விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான திமுக வெற்றிபெறும் என்பது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், அக்கட்சி வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு கிடைத்த வாக்குகளின் எண்ணிக்கைதான் அதிமுக மேலிடத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
எடப்பாடி போட்ட கணக்கு
அந்த வகையில், இந்த முறை அதிமுக பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியும் சில கணக்குகளைப் போட்டே விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணித்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் முதல் 2024 நாடாளுமன்ற தேர்தல்வரை திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வரும் நிலையில், விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் தோல்வியடைந்தால், அது எடப்பாடியின் தலைமை பதவிக்கு நெருக்கடியாக அமைந்துவிடும். மேலும், விக்கிரவாண்டி தொகுதியில் மொத்தமுள்ள, 2 லட்சத்து 33,000 ஓட்டுகளில், 93,000 ஓட்டுகள் வன்னியர் சமுதாயத்தினருக்கும், 63,000 வாக்குகள் பட்டியலின மக்களுக்கும், 40,000 ஒட்டுகள் உடையார் சமுதாயத்தினருக்கும் உள்ளன.
இந்த நிலையில், ஒட்டுமொத்த வன்னியர் சமுதாய ஓட்டுகளும் பாமக- வுக்கு கிடைக்குமானால், அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிடும். அதே சமயம் இரண்டாவது இடத்திற்கு வந்தால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அக்கட்சி இடம்பெற்றுவிடும். எனவே, இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டே எடப்பாடி, தேர்தல் புறக்கணிப்பு முடிவை எடுத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. அதேபோன்று அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக-வும் இத்தேர்தலைப் புறக்கணித்தது.
எதிர்பார்த்து ஏமாந்த பாமக – நாம் தமிழர் கட்சி
அதிமுக-வின் தேர்தல் முடிவைத் தொடர்ந்து அக்கட்சியினர் வாக்குகளைப் பெற பாமக-வும் நாம் தமிழர் கட்சியும் முட்டிமோதின. “அதிமுக-வுக்காக கடந்த காலங்களில் நான் பிரசாரம் செய்திருக்கிறேன். நீங்கள் போட்டியிடவில்லை. எனவே, அந்த வாக்குகளை எங்களுக்குச் செலுத்துங்கள்’ எனப் பகிரங்கமாகவே ஆதரவு கோரினார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான். அதேபோன்று பாமக தேர்தல் மேடைகளிலும், பிரசாரத்திலும் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் புகைப்படங்களை வைத்து அதிமுக-வினர் வாக்குகளைப் பெற முயன்றது பாமக. ஆனால், தேர்தல் முடிவு இவ்விரு கட்சிகளுக்கும் ஏமாற்றத்தையே தந்தது.
திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,24,053 வாக்குகளைப் பெற்று 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட பாமக வேட்பாளர் சி. அன்புமணி 56,296 வாக்குகளை மட்டுமே வாங்கியிருந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டெபாசிட்டைப் பறிகொடுத்தார்.
திமுக-வுக்குப் போன அதிமுக வாக்குகள்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் பெற்ற வாக்குகள் 72,188. இதற்கு அடுத்தபடியாக, அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் 65,365 வாக்குகளைப் பெற்றார். இருவருக்குமான வாக்குகள் வித்தியாசம் சுமார் 6,500 என்ற அளவிலேயே இருந்தது. பாமக வேட்பாளர் 32,198 வாக்குகளும் , நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 8,352 வாக்குகளையும் பெற்றிருந்தனர்.
ஆனால், தற்போது நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா-வுக்கு இந்த தொகுதியில் 51,800 வாக்குகள் அதிகம் கிடைத்துள்ளது. அதிமுகவின் பாரம்பரிய வாக்குகளில் பெரும் பகுதி திமுகவுக்கு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. அதிமுக-வின் தேர்தல் புறக்கணிப்பால் வாக்குப்பதிவு குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வாக்குப்பதிவு சதவீதம் 82.4% ஐ தொட்டதால் அந்த எதிர்பார்ப்பு தகர்ந்து போனது.
சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது 14,000 புதிய வாக்காளர்கள் இருந்ததாக தேர்தல் தரவுகள் தெரிவிக்கின்றன. ஆனால், திமுக வேட்பாளருக்கான வெற்றி வித்தியாசம், புதிய வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது. மேலும், பாமக வேட்பாளரும் அதிமுகவின் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தலை விட 24,600 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.
மேலும், அக்கட்சியினர் ‘நோட்டா’வுக்கு வாக்களிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 814 வாக்குகள் மட்டுமே ‘நோட்டா’வுக்கு விழுந்ததால், எடப்பாடியின் தேர்தல் புறக்கணிப்பை அக்கட்சியினர் கண்டுகொள்ளவில்லை என்பதும் உறுதியாகி விட்டது. அந்த வகையில், எடப்பாடி போட்ட கணக்கு தப்பு கணக்காக ஆகிவிட்டது என்றே சொல்ல வேண்டும் என்கிறார்கள் தமிழக அரசியல் பார்வையாளர்கள்.