பெரியாருக்கு புகழாரம்… விஜய்யின் அரசியல் பயணம் ‘திராவிட’ பாதையா..?
தமிழக அரசியல் கட்சிகளில் புது வரவாக அமைந்துள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் கொள்கை, கோட்பாடு போன்றவை எப்படியானதாக இருக்கும் என்பது குறித்து அக்கட்சி இன்னும் முழுமையாக தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை விரைவில் நடக்க உள்ள அக்கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில் அவை குறித்த அறிவிப்புகள், தீர்மானங்கள், குறிக்கோள்கள் வெளியிடப்படலாம்.
ஆனாலும், கடந்த சில தினங்களாக விஜய்யின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவர் திராவிட சாயலில் தனது அரசியல் பயணத்தை மேற்கொள்ள இருப்பதைப் போன்ற தோற்றமே காணப்படுகிறது.
பெரியார், அண்ணாவுக்கு புகழாரம்
கடந்த 15 ஆம் தேதியன்று திமுக-வை தோற்றுவித்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, தனது X சமூக வலைத்தள பதிவில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட விஜய், ” சுயமரியாதை திருமணங்களை சட்டப்பூர்வமாக்கியது.‘மதராஸ் மாநிலம்’ என்ற பெயரை தமிழ்நாடு என மாற்றியது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையைச் செயல்படுத்தியது என்று தமிழக அரசியல் களத்தில் புதிய வரலாறு படைத்த அண்ணாவின் பிறந்தநாளில், அவரது பணிகளை போற்றி மகிழ்வோம்” எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று சென்னையிலுள்ள பெரியார் திடலுக்கே நேரில் சென்ற அவர், மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அத்துடன் தனது X சமூக வலைத்தள பதிவிலும் பெரியாருக்கு புகழாரம் சூட்டி உள்ளார்.
‘திராவிட’ அரசியல் பாதையா..?
முன்னதாக, விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காமல், ஓணம் பண்டிகைக்கு மட்டும் விஜய் வாழ்த்து தெரிவித்ததால், சமூக வலைதங்களில் பேசும்பொருளாக மாறியது. இதனிடையே, அண்ணா பிறந்த நாளைத் தொடர்ந்து, பெரியார் பிறந்த நாளுக்கும் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால், அவர் திராவிட அரசியலை பின்பற்றுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “நடிகர் விஜய் கட்சித் தொடங்குவதற்கு முன்பே திராவிட சாயலில் பயணிப்பதைபோல் தெரிகிறது. திராவிட சாயலில் வேறொரு கட்சித் தமிழகத்திற்கு தேவையில்லை. தேசிய சாயலில் வர வேண்டும்; விஜய் மாற்றி பயணிப்பார் என நினைத்தேன். பெரியார் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விஜய், திராவிட மாதிரி போன்று பேசுகிறார். விஜய்யின் சாயம் வெளுக்கிறதா அல்லது வேறொரு சாயத்தைப் பூசுவாரா என்பது போகப்போகத்தான் தெரியும்” எனக் கூறினார்.
அதேபோன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், “விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து கூறாத நடிகர் விஜய் பொதுவான ஆளாக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை” என்று விமர்சித்தார்.
இந்த நிலையில், விஜய்யின் இந்த நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு பேசும் தமிழக அரசியல் பார்வையாளர்கள் மற்றும் மூத்த ஊடகவியலாளர்கள், “விஜய் தனது கட்சியை பெரியார், அண்ணா வழியிலேயே கொண்டு செல்வது எனத் தீர்மானித்து விட்டார் என்றே தெரிகிறது. கிட்டத்தட்ட இன்னொரு திமுக-வாகவே அவர் தனது அரசியல் பாதையை வகுத்துள்ளார் என்பது தெளிவாகி விட்டது.
ஆனால் அதே பெரியார், அண்ணா கொள்கைகளை முன்வைத்து தான் இங்கு திமுக, அதிமுக என இரு பெரும் திராவிட கட்சிகள் இருக்கின்றன. 1967 ல் இருந்து மாறி மாறி ஆட்சி செய்து வரும் இந்த இரு கட்சிகளும் 75% வாக்குகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இத்தகைய ஒரு சூழ்நிலையில், கடந்த அரை நூற்றாண்டில் எந்த நடிகரும் எம்.ஜி.ஆர் மேஜிக்கை மீண்டும் செய்ய முடியாத நிலையில், விஜய்யால் எப்படி இந்த இரு பெரும் திராவிட கட்சிகளின் ஆதரவாளர்களை தனது பக்கம் இழுக்க முடியும் என்பது கேள்விக்குறிதான்” என்கிறார்கள்.
“அதுமட்டுமல்லாது தனது அரசியல் யுத்தத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி போன்ற சீனியர்களை எதிர்கொள்வது மட்டுமல்லாது, உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை போன்ற இளம் தலைவர்களுடன் விஜய் போட்டிப் போட வேண்டிய சூழல் நிலவுகிறது.
மேலும், விஜயின் கட்சியான தவெக, தமிழக அரசியலில் இன்னும் பரிசோதிக்கப்படாத சக்தியாக உள்ளது. முக்கியமான சமூக-அரசியல் பிரச்னைகளில் விஜய்யின் நிலைப்பாடு என்ன என்பதும் தெரியவில்லை. கட்சிக் கொடியை ஏற்றிய பிறகும் அவரது பேச்சில் கருத்தியல் அல்லது அரசியல் சார்பு இல்லை. தமிழ்நாட்டில், அந்தப் பண்புகள் முக்கியமானவை.
மேலும் தமிழ்நாட்டில் திராவிடக் கோட்டையை உடைப்பது என்பது அத்தனை எளிதானது அல்ல. சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணியை அமைக்க பாஜக தீவிர முயற்சியை மேற்கொண்டது. ஆனால், 18.27% வாக்குகளைப் பெற்றாலும், 39 தொகுதிகளில் 12 ல் அதிமுகவை இரண்டாவது இடத்தில் இருந்து வெளியேற்றிய போதிலும், அந்தக் கூட்டணிக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை” என அவர்கள் மேலும் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதே சமயம், ” விஜய்யின் புகழ் மற்றும் இளவயது வாக்காளர்களிடையே அவருக்கு இருக்கும் செல்வாக்கு போன்றவை, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் அனைத்து முக்கிய கட்சிகளையும் பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், அவர் ஆளும் திமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டால், அது திமுக-வுக்கு எதிரான வாக்குகளில் பிளவை ஏற்படுத்தி, ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமையும்.
அதே சமயம், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாரதிய ஜனதா கட்சியுடன் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி கூட்டணி அமைத்தது போன்று, முக்கிய திராவிட கட்சிகளில் ஒன்றோடு விஜய் கூட்டணி சேர முடிவு செய்தால், அது தமிழகத்தில் அரசியல் ஆட்டத்தை மாற்ற வாய்ப்புள்ளது” என்கிறார்கள் இன்னொரு தரப்பினர்.
மொத்தத்தில், வரும் நாட்களில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடுகள் தமிழக அரசியல் களத்தில் ஒரு அதிர்வை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கில்லை.