நெல்லை மழை வெள்ளம்: சரியான தருணத்தில் கைகொடுத்த கலைஞரின் நதி நீர் இணைப்புத் திட்டம்!
தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், தாமிரபரணி உள்பட அங்குள்ள நதிகளில் வெள்ள நீர் கரைபுரண்டோடுகிறது. இந்த நிலையில், முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் கனவுத் திட்டமான தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, வெள்ள நீரை வறண்ட பகுதிகளுக்கு மடைமாற்ற மிக சரியான நேரத்தில் அத்திட்டம் கைகொடுத்துள்ளது.
கலைஞரின் கனவுத் திட்டம்
கடந்த 2006 ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், தாமிரபரணி ஆற்றிலிருந்து கடலில் உபரியாக கலக்கும் 13,758 மில்லியன் கன அடி வெள்ளநீரில், கன்னடியன் (தாமிரபரணியின் 3-வது) அணைக்கட்டில் இருந்து 2765 மில்லியன் கன அடி நீரை கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதிகளுடன் இணைக்கும் திட்டத்துக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது.
இத்திட்டத்தை நான்கு நிலைகளாக செயல்படுத்த ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், 21.02.2009 அன்று இத்திட்டப் பணிகள் கலைஞரால் துவக்கி வைக்கப்பட்டன. 2011ஆம் ஆண்டு வரை புயல் வேகத்தில் நடந்து வந்தது. 50 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், கலைஞரின் அந்த கனவு திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் இப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
முடுக்கிவிடப்பட்ட திட்டப் பணிகள்
நெல்லை மாவட்டத்தில் 67.075 கிலோ மீட்டர் நீளத்திற்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கிலோமீட்டர் நீளத்திற்கு வெள்ளநீர் கால்வாய் அமைக்கப்பட்டு வந்தது. முன்னதாக கடந்த மே மாதம் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன், நதி நீர் இணைப்புத் திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். முதலாவதாக தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு நதிநீர் இணைப்புத் திட்டப் பணிகளில் மூன்றாவது நிலையாக நடந்து வந்த நாங்குநேரி அருகே உள்ள கோவன்குளம் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வுப் பணி மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து நதிநீர் இணைப்பு திட்டத்தின் கடைசி பகுதியான தூத்துக்குடி மாவட்டம் எம். எல்.தேரி பகுதியிலும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் நெல்லை பொன்னாக்குடியில் நான்கு வழி சாலையின் குறுக்கே நதிநீர் இணைப்பு திட்டத்திற்காக கட்டப்பட்டு வந்த பாலப் பணிகளை பார்வையிட்டார்.
அப்போது, வரும் செப்டம்பர், அக்டோபர் மாதம் மழை காலங்களில் இந்த திட்டத்தின் வாயிலாக தண்ணீர் கொண்டு செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
முடிவடைந்த திட்டம்
தற்போது, முதல் மூன்று நிலைகளுக்கான பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு நான்காவது நிலைப்பணிகளும் முடியும் தருவாயில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டத்தில் 67.1 கி.மீ நீளத்துக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் 8.10 கி.மீ நீளத்துக்கும், ஆக மொத்தம் 75.2 கி.மீட்டர் நீளத்துக்கு வெள்ளநீர்க் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, மேற்கூறிய நதி நீர் இணைப்புத் திட்டத்தின் கீழ், உபரிநீரை வறண்ட பகுதிகளுக்கு கொண்டு செல்வது குறித்து, நீர்வளத்துறை அமைச்சரிடமும் நீர்வளத்துறை அலுவலர்களுடனும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்தாலோசித்தார். இந்த ஆலோசனையின் போது எடுக்கப்பட்ட முடிவின்படி, கன்னடியன் வெள்ளப்பெருக்கு கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு சோதனை ஓட்ட மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார்.
திறக்கப்பட்ட உபரி நீர்
அதன்படி வெள்ளாங்குழி தலை மதகு பகுதியில் இருந்து வெள்ள நீர் கால்வாயில் வெள்ளோட்டம் பார்க்கும் வகையில் முதன்முறையாக வெள்ளப்பெருக்கு உபரி நீர் திறக்கப்பட்டது. அதனை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதன் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளில் வாழும் விவசாயிகளின் நூற்றாண்டு கனவான இத்திட்டம் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், அவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாது தொடர் மழை காரணமாக தாமிரபரணி நதியின் வெள்ள உபரி நீரை மடைமாற்றம் செய்யவும் மிகச் சரியான நேரத்தில் இத்திட்டம் கைகொடுத்துள்ளது.
இத்திட்டத்தினால் 17,002 ஹெக்டேர் புதிய பாசனப் பரப்பு உட்பட 23,040 ஹெக்டேர் நிலங்கள் (56933 ஏக்கர்) பாசன உறுதி பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் தூத்துக்குடி மாவட்டத்தில் திருவைகுண்டம், திருச்செந்தூர் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளும் பயன்பெறும். திருநெல்வேலி மாவட்டத்தில் 32 கிராமங்கள், 177 குளங்களும், தூத்துக்குடி மாவட்டத்தில் 18 கிராமங்கள், 75 குளங்களும் பயன்பெறும் என மதிப்பிடப்பட்டுள்ளது.