10 ஆம் வகுப்புத் தேர்வில் முதலிடம்: அரியலூரின் ‘சக்சஸ் ஃபார்முலா’ அனைத்து மாவட்டங்களிலும் அமலாகும்?

மிழ்நாடு மாநில வாரியத்தின் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. மொத்தம் 91.55 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்வு எழுதிய 8 லட்சத்து 94,264 பேரில் 8 லட்சத்து 18,743 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவியர்களே அதிகம் தேர்ச்சி பெற்றனர். மாணவர்கள் 3 லட்சத்து 96,152 பேரும், மாணவிகள் 4 லட்சத்து 22,591 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆச்சரியப்படுத்திய அரியலூர்

இந்த நிலையில் மாநில அளவில், அரியலூர் மாவட்டம் 97.31 சதவிகிதத்துடன் முதலிடம் பிடித்தது. அடுத்தபடியாக சிவகங்கை மாவட்டம் 97.02 சதவிகிதம் தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தையும், ராமநாதபுரம் மாவட்டம் 96.36 சதவிகிதம் தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும், கன்னியாகுமரி மாவட்டம் 96.24 சதவிகிதம் தேர்ச்சியுடன் நான்காம் இடத்தையும், திருச்சி மாவட்டம் 95.23 சதவிகித தேர்ச்சியுடன், ஐந்தாம் இடத்தையும் பிடித்திருந்தது. அதேபோன்று 82.07 சதவீதத்துடன் வேலூர் மாவட்டம், கடைசி இடத்திற்கு சென்றது.

கடந்த காலங்களில், இதுபோன்ற பொதுத்தேர்வு முடிவுகளில் அரியலூர் மாவட்டம் பின்தங்கிய நிலையிலேயே காணப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 10 ஆம் வகுப்புத் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது கல்வியாளர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமல்லாது, கடந்த 6 ஆம் தேதியன்று வெளியான 12 ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளிலும் மாநில அளவில் மூன்றாவது இடத்தைப் பிடித்திருந்தது அரியலூர்.

பின்னணியில் அமைச்சர் சிவசங்கர்

இந்த கல்வியாண்டில், அரியலூர் மாவட்டம் இப்படி திடீர் முன்னேற்ற பாதையில் சென்றது எப்படி என விசாரித்தால், அதன் பின்னணியில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரை கைகாட்டுகின்றனர் மாவட்ட கல்வி அலுவலர்கள். அவர்தான், அரியலூர் மாவட்டம் பொதுத் தேர்வுகளில் தொடர்ந்து பின்தங்கி இருப்பது குறித்து மிகவும் ஆதங்கப்பட்டு, இந்த நிலையைப் போக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து கல்வியாளர்களிடம் பேசி உள்ளார்.

அவர்கள் தெரிவித்த ஆலோசனையின்படி, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக ‘தேர்வை வெல்வோம்’ என்ற கையேடு தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் 10 ஆம் வகுப்புக்கான கையேட்டை தமிழக ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி நிறுவன இணை இயக்குனர் சாமிநாதனும், 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கையேட்டை, ‘டுபிட்கோ’ நிறுவன பொது மேலாளர் முத்து பாண்டியனும் தயாரித்து கொடுத்துள்ளனர்.

கைகொடுத்த ‘கையேடு’ திட்டம்

கையேடுகள் தயாரிக்கப்பட்டதும், கடந்த ஜனவரி முதல் வாரத்தில், அரியலுார் மாவட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு அரசு பள்ளி மாணவர்களுக்கும், அந்த கையேட்டை அவரே நேரில் சென்று வழங்கி உள்ளார்.

அமைச்சர் சிவசங்கர்

அந்த கையேட்டை வாங்கிப் படித்த மாணவர்கள் பலர், அமைச்சர் சிவசங்கரைதொலைபேசியில் தொடர்புகொண்டு, கையேடு சிறப்பாக இருப்பதாகவும், தேர்வில் அதிக மதிப்பெண் பெற இது தங்களுக்கு மிகவும் உதவும் என்றும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

மாநிலம் முழுவதும் செயல்படுத்த திட்டம்

அதன்படியே, மாணவர்களும் சிறப்பாக தேர்வு எழுதியதால், அரியலூர் மாவட்டத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக தேர்வு முடிவுகள் வந்ததாக மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் சிவசங்கர், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த கையேடு மிகவும் உதவியாக இருப்பதால், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து, இது குறித்து எடுத்துக் கூறி, வரும் கல்வியாண்டு முதல் மாநிலம் முழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கையேட்டை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்க இருப்பதாக கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதால், நிச்சயம் இந்த யோசனை பரிசீலிக்கப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

» bilim teknoloji Çalışma grubu. Zu den favoriten hinzufügen. Dette kan hurtigt medføre en blålig tunge samt andre alvorlige symptomer.