சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வெற்றியைத் தொடர்ந்து, சர்வதேச முதலீடுகளை மேலும் ஈர்க்கும் விதமாக, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில், தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை, வருகிற 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் ( ஒரு லட்சம் கோடி) அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக மாற்றுவதற்கான இலக்கை, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். அதன் அடிப்படையில், தொழில்துறையில் பல்வேறு பிரிவுகளில் முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் கடந்த 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு (GIM2024) நடைபெற்றது.
இந்த மாநாட்டின் மூலம் ரூ.5.50 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அந்த இலக்கையும் தாண்டி, மொத்தம் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 26 லட்சத்து 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தின் அடுத்தகட்ட பாய்ச்சல்
இந்த மாநாட்டிற்கு கிடைத்த வெற்றியினால் உற்சாகமடைந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அடுத்த இலக்கை நோக்கி பயணிக்க திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாகவே தமிழகத்துக்கு மேலும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அடுத்தடுத்த நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார். அந்த வகையில், சர்வதேச முதலீடுகளை மேலும் ஈர்ப்பதற்கான அடுத்தகட்ட பாய்ச்சலாக, சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்ற கூட்டத்தில் ( World Economic Forum 2024 ) , தமிழக அரங்கு திறக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் டாவோஸில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த கூட்டத்தில்,பல்வேறு நாடுகளிலிருந்து அரசு பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தங்கள் நாட்டில் முதலீடு செய்வதற்கு ஏற்ற உகந்த சூழல் எவ்வாறு உள்ளது, தொழில் தொடங்குவதற்கான சிறந்த உட்கட்டமைப்புகள் எவ்வாறு உள்ளன என்பதையெல்லாம் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ளும் விதமாக அரங்குகள் அமைப்பது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான கூட்டம் நேற்று 15 ஆம் தேதி தொடங்கி வருகிற 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில், பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று கலந்துரையாட உள்ளனர். இந்த நிலையில், டாவோஸில் நடக்கும் உலகப் பொருளாதார மன்ற கூட்டத்திற்கு
தமிழக அரசின் சார்பில் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தலைமையிலான குழுவினர் சென்றுள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள தமிழக அரங்கை டி.ஆர்.பி ராஜா திறந்து வைத்தார்.
இது தொடர்பாக அவர் தனது X தளத்தில், “உலக பொருளாதார மன்ற 2024 கூட்டத்தில் நமது மாநிலத்தின் அபரிமிதமான திறமைகள், சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் முற்போக்கான கொள்கைகளை உலகின் முன்னணி பிசினஸ் தோழமைகளுக்கு நாம் வெளிப்படுத்துவதால், தமிழ்நாடு முக்கிய இடத்தைப் பிடிக்கும். நாம், நமது தொழில்துறை திறமையைக் கொண்டாடும் அதே வேளையில், நமது கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டாட விரும்புகிறோம்
எனவே இந்த ஆண்டு பொங்கல், டாவோஸில்…
டாவோஸில் உள்ள எங்கள் பெவிலியனில் அறுவடைத் திருநாள் விழாவை நாங்கள் கொண்டாடும் போது, எங்களுடன் கைகோர்க்க தமிழ்நாடு உங்களை ( முதலீட்டாளர்களை ) அழைக்கிறது. நீங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும்போது, நீங்கள் எப்படி லாபத்தை அறுவடை செய்யலாம் என்பதை நாங்கள் உங்களுக்கு விளக்குகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசின் இந்த முன்னெடுப்பு மூலம், டாவோஸ் உலகப் பொருளாதார மன்ற கூட்டமும் வரும் நாட்களில் தமிழ்நாட்டுக்கு மேலும் அதிக முதலீடுகளைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.