நில மோசடிகளைத் தடுக்க தமிழக அரசின் புதிய மொபைல் App… முழு விவரங்களும் விரல் நுனியில்!

தமிழ்நாடு அரசு, நிலம் தொடர்பான மோசடிகளைத் தடுக்கவும், பொதுமக்களுக்கு வெளிப்படையான தகவல் அளிக்கவும் புதிய தொழில்நுட்ப முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இதற்காக, நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் மூலம் https://eservices.tn.gov.in/eservicesnew/home.html என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், பொதுமக்கள் தங்கள் நிலம் தொடர்பான பட்டா, வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். மேலும், பட்டா பெயர் மாற்றத்திற்கு நேரடியாக இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
புதிய இணையதளம்
இந்த நிலையில், கிராமப்புறங்களில் நிலத் தகவல்களை எளிதாக அறிய, தமிழ்நாடு அரசு “வில்லேஜ் மாஸ்டர்” என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இதில், சர்வே எண் தெரியாவிட்டாலும், நிலத்தின் உரிமையாளர் விவரங்களை அறிய முடிந்தது.

ஆனால், தற்போது மேலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாக, புவியியல் தகவல் அமைப்பு (Tamil Nadu Geographic Information System – TN-GIS) உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு https://tngis.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம்.
இந்த புதிய அமைப்பு மூலம், எந்த ஆவணமும் இல்லாமல் தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள நிலத்தின் விவரங்களையும் ஒரே இடத்தில் பெற முடியும். பயனர்கள் கூகுள் மேப் போல இருப்பிடத்தைத் தேர்ந்தெடுத்து, நிலத்தின் எல்லைகள், உரிமையாளர் பெயர், பரப்பளவு, பட்டா விவரங்கள், பத்திரப் பதிவு, வில்லங்கச் சான்று, அரசு மதிப்பு உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் அறியலாம். மேலும், அந்த நிலம் எந்த மாவட்டம், தாலுகாவில் உள்ளது, அருகிலுள்ள காவல் நிலையம், மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, ரேஷன் கடை, மின்சார அலுவலகம், தீயணைப்பு நிலையம் போன்ற வசதிகளின் விவரங்களும் கிடைக்கும்.

இந்தியாவில் பல மாநிலங்கள் இதேபோன்ற அமைப்புகளை உருவாக்கியிருந்தாலும், பல வசதிகளை ஒருங்கிணைத்து வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. முன்பு, சர்வே எண் இல்லாமல் நில விவரங்களை அறிவது கடினமாக இருந்தது. ஆனால், TN-GIS இணையதளத்தில் மாவட்டம், கிராமம் வாரியாகத் தேடி, நிலத் தகவல்களை எளிதாகப் பெறலாம். சென்னை மாநகரம் மற்றும் ஊரகப் பகுதிகளின் நில விவரங்கள் ஏற்கனவே பதிவேற்றப்பட்டுள்ளன. மற்ற நகர்ப்புறங்களின் தகவல்கள் விரைவில் சேர்க்கப்பட உள்ளன. அடுத்த இரண்டு மாதங்களில் தமிழ்நாட்டின் அனைத்து நிலத் தகவல்களும் இந்த அமைப்பில் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மொபைல் App
இந்த சேவைகள் இணையதளத்துடன், TN-GIS என்ற மொபைல் செயலியாகவும் ( Mobile App) கிடைக்கிறது. இது பொதுமக்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் நிலத் தகவல்களை அணுக உதவுகிறது. இத்தகைய முயற்சிகள், நில மோசடிகளைக் குறைத்து, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.