ஜூன் 3 முதல் நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்டம்!

தமிழ்நாட்டில் ‘முதல்வரின் காலை உணவுத் திட்டம்’, மாணவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், பள்ளி வருகையை அதிகரிக்கவும் 2022 செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் மதுரையில் தொடங்கப்பட்டது. இத்திட்டம், முதல் கட்டமாக, அரசு பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, காலை உணவு வழங்கப்பட்டது.
அதன்பின் ஊரகப் பகுதிகளில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தில், தமிழகத்தில் உள்ள 30,992 அரசு பள்ளிகளிலும், ஊரகப்பகுதிகளில் உள்ள 3,995 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், 17.53 லட்சம் மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நடப்பு கல்வியாண்டு முதல், நகர்ப்புறங்களில் இயங்கி வரும், 1,545 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 1.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், காலை உணவு திட்டம் விரிவுப்படுத்தப்படும் என, தமிழக அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதற்காக நடப்பாண்டு 600 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் பட்ஜெட்டில் அறிவித்தபடி, நகரங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3 முதல் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
வழங்கப்படும் உணவு வகைகள் என்னென்ன?

இத்திட்டத்தின் மெனுவில், தினமும் 50 கிராம் தானியங்கள் (ரவை, கோதுமை, அரிசி, தினை), 15 கிராம் பருப்பு, 60 கிராம் காய்கறிகளுடன் கூடிய சாம்பார் உள்ளிட்ட 13 வகையான உணவுகள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம், மாணவர்களுக்கு நாளொன்றுக்கு 28 கிராம் புரதமும், 846 கலோரிகளும் கிடைக்கிறது. இதனால் வகுப்பறையில் பசி இல்லாமல் கற்றல் திறன் மேம்படுகிறது.
தமிழ்நாடு மாநில திட்டமிடல் ஆணையத்தின் ஆய்வின்படி, இத்திட்டம் 90 சதவீத பள்ளிகளில் மாணவர்களின் வருகையை 20 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளது. மாணவர்களின் கவனம், கற்றல் திறன் மற்றும் விளையாட்டு பங்கேற்பு ஆகியவை முறையே 88.7% மற்றும் 88.8% உயர்ந்துள்ளன. குறிப்பாக, தினசரி கூலி வேலை செய்யும் பெற்றோரின் குழந்தைகளுக்கு இத்திட்டம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துகிறது.
இருப்பினும், சில சவால்களும் உள்ளன. இத்திட்டம், மாணவர்களின் ஆரோக்கியத்தையும், கல்வி வளர்ச்சியையும் உறுதி செய்யும் ஒரு மாபெரும் முயற்சியாக இருப்பதால், இதை கவனமாக கையாள வேண்டிய அவசியமும் உள்ளது. எனவே தான், உணவு தரத்தை பராமரிக்க அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.