Amazing Tamilnadu – Tamil News Updates

“நாளை முதல் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்!” – அரசியல் ஆட்டத்தைத் தொடங்கும் விஜய்!

டந்த பிப்ரவரி மாதம், ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரில் புது அரசியல் கட்சியைத் தொடங்கிய நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தனது கட்சியைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார். இதனையொட்டி, தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் செப்டம்பர் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

அந்த வகையில், விஜய்யின் அரசியல் பயணத்தின் முக்கியமான நடவடிக்கையாக நாளை, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா நடைபெற உள்ளது. இந்த கொடி அறிமுக நிகழ்ச்சியில் தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மாவட்டத் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அவர்களும் சென்னை நோக்கி வரத்தொடங்கி உள்ளனர்.

முன்னதாக, கடந்த 19 ஆம் தேதியன்று விஜய், தனது பனையூர் கட்சி அலுவலகத்துக்கு வந்து, கொடி ஏற்றும் நிகழ்வுக்கு ஒத்திகை பார்த்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. வாகை மலருக்குள் விஜய் உருவம் பொறித்த மஞ்சள் நிறத்தில் விஜய்யின் கட்சிக் கொடி உருவாக்கப்பட்டு உள்ளது.

‘நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்’

இந்த நிலையில், நாளை ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சிக் கொடியை அறிமுகம் செய்யவுள்ள நடிகர் விஜய், கட்சிக் கொடிப் பாடலையும் வெளியிடுகிறார். இது தொடர்பாக அவர் இன்று தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், ” நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.

நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடிப் பாடலை வெளியிட்டு, கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதை மகிழ்வுடன் அறிவிக்கிறேன்.

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்; தமிழகம் இனி சிறக்கும்” என அறிக்கையில் குறிப்பிட்டு, நாளை காலை 9:15 மணிக்கு கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version