Amazing Tamilnadu – Tamil News Updates

“2026 ல் தவெக- திமுக இடையே மட்டுமே போட்டி” – அதிமுக-வை ஓரம் கட்டிய விஜய்யின் தீப்பொறி பேச்சு!

சென்னையில் இன்று நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் ஆற்றிய உரை, தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் மு.க. ஸ்டாலினையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பெயர் குறிப்பிட்டு விமர்சித்த விஜய், 2026 தேர்தல் தவெக-திமுக இடையேயான போட்டியாக மட்டுமே இருக்கும் என்று துணிச்சலாக அறிவித்தார். இதோ விஜய்யின் தீப்பொறி பேச்சு…

மக்களை மையப்படுத்திய தொடக்கம்

“என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் என்னுடைய வணக்கம். தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என விஜய் தனது பேச்சை உணர்ச்சிகரமாக தொடங்கினார்.

தமிழகத்தின் இன்றைய சூழலில் புதிய வரலாறு படைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய அவர், “அரசியல் என்றால் ஒவ்வொரு குடும்பமும் நல்லா வாழ வேண்டும். ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழகத்தை சுரண்டி கொழுக்க வேண்டும் என்பது அரசியல் இல்லை” என்று திமுகவின் ஆட்சியை மறைமுகமாக சாடினார்.

திமுக மீது கடும் தாக்குதல்

விஜய்யின் மைய விமர்சனம் திமுகவை நோக்கி இருந்தது. “மன்னராட்சி முதல்வர் அவர்களே, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே, பெயரை மட்டும் வீராப்பாக சொன்னால் பத்தாது. செயலிலும் ஆட்சியிலும் காட்டுங்கள்” என்று நேரடியாக ஸ்டாலினை தாக்கினார். “காட்சிக்கு திராவிடம், ஆட்சிக்கு திராவிட மாடல் என்று மக்களை மடைமாற்றுகிறீர்கள். மக்கள் ஆட்சியை மன்னர் ஆட்சியாக நடத்துகிறீர்கள்” என்று குற்றம்சாட்டிய அவர், “நேத்து வந்தவன் முதல்வராக முடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியெனில் ஏன் எங்களுக்கு நெருக்கடி கொடுக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய அரசுக்கு எச்சரிக்கை

பாஜகவை விமர்சிக்க பயப்படவில்லை என்று தெளிவுபடுத்திய விஜய், “ஒரே நாடு ஒரே தேர்தல் என நீங்கள் ஸ்டார்ட் செய்யும்போதே புரிஞ்சிடுச்சு பிரதமர் சார். திரு மோடி அவர்களே, தமிழ்நாட்டில் இருந்து ஜிஎஸ்டி வாங்கிக் கொள்கிறீர்கள். ஆனால் நிதி கொடுக்க மறுக்கிறீர்கள். படிக்கிற குழந்தைகளுக்கு நிதி தர மாட்டேன் என்கிறீர்களா? தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக கையாளுங்க சார்” என்று மோடியை பெயர் குறிப்பிட்டு விமர்சித்தார். “தமிழ்நாடு பலருக்கு தண்ணீர் காட்டிய ஸ்டேட்” என்று பெருமையுடன் கூறி, மாநில உரிமைகளை வலியுறுத்தினார்.

தவெகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி

“இதுவரை தமிழகம் காணாத ஒரு தேர்தலை அடுத்தாண்டு சந்திக்கப் போகிறோம். தவெகவுக்கும் திமுகவுக்கும் மட்டுமே போட்டி” என்று விஜய் தைரியமாக அறிவித்தார். “அணை போட்டு ஆற்றை தடுக்கலாம், காற்றை தடுக்க முடியாது. தடுத்தால் அது சூறாவளியாக, புயலாக மாறும்” என்று ஆட்சியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த அவர், தவெகவின் தேர்தல் சுனாமியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

கட்சியினருக்கு அறிவுறுத்தல்

“தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தெரியவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை மாற்ற இப்போதைய ஆட்சியை மாற்ற வேண்டும்” என்று கூறிய விஜய், “தவெக தொண்டர்கள் வீடு வீடாக சென்று மக்களை சந்திக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தவெக கொடி பறக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் போராட்டங்களுக்கு துணை நிற்போம்” என்று மக்கள் நலனில் தவெகவின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

எதிர்க்கட்சி இடத்தில் தவெக

விஜய்யின் பேச்சு, தமிழக அரசியலில் அவரது கட்சியின் எதிர்கால நகர்வு என்ன என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது. திமுகவை நேரடியாகவும், பாஜகவை தெளிவாகவும் விமர்சித்த அவர், அதிமுகவை குறிப்பிடாமல் விட்டது தமிழக அரசியல் களத்தில் திமுகவை எதிர்க்கும் இடத்தில் இருந்து அதிமுகவை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தவெக-வைக் கொண்டு வந்து நிறுத்தும் உத்தியாகவே அமைந்துள்ளது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எல்லாவற்றுக்கும் பதில் சொல்லப்போவது 2026 தேர்தல் தான்!

Exit mobile version