Amazing Tamilnadu – Tamil News Updates

தவெக கொடி ஆக. 22 ல் அறிமுகம்? – கட்சி அலுவலகத்தில் விஜய் ஒத்திகை!

டிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் புது அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் தற்போது நடித்து வரும் ‘ தி கோட்’ (The Greatest Of All Time) திரைப்படம் வரும் செப். 5 ஆம் தேதியன்று வெளியாக உள்ளது. இதையடுத்து, விஜய் இன்னும் ஒரே ஒரு திரைப்படத்தில் மட்டும் நடிக்க திட்டமிட்டு உள்ளார்.

அதன்பின் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு அவர் தயாராக இருப்பதால், தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் விஜய், கட்சியின் பொதுச்செயலர் புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.அதனைத் தொடர்ந்து,தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பயணம் எனப் பல்வேறு திட்டங்களுடன் விஜய் தயாராகி வருவதாக அவரது கட்சி வட்டாரங்கள் ஏற்கெனவே தெரிவித்திருந்தன.

22 ஆம் தேதி கட்சிக்கொடி அறிமுகம்?

இந்த நிலையில், விஜய்யின் அரசியல் பயணத்தின் முக்கியமான நடவடிக்கையாக வரும் 22 ஆம் தேதி அன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற உள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த கொடி அறிமுக நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்ட தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் 300 பேருக்கு மட்டும் அழைப்பு விடுத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே, சமூக வலைதளங்களிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி வைரலாகியுள்ளது. வாகை மலருக்குள் விஜய் உருவம் பொறித்த மஞ்சள் நிறத்தில் விஜய்யின் கட்சிக் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது.இருப்பினும், இதுதான் அதிகாரப்பூர்வ கொடியா என்பது இன்னும் உறுதியாகவில்லை.கொடி அறிமுகம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஏதுவாக, அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மஞ்சள் வேட்டி, மஞ்சள் சட்டை அணிந்து விரதம் இருந்து வருகிறார்.

கட்சி அலுவலகத்தில் விஜய் ஒத்திகை

இந்த நிலையில், கொடி ஏற்றும் நிகழ்வுக்கு ஒத்திகை பார்க்க நடிகர் விஜய் நேற்று பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தார்.அலுவலகம் வந்த விஜய், ஒத்திகை பார்க்கும் விதமாக அக்கட்சியின் கொடியை ஏற்றியதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக திருச்சியில் மாநாடு ஒன்றை நடத்த விஜய் திட்டமிட்ட நிலையில், என்ன காரணத்தினாலோ அது நடைபெறவில்லை. இதனால், சென்னையிலேயே மாநாடு ஒன்றை நடத்த விஜய் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த மாநாட்டுக்கு முன்னர், தன்னுடைய கட்சி கொடியை அறிவிக்க முடிவு செய்த காரணத்ததினாலேயே, வரும் 22 ஆம் தேதி அன்று, நடிகர் விஜய் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் கொடியை ஏற்றி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார்.

இதற்காக த.வெ.க கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில்,அதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

பிரேமலதாவுடன் சந்திப்பு

இதனிடையே ‘தி கோட் திரைப்படத்தில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறைந்த நடிகரும், தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம்பெற்று உள்ளதாக கூறப்படுகிறது. இதனை முறைப்படி தெரிவித்து, நன்றி தெரிவிப்பதற்காக நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் பிரேமலதா விஜயகாந்தை நேற்று நேரில் சந்தித்தனர். சந்திப்பின் போது தி கோட் படத்தில் விஜயகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகளை காண்பித்து, நன்றி தெரிவித்துக்கொண்டதாக கூறப்படுகிறது.

Exit mobile version