Amazing Tamilnadu – Tamil News Updates

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சொல்லி அடித்த திமுக… சோர்ந்துபோன எதிர்க்கட்சிகள்!

பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே, அதில் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றாலும், இந்த முறை விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக மிக உக்கிரத்துடன் களமிறங்கியது. கூடவே தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில், அக்கட்சியின் வாக்குகளுக்காக அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முட்டி மோதியதும், தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் திமுக காட்டிய தீவிரமும் தேர்தல் களத்தைச் சூடாக்கியது.

உக்கிரத்துடன் களமிறங்கிய பாமக

இந்த நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்ற தொகுதியில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாமக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது, அக்கட்சிக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகவே, இந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் கட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்ற எண்ணத்தில், ‘இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை’ என்ற தனது கொள்கையைத் தளர்த்திக்கொண்டு களம் இறங்கியது. முன்னதாக கூட்டணி கட்சியான பாஜக-விடமும் தனது நிலைப்பாட்டை விளக்கி, இந்த இடைத்தேர்தலில் தாங்களே போட்டியிடுவதாக கூறி, அதன் ஆதரவையும் பெற்றது.

அதிமுக ஆதரவை கோரிய அன்புமணி

அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்த நிலையில், அக்கட்சியின் வாக்குகளை தங்கள் பக்கம் வளைக்கும் எண்ணத்தில் அதன் முக்கிய நிர்வாகிகளை பாமக-வினர் சமுதாய ரீதியாக அணுகி, உருக்கத்துடன் ஆதரவு கோரியதாக கூறப்பட்டது. அதுமட்டுமல்லாது, பாமக பிரசார பொதுக்கூட்ட மேடைகளில் ஜெயலலிதாவின் பேனரும் வைக்கப்பட்டு, அதிமுக-வினர் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் அன்புமணி ராமதாஸ். இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த எதிர்ப்பு பெரிய அளவில் காட்டப்படவில்லை. மேலும், டெல்லியிலிருந்து பாஜக தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டதாலேயே அதன் கூட்டணி கட்சியான பாமக-வுக்கு ஆதரவாக, அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொண்டதாக திமுக தரப்பில் வைக்கப்பட்ட குற்றச்சாட்டும் அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியது.

முட்டி மோதிய நாம் தமிழர்

இன்னொருபுறம் நாம் தமிழர் கட்சியும் அதிமுக வாக்குகளைப் பெற பாமக-வுடன் முட்டி மோதியது. அக்கட்சித் தலைவர் சீமான், “அதிமுகவினர் எங்களுக்கு வாக்களிக்க வேண்டும்” என வெளிப்படையாகவே ஆதரவு கோரினார். “நம் பொது எதிரி திமுக தான். எத்தனையோ முறை கூட்டணியில் இல்லாவிட்டாலும் உங்களை ஆதரித்துள்ளேன். எனவே இம்முறை என்னை ஆதரியுங்கள்” என்று அவர் விடுத்த வேண்டுகோளும், கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி, அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்துக்கும் ஆதரவு தெரிவித்து அவர் வெளியிட்ட அறிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக தரப்பு அரண்டு போனது.

சொல்லி அடித்த திமுக

இந்த நிலையில் ஆளும் கட்சியான திமுக, ஏற்கெனவே வெற்றி பெற்ற தொகுதி என்பதாலும், நாடாளுமன்ற தேர்தலில், விழுப்புரத்தில் வெற்றி பெற்ற வி.சி.க., விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில், அதிமுக பெற்றதை விட, சுமார் 6,800 ஓட்டுகள் அதிகம் பெற்றதாலும் இந்த முறையும் வெற்றி தங்களுக்கே என்பதில் மிக நம்பிக்கையுடன் களமிறங்கியது. ஆனாலும், வெற்றி வித்தியாசத்தின் வாக்குகள் அதிக அளவில் இருக்க வேண்டும், எதிர்க்கட்சி வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என கட்சித் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காட்டிய கண்டிப்பு, பொன்முடி தலைமையிலான அமைச்சர்கள் பட்டாளத்தை தீவிரமாக வேலை பார்க்க வைத்தது.

ஆனாலும், திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவமும், பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையான சம்பவமும் தேர்தலில் திமுக-வுக்கு பின்னடைவாக அமைந்துவிடுமோ என்ற இலேசான அச்சம் அக்கட்சியினரிடையே ஏற்படாமல் இல்லை.

சோர்ந்து போன எதிர்க்கட்சிகள்

ஆனால் விக்கிரவாண்டி வாக்காளர்களின் மன நிலை என்ன என்பது இன்று வெளியான தேர்தல் முடிவில் வெளிப்பட்டுவிட்டது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, 1 லட்சத்து 25,712 வாக்குகளுடன் அபார வெற்றி பெற்ற நிலையில், பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,589 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு 10,680 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் டெபாசிட்டை இழந்துள்ளார்.

கிட்டத்தட்ட 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக-வுக்கு கிடைத்துள்ள இந்த அபார வெற்றி, அக்கட்சியினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 ஆண்டுக்கால முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் உரிமைத் தொகை திட்டம், மகளிருக்கான இலவச பேருந்து பயணத் திட்டம், பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் மக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவைதான் திமுக-வுக்கு, குறிப்பாக பெண்கள் ஆதரவை அதிக அளவில் பெற்றுத்தந்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், 2019 முதல் திமுக-வுக்கு தேர்தல்களில் கிடைத்து வரும் இந்த தொடர் வெற்றி எதிர்க்கட்சிகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.

எடைபோட்டு தீர்ப்பளித்த வாக்காளர்கள்

இந்த நிலையில் இந்த தேர்தல் வெற்றி குறித்து மகிழ்ச்சி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகமே என்றும் எப்போதும் தேவை என்பதை இந்த இடைத்தேர்தலின் மூலமாக எடைபோட்டுச் சொல்லி இருப்பதாகவும், நேரகாலம் பார்க்காமல் உழைத்த உழைப்புக்கும், தினந்தோறும் உருவாக்கிக் கொடுத்த திட்டங்களுக்கும் மக்கள் தெரிவித்த நன்றியின் அடையாளமாகவே இந்த வெற்றியை தாம் பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.

திமுகவுக்கு கிடைத்துள்ள இந்த வெற்றியைப் பார்க்கும்போது, அவரது கூற்று உண்மைதான் என்று நிரூபணமாகி உள்ளது என்றே கூறவேண்டும்!

Exit mobile version