“புயலே அடித்தாலும்…” – நிர்வாகிகளிடம் விஜய் காட்டிய கறார்!
வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வெற்றிகரமாக நடக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு புறம் வாகனங்களை சிரமமின்றி நிறுத்திட செய்யப்படவுள்ள ஏற்பாடுகள் குறித்து விளக்கமாக தெரிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட மேலும் 5 கேள்விகளை அக்கட்சியிடம் காவல்துறை எழுப்பியுள்ளது. இதற்கான பதில்களைத் தயார் செய்யும் வேலைகளில் அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் த.வெ.க வட்டாரத்தில் உண்மையில் என்ன நடக்கிறது? மாநாடு வெற்றிகரமாக நடக்க வாய்ப்புள்ளதா?
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு, வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கிவிட்டது. ஆனால், மழையைப் பொருட்படுத்தாமல் மாநாட்டுப் பணிகளில் அக்கட்சியின் நிர்வாகிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாநாட்டு திடல் சேறும், சகதியுமாக மாறிவிட்டது.
இதே நிலை நீடித்தால் மாநாடு நடக்குமா என்ற சந்தேகம், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ஒருவரிடம் பேசினோம். அவர் கூறியது இங்கே அப்படியே…
“மாநாட்டுக்கு இன்னும் 12 நாள்கள் உள்ளன.அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து வருகின்றன.மாநாடு நடக்க உள்ள 27 ஆம் தேதி மழை பெய்வதற்கான வாய்ப்புகள் குறைவு என வானிலை ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.அப்படியே மழை பெய்தாலும் அதற்கு தகுந்தாற்போல ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.மழை பெய்தாலும் பெய்யாவிட்டாலும் மாநாட்டை நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.
மழை பெய்வதால் மாநாடு நடக்கும் இடத்தில் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை.மாநாட்டுப் பணிக்காக வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படக் கூடிய பள்ளங்கள் தான் உள்ளன. குளம் போல எங்கும் தேங்கி நிற்கவில்லை. ஆனால், மாநாட்டுக்கான இடம் சேதம் அடைந்துவிட்டதாக தகவல் பரப்புகின்றனர். ஒருவேளை மழை பெய்தால் தொண்டர்களும் பொதுமக்களும் நனையாமல் இருப்பதற்கான பணிகளும் நடந்து வருகிறது. இதுகுறித்து த.வெ.க தலைவரும் உரிய அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறார்.
‘மழை பெய்தாலும் புயல் அடித்தாலும் மாநாடு நடந்தே தீரும்’ எனக் கட்சி நிர்வாகிகளிடம் தலைவர் விஜய் உறுதியாக கூறிவிட்டார்.இதற்காக 800 பேரை மாநாட்டுக் குழுவில் நியமித்துள்ளார்.30 ஒருங்கிணைப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.’இது முன்மாதிரியான மாநாடாக இருக்க வேண்டும்’ என்பதை தலைவர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
விக்கிரவாண்டியில் மாநாடு நடத்தப்பட உள்ள வி.சாலையில் உள்ள தனியார் நிலம் என்பது 169 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. அங்கு வாகனங்களை நிறுத்துவதற்கு தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. மாநாடு நடக்கும் இடத்தில் 2 லட்சம் பேர் வரையில் இயல்பாக கூட முடியும்.வடக்கு மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் அதிகம்.மாநாடு நடக்கும் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் அதிகமாக திரள வாய்ப்புள்ளது.மாநாட்டின் பாதுகாப்புப் பணிக்கு என தனியாக 100 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தவிர தொகுதிக்கு ஏழு பேர் நியமிக்கப்பட்டுள்ளனா. அதில் இரண்டு பேர் பெண்களாக இருப்பார்கள்.மாநாட்டுக்கு அழைத்து வந்த பின்னர் அவர்கள் வீடு போய்ச் சேரும் வரையில் அந்த நிர்வாகிகள் தான் கவனித்து கொள்ள வேண்டும். அவர்களுக்கான உணவு, வாகன வசதிகள் என அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மாநாட்டில் மருத்துவப் பணியில் 50 டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் முக மலர்ச்சியோடு செல்ல வேண்டும் என்பதில் த.வெ.க தலைமை உறுதியாக உள்ளது” என்றார்.