கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இன்று 3 ஆவது நாளாக நீடித்து வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் 240 பேரை காணாததால் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
மீட்பு பணி தீவிரம்
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் உள்ள முண்டக்கை பகுதியில் 3,000 க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் குழுவுடன் மிகப்பெரிய தேடுதல் பணி நடந்து வரும் நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை துல்லியமாக கண்டறிய, அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
அதேபோன்று சூரல்மலையில், நிலச்சரிவின் இடிபாடுகளில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணியை மீட்பு படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதுவரை நிலச்சரிவு இடிபாடுகளில் புதையுண்ட 79 ஆண்கள், 70 பெண்கள் மற்றும் 23 குழந்தைகள் உட்பட 173 உடல்களை மீட்பு குழுவினர் மீட்டுள்ளனர். அவர்களில் 94 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 128 சடலங்களுக்கு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
பேரிடர் பாதித்த பகுதியில் மீட்புப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் மாநில வருவாய்த்துறை அமைச்சர் கே.ராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகள் இன்னும் இறுதி செய்யவில்லை. ஆரம்பத்தில், காணாமல் போனவர்களை அடையாளம் காண வாக்காளர் பட்டியலைப் பயன்படுத்தினோம். ஆனால், அதில் குழந்தைகளின் விவரங்கள் இல்லாததால், தற்போது ரேஷன் கார்டு மற்றும் பிற விவரங்களை நம்பியுள்ளோம். ரேஷன் கார்டு விவரங்களை சரிபார்த்து, ஆஷா பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் உதவியுடன் காணாமல் போனவர்களை அடையாளம் காண முயற்சித்து வருகிறோம்”என்றார்.
கைகோர்த்த ராணுவம், விமானப்படை
இந்த நிலையில், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் கைகோர்த்துள்ளனர். காயம் அடைந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட அனைத்து இடங்களிலும் சேறும், சகதியும் நிறைந்து இருப்பதால், மீட்பு பணியில் பெரும் சவாலாக இருப்பதாக மீட்பு பணியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். சூரல்மலையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைய உள்ளன.
முண்டக்கை பகுதியில் நிலச்சரிவால் தகர்ந்த வீடுகளில் இருந்து உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் முண்டக்கையில் மீட்கப்படும் உடல்கள் சூரல்மலைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே சூரல்மலை- முண்டக்கை இடையே இரும்பு பாலம் அமைக்கும் பணியில் ராணுவ பொறியாளர்கள் ஈடுபட்ட நிலையில், அப்பணி முடிவவடையும் தருவாயில் உள்ளது. நேற்று உள்ளூர் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகமாகி அங்கிருந்த தற்காலிக பாலம் அடித்துச் செல்லப்பட்டதால், அருகிலுள்ள நகரமான சூரல்மலையிலிருந்து பாதிக்கப்பட்ட பகுதியான முண்டக்கை பகுதிக்கு கனரக உபகரணங்களை கொண்டு செல்வதற்காக 190 அடி உயரத்திலான பாலம் அமைக்கப்படுகிறது. மேலும் விமானப்படையும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
முதலமைச்சர் நேரில் ஆய்வு
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் வயநாடு வந்தடைந்த நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் அதிகாரிகளுடன் பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் மீட்பு பணிகளை முடுக்கிவிட்டார்.
ராகுல் காந்தி வருகை
அதேபோன்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் இன்று காலை டெல்லியில் இருந்து வயநாடு வந்தடைந்தனர். அவர்கள் அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளைப் பார்வையிட்டு நிலைமையை நேரில் ஆய்வு செய்வதோடு, முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற இருக்கின்றனர்.