இன்னும் இரண்டரை ஆண்டில் சந்திரயான்-4: இஸ்ரோவின் அடுத்த பெரிய முயற்சி!

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் வி. நாராயணன், 2025 ஆம் ஆண்டை “ககன்யான் ஆண்டு” என்று அறிவித்துள்ளதோடு, இந்த ஆண்டு இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான மைல்கல் ஆக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனுடன், சந்திரயான்-4 திட்டத்திற்கான விண்கலம், அடுத்த இரண்டரை ஆண்டுகளில், அதாவது 2027 ஆம் ஆண்டு வாக்கில் ஏவப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த திட்டம், நிலவின் மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு திருப்பி கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளதால், இது இந்தியாவின் விண்வெளி ஆய்வில் ஒரு மாபெரும் முன்னேற்றமாக இருக்கும்.

சந்திரயான்-4 திட்டம், இஸ்ரோவின் நிலவு ஆய்வுத் திட்டங்களில் நான்காவது முயற்சியாகும். இந்த திட்டம், நிலவில் மென்மையாக தரையிறங்கி, 2-3 கிலோ மாதிரிகளை சேகரித்து, பூமிக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், எதிர்கால விண்வெளி பயணங்களுக்கு இந்த ஆராய்ச்சி உதவும்.

இதற்காக, இந்த பயணம் இரண்டு கட்டங்களாக, இரண்டு LVM-3 ஏவுகலன்கள் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் ஏவுதலில், தரையிறங்கும் மாட்யூல் (Descender Module) மற்றும் ஏறுதல் மாட்யூல் (Ascender Module) அனுப்பப்படும். இரண்டாவது ஏவுதலில், மாற்று மாட்யூல் (Transfer Module), மீள் நுழைவு மாட்யூல் (Re-entry Module) மற்றும் உந்து மாட்யூல் (Propulsion Module) அனுப்பப்படும். இவை புவி வட்டப் பாதையில் இணைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த விண்கலமாக நிலவை நோக்கி பயணிக்கும்.

கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் இதனை தெரிவித்த நாராயணன், “சந்திரயான்-4, ‘ஒரு மாதிரி திரும்புதல்’ பயணமாகும். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது வடிவமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.மேலும் இரண்டரை ஆண்டுகளில் இந்த பயணத்தை நாங்கள் நிறைவேற்றுவோம்” என்று மேலும் கூறினார்.

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

இந்த திட்டத்திற்கு 2,104.06 கோடி ரூபாய் (250 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் 36 மாதங்களுக்குள் இது முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்திரயான்-4 திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்:

நிலவில் மென்மையான தரையிறங்குதல்.

நிலவு மேற்பரப்பில் இருந்து மாதிரிகளை சேகரித்து, வெற்றிட கொள்கலனில் பாதுகாப்பது.

நிலவு மேற்பரப்பில் இருந்து விண்கலத்தை மீண்டும் ஏவுதல்.

புவி மற்றும் நிலவு வட்டப் பாதைகளில் இணைப்பு (docking) மற்றும் பிரித்தல் (undocking) செயல்பாடுகளை நிரூபித்தல்.

இஸ்ரோ ஸ்பேடெக்ஸ்

இந்த திட்டத்திற்கு முன்னோட்டமாக, இஸ்ரோ ஸ்பேடெக்ஸ் (SpaDeX) பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இந்த பயணம், விண்வெளியில் இரண்டு விண்கலங்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை நிரூபித்தது. இது சந்திரயான்-4 இன் முக்கியமான இணைப்பு செயல்பாடுகளுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது. ஸ்பேடெக்ஸ் பயணத்திற்கு 10 கிலோ எரிபொருள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், 5 கிலோ எரிபொருள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை மற்ற பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளன.

2025 ஏன் இஸ்ரோ-வுக்கு முக்கியமான ஆண்டு?

2025 ஆம் ஆண்டில், இஸ்ரோ பல முக்கிய பயணங்களை திட்டமிட்டுள்ளது. இதில், நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய செயற்கை அலைவரிசை ரேடார் செயற்கைக்கோள் மற்றும் வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகியவை அடங்கும். இவை, இந்தியாவின் சொந்த ஏவுகலன்கள் மூலம் ஏவப்பட உள்ளன. மேலும், ககன்யான் திட்டத்தின் முதல் மனிதரற்ற பயணமான ‘வியோம்மித்ரா’ (Vyommitra), இந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் முதல் மனித விண்வெளி பயணம் நடைபெறும்.

சந்திரயான்-4 இன் தரையிறங்கும் இடமாக, சந்திரயான்-3 தரையிறங்கிய ஸ்டேஷியோ ஷிவ் ஷக்தி (Shiv Shakti Point) அருகே உள்ள நிலவின் தென் துருவப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் நீர்ப்பனி (water ice) அதிகளவில் உள்ளதால், இது விஞ்ஞான ஆய்வுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த திட்டம் வெற்றிகரமாக முடிந்தால், இந்தியா அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைத் தொடர்ந்து நிலவு மாதிரி திரும்புதல் பயணத்தை வெற்றிகரமாக செய்த நான்காவது நாடாக மாறும். மேலும், இஸ்ரோவின் இந்த முயற்சிகள், இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும். மேலும், 2040 ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விண்வெளி வீரர்கள் நிலவில் தரையிறங்குவதற்கு இந்த திட்டம் அடித்தளமாகவும் அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

League of legends wasd movement controls may soon be a reality. Quotes on the israel hamas war. No foul play in death of cincinnati ol jeremiah kelly rtn.