Amazing Tamilnadu – Tamil News Updates

விஜய்யின் முதல் ‘ரோடு ஷோ’: கோவையைத் தேர்வு செய்தது ஏன்?

மிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், அரசியல் களத்தில் தனது முதல் பெரிய பொதுவெளித் தோற்றமாக கோவையில் சனிக்கிழமையன்று ‘ரோடு ஷோ’ நடத்தி, தொண்டர்கள் மற்றும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களை ஒருங்கிணைத்து, கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில், சனி மற்றும் ஞாயிறு (ஏப்ரல் 26-27) ஆகிய இரு நாட்கள் தவெக-வின் பூத் கமிட்டி கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ரோடு ஷோ-வால் உற்சாகமான தொண்டர்கள்

அதன்படி, இதில் கலந்துகொள்வதற்காக சனிக்கிழமை காலை, சென்னையிலிருந்து தனி விமானத்தில் கோவை விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விஜய்யை வரவேற்க, ஆயிரக்கணக்கான தவெக தொண்டர்களும், அவரது ரசிகர்களும் குவிந்தனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், பெண்கள், குழந்தைகள் உட்பட சுமார் 2,000 பேர் விமான நிலைய வளாகத்தில் திரண்டனர்.

விஜய், தொண்டர்களை நோக்கி கையசைத்து, அவர்களின் உற்சாகத்திற்கு பதிலளித்தார். அங்கிருந்து தொடங்கிய அவரது ‘ரோடு ஷோ’, கோவை வீதிகளில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொண்டர்களையும் ரசிகர்களையும் கட்டுப்படுத்த காவல்துறையினர் பெரும் சிரமப்பட்டனர்.

கோவை ஏன் தேர்வு செய்யப்பட்டது?

கோவை, தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டமாகும். தொழில் மையமாகவும், பல்வேறு சமூக மற்றும் அரசியல் இயக்கங்களின் மையமாகவும் திகழும் கோவை, தவெக-வின் அரசியல் பயணத்திற்கு நல்லதொரு தொடக்கத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியினர் கருதுகின்றனர்.

மேலும், மேற்கு மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகியவை திமுக, அதிமுக, பாஜக போன்ற கட்சிகளுக்கு வலுவான தொகுதிகளாக இருந்தாலும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் விஜய்யின் செல்வாக்கு இப்பகுதியில் அதிகம். எனவே தான், இந்த மாவட்டங்களில் தவெக-வின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதற்கு கோவை மையப் புள்ளியாக தேர்வு செய்யப்பட்டதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசியல் முக்கியத்துவம்

விஜய்யின் இந்த முதல் ‘ரோடு ஷோ’, 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. தவெக-வை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவதற்கு, விஜய் தனது திரைப்படப் புகழை அரசியல் செல்வாக்காக மாற்ற முயல்கிறார். கோவையில் தொடங்கிய இந்த பயணம், மேற்கு மாவட்டங்களில் கட்சியின் அமைப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியமானது. பூத் கமிட்டி கருத்தரங்கு, தொண்டர்களுக்கு தேர்தல் பணிகளில் பயிற்சி அளிப்பதுடன், உள்ளூர் பிரச்னைகளைப் புரிந்துகொள்ளவும் உதவும்.

மக்கள் ஆதரவு மற்றும் எதிர்பார்ப்பு

விஜய்யின் வருகை, கோவையில் அரசியல் பரபரப்பை அதிகரித்துள்ளது. அவரது ரசிகர்களிடையே மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் விஜய்யின் வருகை கவனத்தை ஈர்த்துள்ளது. ஆயினும் வருங்காலத்தில் விஜய்யின் அரசியல் நிலைப்பாடு, கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பிரச்னைகளில் அவர் காட்டும் அக்கறை மற்றும் அவரது ஆளுமைத்திறன் ஆகியவற்றைப் பொறுத்தே மக்களின் ஆதரவு வெளிப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அந்த வகையில், திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றின் ஆதிக்கத்தை உடைத்து, தவெக-வை ஒரு முக்கிய சக்தியாக மாற்றுவது என்பது விஜய்க்கு பெரும் சவாலாகவே இருக்கும். இருப்பினும், கோவையில் நடந்த இந்த ‘ரோடு ஷோ’, விஜய்யின் அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version