ரூ.50,000 கோடி முதலீடு! -கௌதம் அதானி அறிவிப்பு…

அதானி குழுமம் அடுத்த 10 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலங்களில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யும் என அதன் தலைவர் கௌதம் அதானி அறிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற ‘ரைசிங் நார்த்ஈஸ்ட் முதலீட்டாளர்கள் மாநாட்டில்’ பேசிய அவர், இந்த முதலீடு பசுமை எரிசக்தி, ஸ்மார்ட் மீட்டர்கள், நீர் மின்சாரம், மின்சார பரிமாற்றம், சாலைகள், நெடுஞ்சாலைகள், டிஜிட்டல் உள்கட்டமைப்பு, தளவாடங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கௌதம் அதானி, “மூன்று மாதங்களுக்கு முன்பு அசாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்வதாக உறுதியளித்தோம். இன்று, பிரதமர் மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு, மேலும் ரூ.50,000 கோடியை வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய உறுதியளிக்கிறோம்,” என்று கூறினார். இந்த முதலீடு உள்ளூர் வேலைவாய்ப்பு, தொழில்முனைவு மற்றும் சமூக ஈடுபாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பிரதமர் மோடியின் ‘ஆக்ட் ஈஸ்ட், ஆக்ட் ஃபாஸ்ட், ஆக்ட் ஃபர்ஸ்ட்’ கொள்கையை பாராட்டிய அதானி, 2014 முதல் வடகிழக்கு மாநிலங்களில் ரூ.6.2 லட்சம் கோடி முதலீடு, 16,000 கி.மீ. சாலை வலையமைப்பு இரட்டிப்பாக்கம் மற்றும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்ததை சுட்டிக்காட்டினார். இந்த மாநாட்டில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும் ரூ.75,000 கோடி முதலீடு செய்யும் என அறிவித்தது.