TNPSC, SSC, IBPS, RRB போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி… விண்ணப்பிப்பது எப்படி?

தமிழ்நாடு அரசு, இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை நனவாக்கும் வகையில், டிஎன்பிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஐபிபிஎஸ் மற்றும் ஆர்ஆர்பி ( TNPSC, SSC, IBPS, RRB) போன்ற முகமைகள் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு இந்த பயிற்சி மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என்பதால் வாய்ப்பு உள்ளவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
பயிற்சி காலம், தகுதி
சென்னையில் இந்த பயிற்சி வகுப்புகள் இரு மையங்களில் நடைபெற உள்ளன. பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள சர் தியாகராய கல்லூரியில் 500 பேருக்கும், சேப்பாக்கம் மாநில கல்லூரி வளாகத்தில் 300 பேருக்கும் பயிற்சி வழங்கப்படும்.
இதற்கு இணையவழி விண்ணப்பங்கள் மூலம் சேர்க்கை நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் 6 மாத காலத்திற்கு, வாராந்திர வேலை நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சியில் பங்கேற்க குறைந்தபட்சம் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பயிற்சி மையங்களில் உணவு மற்றும் தங்கும் வசதிகள் வழங்கப்படாது.
விண்ணப்பிப்பது எப்படி?
பயிற்சி வகுப்புகளில் சேர விரும்புவோர், www.cecc.in என்ற இணையதளம் வழியாக மே 16 முதல் மே 31 வரை விண்ணப்பிக்கலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 044-25954905 மற்றும் 044-28510537 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
இந்த இலவச பயிற்சி திட்டம், குறிப்பாக பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்கு தேர்வுக்கு தயாராக மிகுந்த உதவியாக இருக்கும். அத்துடன் தேர்வர்களுக்கு பாடத்திட்டம், தேர்வு முறைகள், மற்றும் நேர மேலாண்மை குறித்து ஆழமான வழிகாட்டுதலையும் வழங்கும்.
இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் எதிர்காலத்தை வெற்றிகரமாக வடிவமைத்துக் கொள்ள முடியும்!