கடந்த அக்டோபர் 27 ஆம் தேதியன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் பேசிய அக்கட்சித் தலைவர் நடிகர் விஜய், திமுக-வை மறைமுகமாக விமர்சித்திருந்தார். குறிப்பாக ‘ அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயசமா..?” என பாஜக மீதான திமுக-வின் விமர்சனத்தைக் கிண்டலடித்தது பேசு பொருளானது.
இதற்கு திமுக தரப்பில் அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களே ரியாக்ட் செய்திருந்த நிலையில், அது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எதுவும் கூறாமல் இருந்தார். இந்த நிலையில் தவெக மாநாட்டைத் தொடர்ந்து, அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நேற்று தவெக செயற்குழு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நேற்று சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடந்தது. இதில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகள் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 26 தீர்மானங்களில், திமுக மற்றும் திமுக அரசை விமர்சித்தும் பல தீர்மானங்கள் இடம்பெற்றிருந்தன.
முதலமைச்சரின் ‘அண்ணா’ பாணி பதிலடி
இந்த நிலையில் தான், தவெக-வின் இத்தகைய விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், சென்னை கொளத்தூர் பகுதியில் இன்று நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தேர்தல் நேரத்தில் முன்மொழிந்த அனைத்து வாக்குறுதிகளையும் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டு இளைஞர்களை எல்லா நிலைகளிலும் தகுதி உடையவர்களாக மாற்றுவது தான் திராவிட மாடல் அரசின் லட்சியம். அதற்கான திட்டங்கள் தான் இவை எல்லாம். ஆனால், நம் ஆட்சி எதுவும் செய்யவில்லை என குறை கூறுபவர்கள், நம் திட்டங்களை பார்க்க வேண்டும்.
ஆனால், யார் யாரோ, வருகிறவர்கள் எல்லாம், புதுசா புதுசா கட்சி தொடங்கிறவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என்ற நிலையில்தான் இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் திமுக அரசு செய்த சாதனைகளை எண்ணிப் பாருங்கள்.
இந்த நேரத்தில் அண்ணாவின் ஒரு வாக்கியத்தை நினைவுப் படுத்துகிறேன் ‘வாழ்க வசவாளர்கள்…’ உங்களின் வசைச் சொற்களுக்கெல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம்.
எதை பற்றியும் நாங்கள் கவலைப்படப்போவதில்லை. எங்களுடைய போக்கு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான். மக்களுக்கு பணியாற்றவே நேரம் கிடைக்கவில்லை. எந்த நம்பிக்கையில் எங்களை நம்பி ஆட்சியை ஒப்படைத்தீர்களோ, அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற காத்திருக்கிறோம் ” எனக் கூறினார்.
அவரது இந்த பேச்சு, விஜய்யின் திமுக மீதான விமர்சனத்துக்கு கொடுக்கப்பட்ட முதல் பதிலடியாகவே பார்க்கப்படுகிறது.