பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு: 9 பேர் குற்றவாளிகள்… விசாரணை முழு விவரம்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கு தமிழகத்தையே உலுக்கிய ஒரு கொடூர சம்பவமாகும்.

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி, கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். தண்டனை விவரங்கள் மதியம் 12 மணிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்த நிலையில், அரசு தரப்பு வழக்கறிஞர்கள், குற்றவாளிகளுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

முன்னதாக தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி கோவை நீதிமன்ற வளாகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, 9 குற்றவாளிகளும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கின் முழு விவரத்தை இங்கே தெரிந்துகொள்ளலாம்…

2019 பிப்ரவரி 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி தைரியமாக புகார் அளித்ததன் மூலம் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. சமூக வலைதளங்கள் மூலம் பழகி, இளம்பெண்களை ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து பணம் பறித்ததாக அவர் புகாரளித்தார். இந்த புகாரை அடுத்து, திருநாவுக்கரசு (25), சபரிராஜன் (25), சதீஷ் (28), வசந்தகுமார் (27) ஆகிய நால்வர் முதலில் கைது செய்யப்பட்டனர். பின்னர், மணிவண்ணன் (28) என்ற மற்றொரு குற்றவாளி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

விசாரணையில் ஏற்பட்ட மாற்றங்கள்

ஆரம்பத்தில், இந்த வழக்கை பொள்ளாச்சி காவல்துறை விசாரித்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் கோவை முன்னாள் அதிமுக அமைச்சர் ஒருவர் என்பதால், புகார் கொடுக்க வந்தவர்கள் மிரட்டப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், புகார் கொடுத்த பெண்ணை பற்றிய விவரத்தை வழக்கை விசாரித்த காவல்துறை அதிகாரி வெளியிட்டதை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் கொதித்தெழுந்தன.

இதனையடுத்து வழக்கின் தீவிரத்தையும், பொதுமக்களின் கோபத்தையும் கருத்தில் கொண்டு, அது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. 2019 ஏப்ரல் மாதம், தமிழக அரசு, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. சிபிஐ அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் முகாமிட்டு, பாதிக்கப்பட்ட பெண்கள், குற்றவாளிகளின் குடும்பத்தினர், மற்றும் அவர்களின் நண்பர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் கைதுகள்

2021 ஜனவரியில், சிபிஐ விசாரணையின் அடிப்படையில், ஹேரேன்பால் (29), பாபு என்ற ‘பைக்’ பாபு (27), மற்றும் அருளானந்தம் (34) ஆகிய மூவர் கூடுதலாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் அருளானந்தம் அதிமுக மாணவர் அணி செயலாளராக இருந்தவர். இதனால், வழக்கு அரசியல் தொடர்பு கொண்டதாகவும் பேசப்பட்டது. அதிமுக தலைமை, அருளானந்தத்தை கட்சியிலிருந்து நீக்கியது.

வழக்கின் முக்கிய திருப்பங்கள்

வழக்கு விசாரணையின்போது, குற்றவாளிகளின் செல்போன்களில் பல இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட காணொளிகள் கிடைத்தன. இந்த வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவியதால், பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை பாதுகாக்க பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியது. மேலும், புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கியதாக ‘பார்’ நாகராஜ் உள்ளிட்ட மூவர் தனியாக கைது செய்யப்பட்டனர்.

குற்றவாளிகளில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது 2019 மார்ச் மாதம் குண்டர் சட்டம் பாய்ந்தது. ஆனால், அவர்களின் பெற்றோர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை அடுத்து, இந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

சமூக பாதிப்பு மற்றும் போராட்டங்கள்

இந்த வழக்கு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பல இளம்பெண்களின் வாழ்க்கையை சீரழித்த இந்த சம்பவத்திற்கு எதிராக பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. திமுக மகளிர் அணி, 2021 ஜனவரியில் பொள்ளாச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தி, முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தியது.

வழக்கு கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. யாரும் பிறழ்சாட்சியாக மாறவில்லை. இதற்கு 2021 ல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி 9 குற்றவாளிகளும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இறுதியாக, மே 13 அன்று, கோவை மகளிர் நீதிமன்றம் 9 பேரையும் குற்றவாளிகளாக அறிவித்தது.

இவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை, இதுபோன்ற செயலில் ஈடுபட நினைப்பவர்களுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Robotic archives brilliant hub. aston villa 4 1 newcastle united : premier league – as it happened | premier league. By location, type, and price to find the perfect bareboat sailing yacht or catamaran for your needs.