Amazing Tamilnadu – Tamil News Updates

கொடியைப் பறக்கவிட்ட விஜய்… தமிழக அரசியல் களத்தில் ஏற்படப்போகும் மாற்றம் என்ன?

டிகர் விஜய்யின் அரசியல் பயணத்தின் முக்கியமான நடவடிக்கையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா, சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கொடியை அறிமுகப்படுத்தி கொடிப்பாடலையும் நடிகர் விஜய் வெளியிட்டு உரையாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும், வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகை மலரும் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து த.வெ.க பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது. “தமிழர் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது” என்று தொடங்கும் பாடல், தமிழர்கள் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது. கவிஞர் விவேக் எழுதி உள்ள இந்த பாடல், விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினரிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

விரைவில் மாநாட்டு தேதி

கட்சிக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் பேசிய விஜய், “நான் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தேன். அப்போது முதல் கட்சி மாநாடு குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. தவெக முதல் மாநாடு குறித்து தகவலை உரிய நேரத்தில் அறிவிப்போம். இன்று மிகவும் சிறப்பான நாள். எனது தோழர்கள் மற்றும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் தமிழக வெற்றிக் கழக கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். தவெக மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. விரைவில் மாநாட்டுக்கான தேதி அறிவிக்கப்படும்.

ஒரு அரசியல் கட்சியாக தமிழக மக்களுக்காக உழைக்க தயாராவோம். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக நாம் அனைவரும் இணைந்து உழைப்போம். நம்பிக்கையாக இருங்க, நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.

புயலுக்குப் பின் அமைதி என்று கூறுவார்கள். அதுபோல இந்த கொடிக்குப் பின் வரலாறு உள்ளது. எங்கள் கட்சியின் கொள்கையைக் கூறும் போது, இந்த கொடிக்குப் பின் உள்ள வரலாறைக் கூறுவேன். இந்த கொடியை தமிழ்நாட்டின் வருங்கால வெற்றிக்கான கொடியாக பார்க்கிறேன்” என்றார்.

தமிழக அரசியல் களத்தில் என்ன மாற்றம் ஏற்படும்?

இன்றைய கொடி அறிமுக நிகழ்ச்சியைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தனது கட்சியைத் தயார்படுத்தும் நடவடிக்கைகளை விஜய் முழுவீச்சில் தொடங்கி விட்டதாகவே கருதப்படுகிறது. இதனால், வரும் நாட்களில் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

விஜய் உடன் கூட்டணி அமைக்க நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளிப்படையாகவே விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து அவர் இதுவரை இன்னும் வெளிப்படையாக எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. அதே சமயம் பெரும்பாலான முக்கிய கட்சித் தலைவர்களின் பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு விஜய் மறக்காமல் வாழ்த்து தெரிவித்து விடுகிறார். அதாவது, அனைத்து கட்சித் தலைவர்களுடன் ஒரு இணக்கமான போக்கையே கடைப்பிடிக்கிறார்.

இதனால், 2026 தேர்தலில் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும், கூட்டணி அமைப்பாரா, அப்படியே கூட்டணி அமைத்தாலும் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது குறித்த பல்வேறு எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே பாஜக உடன் கூட்டணியை முறித்துக்கொண்டுள்ள அதிமுக தரப்பிலும் 2026 தேர்தலில் விஜய் உடன் கூட்டணி அமைக்க ரகசிய பேச்சுவார்த்தைக்கு முயன்றதாகவும் ஒரு தகவல் வெளியானது. ஆனால், அந்த முயற்சியில் அடுத்தகட்ட நகர்வு குறித்த தகவல் எதுவும் இல்லாததால், விஜய் இதில் விருப்பம் காட்டவில்லை என்று தெரிகிறது. இதைத் தெரிந்துகொண்டதால் தான், அதிமுக தரப்பில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளை இழுக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது. குறிப்பாக காங்கிரஸ் மேலிடத்துடன் அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் திமுக தரப்பிலும், 2026 தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் வெல்ல வேண்டும் என வெளிப்படையாகவே முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட அக்கட்சியினர் பலரும் பேசி வருவது, காங்கிரஸ், இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளை யோசிக்க வைத்துள்ளது.

இந்த நிலையில் தான், தமிழக அரசியல் களத்தில் தனது கொடியைப் பறக்கவிட்டுள்ளார் விஜய். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் விரைவிலேயே அவரது கட்சியின் முதல் மாநாடு நடக்கப்போகிறது. அந்த மாநாட்டில் வெளியிடப்போகும் அறிவிப்புகள், கொள்கை, கோட்பாடுகள் மற்றும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் அடிப்படையிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்பது தெளிவாகும். கூடவே விஜய் உடன் மேடை ஏறப்போகும் மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் பொறுத்தும் தமிழக அரசியல் களத்தில் மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கலாம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

தமிழகத்தில் எம்ஜிஆர், விஜயகாந்த், சரத்குமார், டி.ராஜேந்தர், கமல்ஹாசன் வரிசையில் அரசியல் கட்சித் தொடங்கிய நடிகர்கள் பட்டியலில், லேட்டஸ்ட்டாக விஜய் இடம்பெற்றுள்ளார். இதில், எம்ஜிஆரைத் தவிர மற்றவர்கள் பெரிய அளவில் சோபிக்க முடியாத நிலையில், விஜய்யின் நிலை எப்படி இருக்கும் என்பதை வருங்காலம் தான் தீர்மானிக்கும்!

Exit mobile version