Amazing Tamilnadu – Tamil News Updates

த.வெ.க மாநாட்டுக்கு சிக்கல்கள் தொடர்வது ஏன்? – விஜய்யின் ‘செப்டம்பர் 23’ சென்டிமென்ட்!

த.வெ.க என்ற பெயரில் கட்சி தொடங்கி ஆறு மாதங்களுக்குள், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் தொடங்கி தற்போது மாநாடு வரையில் தொடர் சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறார் நடிகர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழாவின்போது பேசிய நடிகர் விஜய், “புயலுக்கு பின்னே அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆரவாரம் இருப்பதுபோல, நம் கொடியின் பின்னணியிலும் ஒரு வரலாற்று குறிப்பு இருக்கிறது. முதல் மாநில மாநாட்டில் நமது கொள்கைகள், நம் செயல் திட்டங்கள் ஆகியவற்றை அறிவிக்கும்போது, இந்த கொடிக்கான விளக்கத்தையும் சொல்கிறேன்” என்கிறார்.

அதற்கேற்ப முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் த.வெ.க நிர்வாகிகள் ஆர்வம் காட்டினர். முதலில் மாநாட்டை திருச்சியில் நடத்த முடிவு செய்தனர். ஆனால், அதற்கேற்ப போதிய இடம் கிடைக்காததால் சேலம், ஈரோடு என மாவட்டங்களில் இடம் தேடி அலைந்தனர். முடிவில் விக்கிரவாண்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. வரும் செப்டம்பர் 23ம் தேதி மாநாட்டை நடத்த உள்ளதாகக் கூறி காவல்துறையில் த.வெ.க சார்பில் அனுமதி கேட்கப்பட்டது.

ஆனால், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையின் அனுமதி கிடைப்பதில் தற்போது வரையில் சிக்கல் நீடிக்கிறது. விக்கிரவாண்டியில் தனியாருக்குச் சொந்தமான 80 ஏக்கர் நிலம் மாநாட்டை நடத்த வசதியாக இருக்கும் என த.வெ.க கருதுகிறது. ஆனால், மாநாடு தொடர்பாக, 21 கேள்விகளை விழுப்புரம் மாவட்ட காவல்துறை எழுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தை விழுப்புரம் டிஎஸ்பி சுரேஷ், த.வெ.க பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்துக்கு அனுப்பியுள்ளார்.

என்ன சிக்கல்?

விஜய் கட்சியின் மாநாட்டை நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதைக்கு இடையில் உள்ளது. இப்பகுதியில் மூடப்படாத ஐந்து கிணறுகள் உள்ளன. இவற்றை மூட வேண்டும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநாட்டில் 3 லட்சம் பேர் வரையில் பங்கேற்கும் அளவுக்கு இடவசதி உள்ளது. சென்னை உள்பட அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்த 40 ஏக்கர் நிலம் தயாராக உள்ளதாக த.வெ.க நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுதவிர, ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனம், தீயணைப்பு வாகனம் ஆகியவற்றை நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இவற்றைப் பட்டியலிட்டு தவெக நிர்வாகிகள் கடிதம் கொடுத்தாலும் சில கேள்விகளை காவல்துறை காவல்துறை எழுப்புகிறது.

காவல்துறையின் 21 கேள்விகள்

அவை, மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை, மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்?, மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம்?, மாநாடு நடத்த திட்டமிட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார்? அவர்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?

மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் பெயர் பட்டியல். மாநாடு மேடையின் அளவு என்ன? எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்பட உள்ளன? மேடையில் பேசவிருக்கும் நபர்களின் பெயர் விவரம் ஆகியவற்றைக் கோரியுள்ளது.

மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்கள் எண்ணிக்கை மற்றும் அலங்கார வளைவுகளின் விபரம், மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்ததாரர்கள் விபரம், மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் என 21 வகையான விவரங்களை கோரியுள்ளது.

மேலும், மாநாட்டுக்கான உணவு, குடிநீர், கழிப்பிட வசதி ஆகியவை குறித்தும் காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு ஐந்து நாட்களில் பதில் அளிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மாநாட்டை தடுக்க முயற்சியா?

“காவல்துறை அனுமதி மறுத்தால் நீதிமன்றம் சென்று அனுமதி பெறுவதற்கும் த.வெ.க தலைமை தயாராக உள்ளது. மாநாடு நடக்கப் போகும் செப்டம்பர் 23 ஆம் தேதி திங்கள்கிழமையாக உள்ளது. அன்று இளைஞர்கள் பெருமளவு திரள்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதைத் தடுக்கும் முயற்சிகளில் காவல்துறை இறங்கியுள்ளதாக பார்க்கிறோம்” என்கிறார் த.வெ.க நிர்வாகி ஒருவர்.

தவிர, த.வெ.க மாநாட்டை முன்வைத்து அதிமுக அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “விஜய் கட்சி ஆரம்பித்ததால் திமுகவிற்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்து பல்வேறு நெருக்கடிகள் தருகிறது. தற்போது மாநாட்டுக்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்” என்கிறார்.

இதனை மறுத்துப் பேசும் காவல்துறை அதிகாரி ஒருவர், “மாநாட்டை நடத்தும்போது எந்தவித பாதுகாப்பு குளறுபடிகளும் நடந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடும் போது அவர்களின் பாதுகாப்பு முக்கியம். உளுந்தூர்பேட்டையில் விஜயகாந்த் கட்சியின் மாநாடு நடந்தபோது பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. இதனால் காவல்துறைக்கு தான் கெட்ட பெயர் ஏற்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைபிடிக்கச் சொல்வதை குற்றச்சாட்டுகளாக முன்வைக்கிறார்கள். யார் மாநாடு நடத்தினாலும் இதே பாதுகாப்பு நடைமுறைகள் தான் பின்பற்றப்படும்” என்கிறார்.

த.வெ.க.-வின் சென்டிமென்ட்

மாநாட்டுக்காக விக்கிரவாண்டியை தேர்வு செய்ததில் ஏதாவது சென்டிமென்ட் உள்ளதா என தவெக நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “அப்படி எந்த சென்டிமென்ட்டும் இல்லை. கட்சியின் முதல் அரசியல் நிகழ்வான அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாட்டம் விழுப்புரத்தில் சிறப்பாக நடந்தது. அதன் காரணமாகவே விக்கிரவாண்டி தேர்வு செய்யப்பட்டது” என்கிறார்.

Exit mobile version