவற்றில் கிரிக்கெட் மட்டை, மைக், வைரம், மற்றும் மோதிரம் ஆகியவை மிகவும் விருப்பமானவையாக உள்ளன.
சின்னத்தை முடிவு செய்ய 4 முக்கிய அளவுகோல்கள்
இந்த நிலையில், சின்னத்தை தேர்வு செய்வதற்கா தவெக தலைமை நான்கு முக்கிய அளவுகோல்களை நிர்ணயித்துள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவை,
சின்னம் மக்களின் உணர்வுகளுடன் ஒத்துப்போக வேண்டும்.
விஜய்யின் பிரபலமான திரைப்படங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.
பிற கட்சிகளின் சின்னங்களை ஒத்திருக்கக் கூடாது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்து 36 மணி நேரத்திற்கு பிறகும் மக்களால் எளிதாக அடையாளம் காணப்பட வேண்டும்.
சின்னங்களின் பின்னணி மற்றும் முக்கியத்துவம்

கிரிக்கெட் மட்டை: இளைஞர்கள் மத்தியில் பிரபலமான கிரிக்கெட் விளையாட்டு, தமிழகத்தில் மிகுந்த ஈர்ப்பைக் கொண்டுள்ளது. விஜய்யின் திரைப்படங்களில் விளையாட்டு கருப்பொருள்கள் பிரபலமானவை என்பதால், இந்த சின்னம் இளைஞர்களை ஈர்க்கும் என கட்சி வட்டாரங்கள் நம்புகின்றன.
மைக் (மைக்ரோஃபோன்): மைக், விஜய்யின் குரல் மக்களை சென்றடைவதைக் குறிக்கிறது. நடிகராக இருந்து அரசியல் தலைவராக மாறிய விஜய்யின் பயணத்தை இது பிரதிபலிக்கிறது. மக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் ஒரு கருவியாக இது பார்க்கப்படுகிறது.
வைரம் மற்றும் மோதிரம்: மோதிரம் ஒற்றுமை மற்றும் தொடர்ச்சியைக் குறிக்கிறது. வைரம் வலிமை மற்றும் மதிப்பைக் குறிக்கிறது. இந்த சின்னங்கள் மக்களுக்கு உணர்வுபூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் என கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.
விசில்: விஜய்யின் ‘பிகில்’ திரைப்படத்தில் விசில் முக்கிய பங்கு வகித்தது. அவரது ரசிகர் குழுக்களில் இது பிரபலமான சின்னமாக இருந்தாலும், கட்சி தலைமையில் இதற்கு முழு ஒப்புதல் கிடைக்கவில்லை.
ஹாக்கி மட்டை மற்றும் பந்து: இந்த சின்னமும் பரிசீலனையில் உள்ளது. ஆனால் இது மற்ற சின்னங்களை விட குறைவான முக்கியத்துவமே பெற்றுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிய சின்னங்களை முன்மொழியவும் திட்டம்

மேற்கூறிய சின்னங்கள் எல்லாம் இந்திய தேர்தல் ஆணையத்தின் இலவச சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவை. இந்த நிலையில், இவற்றை சிலவற்றைத் தேர்ந்தெடுப்பதோடு, மூன்று புதிய சின்னங்களை முன்மொழிந்து கேட்டுப்பெறவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்காக, கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் புதிய வடிவமைப்புகளை உருவாக்கி வருகின்றனர். இந்த சின்னங்கள், தவெகவின் கொள்கைகளையும், மக்களின் எதிர்பார்ப்புகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நோக்கம்.
இது குறித்து பேசிய தவெகவின் மூத்த நிர்வாகி ஒருவர், “ஒரு கட்சியின் தேர்தல் சின்னம் வெறும் காட்சி அடையாளமல்ல, அது மக்களுக்கு கட்சியின் செய்தியை எடுத்துச் செல்லும் கருவியாக இருக்க வேண்டும். அது எளிதில் நினைவில் நிற்க வேண்டும், மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.
விஜய் முடிவே இறுதியானது
இந்த நிலையில், “கட்சியின் தேர்தல் சின்னம் தொடர்பாக விஜய், மாநில அளவிலான மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, ஒவ்வொரு சின்னத்தின் நன்மை தீமைகளையும் ஆராய்ந்து இறுதி முடிவு எடுப்பார். அவரது முடிவே இறுதியானது” என்று தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தேர்தல் ஆணைய விதிகள் என்ன?
இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, தவெக, குறைந்தபட்சம் 234 தொகுதிகளில் 5% (12 இடங்கள்) போட்டியிட வேண்டும். பொதுவான சின்னத்திற்கு விண்ணப்பிக்க, தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடையும் ஆறு மாதங்களுக்கு முன்பு ( 2025 நவம்பர் 5) விண்ணப்பிக்க வேண்டும். புதிய சின்னங்களை முன்மொழிய, குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும்.
தவெக, தேர்தல் ஆணையத்தின் இலவச சின்னங்களில் இருந்து 10 சின்னங்களை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட வேண்டும் அல்லது மூன்று புதிய சின்னங்களை முன்மொழியலாம். இந்த சின்னங்கள் தேர்தல் ஆணையத்தால் ஆய்வு செய்யப்பட்டு ஏற்கப்படும் அல்லது நிராகரிக்கப்படும்.