பெண்களின் திருமண வயது 21 ஆக உயரும்..? – சாதக பாதகங்கள்…
இந்தியாவில், கடந்த 2006 ஆம் ஆண்டு குழந்தைகள் திருமண தடைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி, ஆண்களின் குறைந்தபட்ச திருமண வயது 21, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வயதிற்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க அதிகாரம் உள்ளது.
இந்த நிலையில், ஆண்களைப் போல பெண்களின் திருமண வயதையும் 21 ஆக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 2021-ஆம் ஆண்டு குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த திருத்த மசோதா, ஆய்வுக்காக நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
இதுகுறித்த ஆய்வுகள் இன்னும் முடியாத நிலையில், 17 ஆவது மக்களவை காலாவதியானது. தற்போது மத்தியில் புதிய அமைச்சரவை உள்ள நிலையில், மீண்டும் இந்த விவகாரத்தை நாடாளுமன்ற நிலைக்குழு கையில் எடுக்கிறது. வருகிற 22 ஆம் தேதி அன்று இது குறித்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தையும் நடத்த உள்ளது.
திருமண வயது, பெண்களுக்கான பிற சட்டங்கள், குழந்தைகளின் கல்வி, இளம் வயதினர் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. மசோதா காலாவதியாகி விட்டாலும், பிரச்னையை மீண்டும் எடுத்துக் கொள்வதில் எந்த தடையும் இல்லை என்பதால், இந்த மசோதா மீண்டும் தாக்கலாக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
சாதக, பாதகங்கள் என்ன?
இந்த நிலையில், இம்மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டால், பெண்களின் திருமண வயது 21 ஆக உயர்ந்து விடும். அப்படி உயர்ந்தால், அது பெண்களுக்கு சாதகமாகவும் இருக்கும், பாதகமாகவும் இருக்கும் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
“மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்ப, பெண்கள் பொருளாதார ரீதியாக தங்களது சொந்த காலில் நிற்பது அவசியமாக உள்ளது. அதற்கு உயர் கல்வி தேவை. பல குடும்பங்களில் 18 வயது ஆகிவிட்டாலே, தங்களது கடமையை நிறைவேற்றி விட வேண்டும் என்ற ரீதியில் பெற்றோர், தங்களது பெண் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்து விடுகின்றனர். இது அவர்களது எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும். மேலும், 18 வயதில் உடல் ரீதியாக பல பெண்கள் தயாராக இருந்தாலும், மன ரீதியாக பெரும்பாலும் முதிர்ச்சி அடையாமலே உள்ளனர்.
இத்தகைய சூழலில், திருமண வயது உயர்ந்தால் உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கை உயரும். உடல் ரீதியாகவும் அவர்கள் பக்குவமடைந்து இருப்பார்கள். அது பெண்களுக்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த சமுதாயத்துக்கும் நல்லதாக அமையும்’ என்கிறார்கள் பெண் ஆர்வலர்களில் ஒரு தரப்பினர்.
மருத்துவர்கள் தரப்பில், “நம் நாட்டைப் பொறுத்தவரை, திருமணம் முடிந்தவுடன் குழந்தைப்பேறு என்று எதிர்பார்ப்பதால், பெண்களின் திருமண வயதை 21 என்று உயர்த்துவது மருத்துவ ரீதியில் நல்லது. 20 வயதுக்கு முன்னர் திருமணமாகி கருத்தரித்தால், தாய்க்கும் சேய்க்கும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையில் ஆரம்பித்து உயிர் ஆபத்து வரைக்கும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம்” என்கிறார்கள்.
அதே சமயம் சமூக ஆர்வலர்களோ, ” ஒருவேளை இந்தச் சட்டம் அமலுக்கு வந்தால், காதலுக்கு எதிரானவர்கள் வயதைக் காரணம் காட்டி காதலர்களை மிக மோசமாக நடத்த ஆரம்பிப்பார்கள். மேலும், சட்டபூர்வ திருமண வயது அதிகரித்துவிட்டால், கருக்கலைப்பு பிரச்னைகள் அதிகரிக்கலாம். இது பெண்களின் உயிருக்கே ஆபத்தாகலாம்.
இதில் பரம்பரை காரணமாக மிக இளவயதிலேயே பருவமடையும் பெண்களும் உண்டு. அப்படியான பெண்கள் 21 வயது வரை காத்திருக்கச் செய்வது அவர்களது திருமண உரிமையில் தலையிடுவதாகவும் அமைந்துவிடும். அதுமட்டுமல்லாது பல ஏழைக்குடும்பங்களில், குறிப்பாக பழங்குடியினர் போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்களிடையே 18 வயதில் பெண்களைத் திருமணம் செய்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. அப்படியானவர்கள் மீது 21 வயது சட்டத்தைக் காட்டி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானதாக இருக்கும்.
அனைத்துப் பெண்களுக்கும் கல்வியும் வேலைவாய்ப்பும் பெறுவதை சாத்தியப்படுத்தினாலே, பெண்ணின் திருமண வயது தானாகவே அதிகரித்துவிடும். இதற்காக தனியாகச் சட்டம் தேவையில்லை. தங்களது திருமண வயதைப் பெண்களே முடிவு செய்யட்டும். அரசாங்கம் அதில் தலையிட அவசியமில்லை” என்கிறார்கள்.