தொகுதி மறுசீரமைப்பு: மோடியுடனான சந்திப்பு பலன் தருமா… அடுத்தகட்ட நகர்வு என்ன?

சென்னையில் கடந்த சனிக்கிழமையன்று தொகுதி மறுசீரமைப்பு எதிர்ப்பு கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல மாநில தலைவர்கள் ஒன்றிணைந்து நிறைவேற்றிய தீர்மானங்களில், “பிரதமர் மோடியை கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் நேரில் சந்தித்து கடிதம் அளித்து முறையிடுவது” என்ற தீர்மானம் மிக முக்கியமாக இடம்பெற்றிருந்தது.
அதன்படி, தமிழக சட்டசபையில் இன்று இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற முழக்கத்துடன், தமிழகத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை அழைத்து, பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக அறிவித்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடந்த கூட்டம், மத்திய அரசுக்கு அழுத்தத்தைக் கொடுத்துள்ளதா? மத்திய அரசு மற்றும் பாஜக தரப்பில் இது எப்படி பார்க்கப்படுகிறது? மோடியுடனான சந்திப்பு பலன் தருமா? பலன் அளிக்காவிட்டால் இதன் அடுத்தகட்ட நகர்வு எப்படி இருக்கும் என்பது உள்ளிட்டவை குறித்த ஓர் அலசல் இங்கே…
மோடியுடனான சந்திப்பு பலனளிக்குமா?
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக எம்.பி.க்கள், பிரதமரிடம் தற்போதைய 7.18% பிரதிநிதித்துவத்தை (39 மக்களவை, 18 மாநிலங்களவை இடங்கள்) பாதுகாக்க வலியுறுத்துவர். சென்னைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், கடந்த 1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையிலேயே மறுசீரமைப்பு நடக்க வேண்டும், மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு தென் மாநிலங்கள் தண்டிக்கப்படக் கூடாது எனவும் வலியுறுத்தியது. ஆனால், மத்திய அரசு இதை ஏற்க வாய்ப்பு குறைவு. பாஜக உள்வட்டார தகவல்களின்படி, 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு செய்யப்பட்டால், அது வட மாநிலங்களுக்கு சாதகமாக அமையலாம், தமிழ்நாடு 8 முதல் 10 தொகுதிகளை இழக்கலாம்.

இது விசயத்தில் பிரதமர் மோடியின் முந்தைய பதில்களைப் பார்க்கும்போது, அவரிடமிருந்து உறுதியான உத்தரவாதம் கிடைப்பது சந்தேகமே. இருப்பினும், தென் மாநிலங்களின் ஒருங்கிணைந்த குரல், மத்திய அரசுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
மத்திய அரசு மற்றும் பாஜகவின் நிலைப்பாடு
மக்கள் தொகை அடிப்படையிலான மறுசீரமைப்பு மூலம் உத்தரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களுக்கு மேலும் கூடுதலான தொகுதிகள் கிடைக்கும். இது, பாஜக-வின் வட இந்திய ஆதரவு தளத்தை வலுப்படுத்தும் என்று அக்கட்சியினர் நம்புகின்றனர். அதே சமயம், இதற்கு தென் மாநிலங்கள் தெரிவிக்கும் எதிர்ப்பு, கூட்டாட்சி கோட்பாட்டை மீறுவதாக விமர்சிக்கப்படுகிறது. மத்திய அரசு, இதை ‘தேசிய நலன்’ என்று நியாயப்படுத்தினாலும், தமிழகத்தின் ஒருங்கிணைந்த எதிர்ப்பு, அவர்களுக்கு அரசியல் சிக்கலை உருவாக்கலாம்.
அடுத்தகட்ட நகர்வு என்ன?
இந்தப் போராட்டம் தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களுடன் கூட்டு முயற்சியாக வளர வாய்ப்புள்ளது. சென்னைக் கூட்டம், தென் மாநிலங்களை ஒருங்கிணைத்து, ‘நியாயமான பிரதிநிதித்துவம்’ என்ற கோரிக்கையை தேசிய அளவில் எடுத்துச் செல்லும் தொடக்கமாக அமைந்தது.
அடுத்தகட்டமாக, நாடாளுமன்றத்தில் இதை விவாதப்பொருளாக்கி, தென் மாநில எம்.பி.க்களின் ஒருமித்த குரல் எழுப்பப்படலாம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், ‘மக்கள் தொகை கட்டுப்பாட்டுக்கு தண்டனை ஏன்?’ என்ற கேள்வியை முன்வைத்து தீவிரப்படுத்தப்படலாம்.

மத்திய அரசு இதை புறக்கணித்தால், சட்டப்போராட்டத்தை தமிழக அரசு கையில் எடுக்கும். அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கோரி, உச்ச நீதிமன்றத்தை முதல்வர் ஸ்டாலின் அணுகலாம். இதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற, மக்கள் ஆதரவை திரட்டுவதற்கு, கிராமப்புறங்களில் பொதுக்கூட்டங்கள், நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படலாம். ‘தென் மாநில முதலமைச்சர்களின் மாநாடு’ ஒன்று நடத்தப்பட்டு, ‘தென் இந்திய உரிமைக் கூட்டமைப்பு’ போன்ற அமைப்பு உருவாக்கப்படலாம். இது, மத்திய அரசுக்கு பெரும் அரசியல் மற்றும் சமூக அழுத்தமாக மாறும்.
அந்த வகையில், பிரதமர் மோடியுடனான சந்திப்பு உடனடி தீர்வு தராவிட்டாலும், தமிழ்நாட்டின் போராட்டம் தென் மாநிலங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தி, நியாயமான பிரதிநிதித்துவத்திற்கான பெரிய இயக்கமாக உருவெடுக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், இப்பிரச்னையில் தளராத போராட்டமும் முயற்சிகளுமே தமிழகம் உள்ளிட்ட பாதிக்கப்படும் மாநிலங்களுக்கான நியாயத்தைப் பெற உதவும் என்கிறார்கள் இதனை ஆழமாக உற்று நோக்கும் அரசியல் பார்வையாளர்கள்!