25 வயதிலேயே டெஸ்ட் கேப்டனான கில்… இந்திய கிரிக்கெட்டின் அடுத்த அத்தியாயம் தொடக்கம்!

ஜூன் 20 முதல் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு, ஷுப்மன் கில்லை இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும் துணை கேப்டனாக ரிஷப் பந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்
25 வயதிலேயே, கில் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் புஷ்பேந்திர சிங் பட்டோடிக்குப் பிறகு இரண்டாவது இளம் டெஸ்ட் கேப்டனாகிறார். கடந்த பத்தாண்டு இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை வழிநடத்திய ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி இல்லாத சூழலில், ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது கில்லின் இந்த நியமனம்.
2020-21 ஆஸ்திரேலிய தொடரில், குறிப்பாக காபாவில் அழுத்தமான சூழலில் திறமையையும் அமைதியையும் காட்டிய கில்லின் உயர்வு, எதிர்பார்த்த ஒன்று தான். என்றாலும், இங்கிலாந்து போன்ற வரலாற்று ரீதியாக இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சோதனை களமாக அமைந்த நாட்டில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு அவரை கேப்டனாக்குவது என்பது பிசிசிஐ-யின் ஒரு துணிச்சலான முடிவு என்றே சொல்ல வேண்டும்.
அணி வீரர்கள் விவரம்:
சுப்மன் கில் (கேப்டன்),ரிஷப் பந்த், ஜெய்ஸ்வால்,ராகுல்,சாய் சுதர்சன் (தமிழக வீரர்), கருண் நாயர்,நிதிஷ் குமார், ரவிந்திர ஜடேஜா,துருவ் ஜுரல்,வாஷிங்டன் சுந்தர் (தமிழக வீரர்), ஷர்துல் தாகூர், பும்ரா,சிராஜ்,பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங்,குல்தீப் யாதவ்.
கில்லுக்கு ஏன் இப்போது கேப்டன் பதவி?
தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில், “இது திடீர் முடிவல்ல” என்று தெளிவுபடுத்தி உள்ளார். “ஒன்று அல்லது இரு தொடர்களுக்காக கேப்டனைத் தேர்வு செய்யவில்லை,” என்று தெளிவாக கூறிய அவர், 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியை மனதில் வைத்தே நீண்டகால திட்டமிடல் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மேலும், அணி அறையில் (dressing room) இருந்து கிடைத்த கருத்துகளின் அடிப்படையில், கில் தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, மனோபாவ ரீதியாகவும் தயாராக இருப்பதாக தேர்வுக்குழு கருதியதன் அடிப்படையிலும் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கில்லின் பயோடேட்டா அவருக்கு‘கேப்டன் தகுதி’ இருப்பதாக இன்னும் வலிமையாக கூறவில்லை. டெஸ்ட் அல்லது ஒருநாள் போட்டிகளில் அவருக்கு கேப்டன்ஸி அனுபவம் இல்லை. 2024 ல் ஜிம்பாப்வே தொடரில் ஐந்து டி20 போட்டிகளில் மட்டுமே கேப்டனாக இருந்தார். அவரது டெஸ்ட் சராசரி 35.05, வெளிநாட்டு மைதானங்களில் 27.53 ஆக குறைகிறது. ஆனால், எண்ணிக்கைகளில் இல்லாதவற்றை, அவரது புரட்சிகரமான கண்ணோட்டம் மற்றும் இளம் வீரர்களை ஊக்குவிக்கும் திறன் போன்றவை ஈடு செய்வதாக பிசிசிஐ கருதுகிறது.

மாற்றத்தின் அடையாளம்
கில் நியமனம் ஒரு மாற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. அவர் தொழில்நுட்ப ரீதியாக செம்மையாகவும், மனதளவில் உறுதியான மற்றும் தன்னம்பிக்கையுடன் இருக்கக்கூடிய ஒரு நவீன இந்திய கிரிக்கெட் வீரரை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். மேலும், கடந்த இருபதாண்டுகளில் மும்பை-டெல்லி கிரிக்கெட் ஆதிக்கத்தைச் சேராத முதல் கேப்டனாகவும் அவர் உள்ளார்.
ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். விராட் கோலி தேர்வில் இல்லை. அஜிங்கியா ரஹானே மற்றும் சேத்தேஷ்வர் புஜாரா ஆகியோர் நீண்ட காலமாக அணியில் இல்லை. இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ( WTC) இறுதிப்போட்டிகளை எட்டிய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்த வீரர்கள் இப்போது இல்லை. இப்போது, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ருதுராஜ் கெய்க்வாட், மற்றும் புதிய துணை கேப்டன் ரிஷப் பந்த் ஆகிய இளம் திறமையாளர்கள் மட்டுமே உள்ளனர்.
ரிஷப் பந்தின் எழுச்சியும் பும்ராவின் சுமையும்

