கோவையின் SEZ: ஐடி வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விளாங்குறிச்சி!
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (ELCOSEZ) உருவாக்குவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல், தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை செயல்படுத்துவதிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இதன் ஒரு அம்சமாக கோவை மாவட்டம், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் 158 கோடியே 32 லட்சம் ரூபாய் மதிப்பில், 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 தளங்களுடன் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை, நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவை சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார்.
என்னென்ன வசதிகள்?
இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் ஐந்து மேல் தளங்களில் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திற்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், மழை நீர் சேகரிப்பு வசதிகள், 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்திற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு தொட்டி, ஆறு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு
இந்த தகவல் தொழில்நுட்ப பூங்காவில் அமைய உள்ள மென்பொருள் நிறுவனங்களின் குத்தகைதாரர்களுக்கு இட ஒப்பந்த ஆணைகள் முதலமைச்சரால் வழங்கப்பட்டது. இந்த தொழில்நுட்ப பூங்கா மூலம் 3500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவையின் SEZ விளாங்குறிச்சி
இதனிடையே, கோவை விளாங்குறிச்சி பகுதியில் 17.17 ஏக்கர் பரப்பளவில் 2,000 கோடி ரூபாய் மதிப்பில், 26 லட்சம் சதுர அடியில், பேஸ்-2 தொழில்நுட்ப பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது.
இதன் மூலம் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட இருப்பதாக தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கோவை, விளாங்குறிச்சி பகுதி சிறப்பு பொருளாதார மண்டலமாக ( Special Economic Zone – SEZ)உருவெடுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.