மனைவியை பிரிந்த காரணம்… நடிகர் ரவி மோகன் விளக்கம்!

நடிகர் ரவி மோகன், கடந்த ஆண்டு தனது மனைவி ஆர்த்தியைப் பிரிவதாக அறிவித்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இவர்களது பிரிவுக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் காரணம் என சர்ச்சைகள் எழுந்தன. ஆனால். ரவி மோகனும் கெனிஷாவும் இதை மறுத்தனர்.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில், பாடகி கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார் ஆர்த்தி ரவி. இதற்கு கெனிஷாவும் பதில் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்ததற்கான காரணங்களை விளக்கி நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் ரவி மோகன்.
‘மாமியார் கடனுக்கு ஜாமீன் போட மட்டுமே நான்…’
” இத்தனை வருடங்களாக என்னை முதுகில் குத்தினார்கள். இப்போது என்னை நெஞ்சில் குத்தியதற்காக சந்தோஷப்படுகிறேன். என்னுடைய சார்பில் வரும் இறுதி அறிக்கை இது.பொன் முட்டையிடும் வாத்தாக என்னை எனது மனைவி பயன்படுத்தினார். என்னை கணவராக கூட மதிக்கவில்லை. எனது மாமியாரின் பல கோடி ரூபாய் கடனுக்கு என்னை ஜாமீன் தாரராக கடந்த ஆண்டு கட்டாயப்படுத்தி கையெழுத்து பெற்றனர். எனது சொத்துகள், எனது வங்கி கணக்குகள், எனது சமூக ஊடக கணக்குகளை கூட என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை. லைஃப் ஸ்டைல் என்ற பெயரில் என் மனைவி செய்த மதிப்பிட முடியாத செலவுகள்தான் என் கடன் பிரச்சினைக்கு காரணம்.
மனைவியும், அவருடைய குடும்பமும் இதைத்தான் நோக்கமாகக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு பணம்/ஜாமீன்/கையொப்பங்கள் தேவைப்படும்போது ரவி மோகன் என்ற பெயர் தேவை. கடந்த 16 ஆண்டுகளாக நான் இந்த போராட்டத்தில் தான் இருக்கிறேன். இருப்பினும், நான் எந்த நேரத்திலும் ஃபீனிக்ஸ் போல எழுந்து நிற்பேன் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இங்கிருந்து எல்லாவற்றையும் தொடங்க நான் தயாராக இருக்கிறேன். கடவுள் என்னை எல்லா வகையிலும் வழி நடத்துகிறார்.

கடந்த 5 வருடங்களாக எனது பெற்றோருக்கு ஒரு பைசா கூட பணம் கொடுக்கவிடாமல் தடுத்து வந்தார்கள். முன்னாள் மனைவியை பொருளாதார ரீதியாக துன்புறுத்துவதாக குற்றம்சாட்டுவது நகைச்சுவை, அதிர்ச்சி, ஆர்த்தியுடனான எனது திருமண வாழ்க்கையை தொடர எவ்வளவோ முயன்றேன். ஆர்த்தியால் உடல், மனம், மற்றும் உணர்வு ரீதியாக கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன்.
‘மகன்களை பார்க்கவிடாமல் தடுக்கின்றனர்’
மனைவியை மட்டுமே பிரிய முடிவு செய்துள்ளேன். மகன்களை அல்ல, எனது மகன்கள் இருவரையும் பார்க்கவிடாமல் என்னை தடுத்து வருகின்றனர். பணரீதியாக ஆதாயம் அடைய என் மகன்களை பயன்படுத்த முயற்சிக்கிறார்கள்.ஒரு மனிதனாகவும் தந்தையாகவும் நான் விலகிச்செல்ல எடுத்த வலிகள் அவர்கள் அறிந்து கொள்வார்கள்.
நான் மிகவும் தெளிவாக ஒன்றை கூறிக்கொள்கிறேன். உங்களுடைய விளையாட்டை இப்போதே நிறுத்திவிடுங்கள். முக்கியமாக என் குழந்தைகளை இதில் இனி ஒருபோதும் ஈடுபடத்த துணியாதீர்கள். நான் அவர்களுக்கு சிறந்த தந்தையாக இருப்பேன். மேலும் அவர்களுக்கு என்னிடம் எல்லா வகையான உறவுகளும் எப்போதும் நீடித்திருக்கும். மற்ற நடவடிக்கைகளை நான் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்கிறேன்.
‘கெனிஷா பிரான்சிஸ் அழகான துணை’
என்னுடைய வீட்டை விட்டு ஏதுமில்லாமல் நான் வெளியேறியபோது எனக்கு துணையாக நின்றவர் கெனிஷா பிரான்சிஸ். அவர் ஒரு அழகான துணை. வாழ்க்கையில் சந்தித்த சட்ட, உணர்வு, நிதி ரீதியான எல்லா பிரச்னைகளிலும் என்னுடன் இருந்தவர். என்னுடைய கதையை கேட்ட அடுத்த நிமிடத்தில் இருந்து ஒரு மனநல ஆலோசகராக இல்லாமல், தோழியாக இருந்து உதவினார்” என அதில் கூறியுள்ளார்.