இந்த நிலையில், ரிஷப் பந்த் துணை கேப்டனாக மீண்டும் வந்திருப்பது இந்திய அணியின் மற்றொரு முக்கியமான அம்சமாகும். ஒரு வருடத்திற்கு முன்பு, கார் விபத்து காரணமாக அவரது கிரிக்கெட் வாழ்க்கை ஆபத்தில் இருந்தது. இப்போது, விக்கெட் கீப்பராக மட்டுமல்ல, கில்லுக்குத் துணையாகவும் அவர் மீண்டு வந்தது, அவரது விளையாட்டு திறனிலும், அணி அறை ( Dressing Room) கலாசாரத்தை வடிவமைக்கும் திறனிலும் உள்ள அவரது நம்பிக்கையைக் காட்டுகிறது.
மறுபுறம் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக இருந்த ஜஸ்பிரிட் பும்ரா, பணிச்சுமை காரணமாக கேப்டன்ஸிக்கு பரிசீலிக்கப்படவில்லை. “அவர் சிறப்பாக பந்து வீசுவதை விட கூடுதல் சுமையை அவர் மீது திணிப்பது நல்லதல்ல” என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெளிவுப்படுத்தி உள்ளார். அந்த வகையில், இது புத்திசாலித்தனமான முடிவு தான். பும்ராவின் தனித்துவமான செயல்பாடு மற்றும் காய வரலாறு காரணமாக, இந்தியா தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளரை இழக்க முடியாது.
இங்கிலாந்தில் காத்திருக்கும் சோதனை
இப்படியான நிலையில், ஒரு புதிய டெஸ்ட் கேப்டனுக்கான தொடக்க களமாக இங்கிலாந்து சிறந்த இடமாக இருக்காது. ஏனெனில் இந்திய அணியின் இங்கிலாந்து பதிவுகள் மோசமாகவே உள்ளன. தொடர் வெற்றிகள் அரிதாகவே உள்ளன. மேலும் பேட்டிங் சரிவுகளும் அடிக்கடி நிகழ்கின்றன. மேலும் ஸ்விங், சீம், மற்றும் பரிசோதனை ( Swing, seam, and scrutiny ) போன்றவையும் கில்லுக்கும் அவரது தலைமையிலான இளம் அணிக்கு சவாலாக உள்ளன.
இந்தியா தனது பயணத்தை ஜூன் 20 அன்று ஹெடிங்லியில் தொடங்கும். அதைத் தொடர்ந்து எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், ஓல்டு ட்ராஃபோர்டு மற்றும் தி ஓவல் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். ஒவ்வொரு மைதானமும் இந்திய அணிக்கு வெவ்வேறு வரலாறு மற்றும் சவால்களால் நிறைந்தவை.

கில்லுக்கு இது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சோதனையாக இருக்கும். அவர் இங்கிலாந்தில் முழு டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இரு WTC இறுதிப்போட்டிகள் மற்றும் 2022 ல் ஒரு மறுதிட்டமிடப்பட்ட டெஸ்டில் மட்டுமே அவர் பங்கேற்றிருந்தார்.
தொலைநோக்கத்துடனேயே மாற்றம்
மொத்தத்தில் இந்த தேர்வு, பிசிசிஐ-யின் ஒரு பரந்த உத்தியை பிரதிபலிக்கிறது. கில்-ரிஷப் பந்த் ஆகியோரது நியமனம், அணி நிர்வாகம் இன்றைய தேதிக்கு மட்டுமல்ல, 2027, 2031 ஆகியவற்றிற்கும் தயாராகிறது என்ற தொலை நோக்குப் பார்வையையே காட்டுகிறது. ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ், மற்றும் கெய்க்வாட் ஆகியோர் முக்கிய பங்கு வகிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா மற்றும் ஆர் அஸ்வின் ஆகியோரது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவும் நெருங்குவதால், இந்திய அணி, அனுபவத்திற்கும் வாக்குறுதிக்கும் இடையேயான ஒரு இறுக்கமான கயிறு மீது நடப்பதை போன்றே தற்போது காணப்படுகிறது.
மற்றொருபுறம் ஷுப்மன் கில்லின் கேப்டன்ஸி இன்னும் சோதிக்கப்படவில்லை. ஆனால், இந்திய கிரிக்கெட்டில் கில்லின் யுகம் தொடங்கிவிட்டது!