Site icon Amazing Tamilnadu – Tamil News Updates

அக்டோபரில் தவெக மாநாடு… ‘வாகை சூட’ கட்சியினருக்கு விஜய் அழைப்பு!

ரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த திட்டமிட்டிருந்தார்.

இந்த மாநாட்டில் அவர் அறிவிக்கப்போகும் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்துதான் அவரது கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என்பதால், அது குறித்த ஆர்வம் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இந்த மாநாட்டிற்கு காவல்துறையிடமிருந்து அனுமதி பெறுவதில் திடீர் இழுபறி ஏற்பட்டது. மாநாட்டுக்கு அனுமதி கோரி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். இதனையடுத்து, காவல்துறை தரப்பில் 21 கேள்விகளை எழுப்பி, பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அந்தக் கேள்விகளுக்கான பதில் அடங்கிய மனுவை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல்துறையிடம் வழங்கினார்.

இதனையடுத்து, 33 நிபந்தனைகளுடன் மாநாட்டை நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால், மாநாட்டுக்கான தேதியை விஜய் எப்போது அறிவிப்பார் என அவரது கட்சியினர் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார் கட்சித் தலைவரான விஜய்.

இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை இங்கே…

” என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே,

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் தேதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி (27.10.2024), மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

தமிழக மக்களின் மனங்களைத் தீர்க்கமாக வெல்லும் நோக்கில் அமையவுள்ள மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் ஏற்கெனவே நடந்துவரும் நிலையில், அதற்கான களப்பணிகளும் தொடங்கப்பட உள்ளன என்பதையும் உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.

இந்த மாநாட்டில் இருந்து வலிமையான அரசியல் பெரும்பாதையை அமைப்போம்!

இந்நிலையில், நமது முதல் மாநில மாநாட்டை எல்லா வகையிலும் வெற்றிகரமாக நடத்துவதற்காக, தமிழ்நாட்டு மண்ணைச் சேர்ந்த மகனாக, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் ஆதரவையும் ஆசிகளையும் உரிமையுடன் வேண்டுகிறேன்.

விரைவில் சந்திப்போம்!!

வாகை சூடுவோம்!!” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version