ஸ்பெயின் முதலீட்டளர்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கேட்டது என்ன?

ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மேட்ரிட்டில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

அவர் பேசுகையில், “ஐரோப்பிய ஒன்றியத்திலேயே, நான்காவது பெரிய பொருளாதார நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. எட்டு ‘ஃபார்ச்சூன் 500’ நிறுவனங்கள் மற்றும் 20 ‘ஃபார்ச்சூன் 2000’ நிறுவனங்களும், ஸ்பெயின் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகின்றன. தமிழ்நாட்டுடன் வணிக உறவு மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில், 6-ஆவது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது” என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில், நான்காவது பெரிய பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்கிறது என்றும், இந்தியாவின் இரண்டாவது பொருளாதாரமாக தமிழ்நாடு விளங்குகிறது என்றும் முதலமைச்சர் கூறினார்.

கெஸ்டாம்ப், கமேசா, ரோக்கா, உர்பேசர், இன்கிடீம், ஆம்ப்போ, பபேசா, ஆர்பினாக்ஸ், கோர்லான் ஆகிய முக்கிய ஸ்பானிஷ் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தற்போது செயல்பட்டு வருகின்றன எனச் சுட்டிக்காட்டிய அவர், இந்தப் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக, முதலீடுகளை தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக ஸ்பெயின் வந்ததாகத் தெரிவித்தார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு 30 நாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் வந்திருந்தன என்றும், 130க்கும் மேற்பட்ட “ஃபார்ச்சூன் 500” நிறுவனங்கள், தமிழ்நாட்டில் தமது திட்டங்களை நிறுவியுள்ளன என்றும், அதுவே தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான சிறந்த சூழல் அமைந்துள்ளதற்கு சான்று என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ஸ்பெயின் நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அவர், வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் ஸ்பெயின் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தமிழ்நாட்டில் தொழில்களைத் துவங்க வரும் முதலீட்டாளர்களுக்கு, அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தமிழ்நாடு அரசு காத்திருக்கிறது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ip cam / cctv 解決方案. Simay yacht charter. Mets vs red sox predictions, odds, line, start time, 2025 mlb.