அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், தவெக தலைவர் விஜய் உடன் வருகிற டிசம்பர் 6 அன்று ஒரே மேடையில் பங்கேற்க உள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இந்த நிலையில், இதை வைத்து தமது கட்சிக்கு எதிராக அரசியல் சதி வலை பின்னப்படுவதாக குற்றம் சாட்டி உள்ள திருமாவளவன், விஜய் பங்கேற்க இருப்பது குறித்து முன்னரே தெரியும் என இந்த விழா தொடர்பான பின்னணியை விளக்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள நீண்ட அறிக்கையில்,” அண்மைக் காலமாக அரசியலரங்கில் நம்முடைய நிலைப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து பொதுவெளியில் தொடர் உரையாடல்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு ஊகங்களின் அடிப்படையில் அவை நிகழ்கின்றன.
நம்மை ஆதரித்தோ எதிர்த்தோ ஊடகத்தளங்களில் பல்வேறு தரப்பினர் பேசி வருகின்றனர். அதாவது, அரசியலடிப்படையில் நாம் குறி வைக்கப்பட்டிருக்கிறோம். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. நாம் ஆளுங்கட்சி திமுக தலைமையிலான ‘மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்’ இடம் பெற்றிருப்பது ஒரு காரணம். அதுவே முதன்மையான காரணமாகும். இக்கூட்டணியைச் சிதறடிக்கத் திட்டமிடுவோர் நம்மை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர்.
2026-இல் நடைபெறவுள்ள சட்டமன்றப் பொதுத்தேர்தலிலும் இந்தக் கூட்டணி வெற்றிப் பெறுவதற்கு அவர்கள் எங்ஙனம் அனுமதிப்பர்? எப்படியாவது கூட்டணியைச் சிதறடித்து நமது வெற்றியைத் தடுக்க வேண்டுமென்பதுதான் அவர்களின் ஒற்றை நோக்கமாகும்.
சதிச் செயலின் நோக்கம்…
அவர்கள் வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு அடையாளங்களில் இயங்கினாலும் அவர்களின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியைச் சிதறடிப்பது மட்டும் தான்.
அத்தகைய சதிச் செயல்களுக்கு ஏராளமான சான்றுகள் உண்டு. குறிப்பாக, ‘மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாட்டையொட்டி, பரந்த பார்வையோடு பொதுநல நோக்கோடு, ‘அதிமுகவும் மதுஒழிப்பு மாநாட்டில் பங்கேற்கலாமே’ என நாம் கூறியதை, ஒரு சாக்காக வைத்துக் கொண்டு நமது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த எவ்வளவு வேகமாக களத்தில் இறங்கினர் என்பதை நாடறியும்.
அடுத்து, ‘ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு’ என்னும் நமது கால் நூற்றாண்டு கால கோரிக்கை முழக்கத்தை, கொள்கை நிலைபாட்டை ஒரு கருவியாக கையிலெடுத்து, நம்மை திமுகவுக்கு எதிராக நிறுத்தி உரசலை உருவாக்கிட பெரும்பாடுபட்டனர். அதனையும் மெல்ல நீர்த்துப்போகச் செய்தோம்.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா பின்னணி
தற்போது, தவெக தலைவரும் நடிகருமான விஜய்யோடு நாம் இணைந்து தேர்தல் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்கிற தோற்றத்தை உருவாக்கிட முனைகின்றனர்.
டிசம்பர் -06, புரட்சியாளர் அம்பேத்கர் நினைவுநாளன்று ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ என்னும் தொகுப்பினை ஓர் ஊடகப் பதிப்பகமும் ‘வாய்ஸ் ஆஃப் காமன்ஸ்’ என்னும் தேர்தல் வியூக நிறுவனமும் இணைந்து வெளியிடவுள்ளன. வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் (விஓசி) என்பது நமது கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் நிறுவனமாகும். 36 பேர்களின் கட்டுரைகளைப் பெற்று ஒரு நூலாகத் தொகுத்துள்ளனர். எனது விரிவான ஒரு நேர்காணலும் அதில் இடம்பெற்றுள்ளது.
இந்த நூலின் வெளியீட்டு விழா குறித்தும் பேசினர். அதில் நானும் பங்கேற்க வேண்டுமென்றும் கோரினர். முறைப்படி இசைவுகோரி மடல் எழுதுவோம் என்றும் கூறினர். எனவே, அப்போதே நான் அதில் பங்கேற்க இசைவளித்துவிட்டேன். அந்நிகழ்வில் பங்கேற்குமாறு முதல்வரும் நமது கூட்டணியின் தலைவருமான மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி, இந்து ராம், ஆனந்த் டெல்டும்டே போன்றோரை அழைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அப்போது தெரிவித்தனர்.
மாநாட்டுக்கு முன்பே விஜய்க்கு அழைப்பு
குறிப்பாக, நமது முதல்வர் வெளியிட தாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறினர். அப்போது நடிகர் விஜய்யும் நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்கவிருக்கிறார் என்பதை கூறினார். அப்போதைய சூழலில் நடிகர் விஜய்யின் கட்சி மாநாடு (அக்- 27) நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கட்சி சார்பற்ற பதிப்பகம் ஒருங்கிணைக்கும் ஒரு நூல் வெளியீட்டு விழாவிற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிப்பதும், நம்மீது சந்தேகத்தை எழுப்பி நமது நம்பகத்தன்மையை நொறுக்கிட முயற்சிப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. இது திட்டமிட்ட சூது! சனாதன சூழ்ச்சி! உணர்ச்சிகளைத் தூண்டி நம்மை நிலைகுலைய வைக்கும் சதி நிறைந்த முயற்சி!
மாற்றுக் கருத்து அல்லது முரண்பாடான நிலைப்பாடு கொண்ட இன்னொரு கட்சியின் தலைவரோடு ஒரு நூல்வெளியீட்டு விழாவில் பங்பேற்பதாலேயே நாம் அணி மாறிவிடுவோம் என்பது என்ன வகையான உளவியல்?
திட்டமிட்டே நம்மீது அய்யத்தை எழுப்புவோர் திமுகவுக்கு மட்டுமல்ல; விசிகவுக்கும் நமது கூட்டணிக்கும் பகையானவர்களேயாகும். அத்தகைய நயவஞ்சக சக்திகளின் நாசகார சீண்டலுக்கும் தூண்டலுக்கும் நாம் இரையாகிவிடக்கூடாது. தோழமை கட்சிகளோடு இணைந்து நாம் உருவாக்கிய கூட்டணியில்தான் தொடர்கிறோம்! உறுதியாகத் தொடர்வோம்! இதனை யார் புரிந்துகொண்டாலும் புரிந்துகொள்ளாவிட்டாலும் விடுதலைச் சிறுத்தைகள் தெளிவுற புரிந்துகொள்ள வேண்டும். குழப்பம் தேவையில்லை” எனத் தெரிவித்துள்ளார்.