கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று விக்கிரவாண்டியில் நடந்த நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு, தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. கூடவே, இந்த மாநாட்டு நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் மாநாட்டுக்கு வந்த லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்களிடையே நிலவியது.
இந்த நிலையில், மாநாட்டு நிகழ்ச்சியை அநேகமாக ஏதாவது ஒரு பிரபலமான தொலைக்காட்சி தொகுப்பாளர் அல்லது திரைப்பிரபலம் தொகுத்து வழங்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்ற இந்த மாநாட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர் கவி பாரதி துர்கா என்பவர்.
முன் வைக்கப்பட்ட விமர்சனங்கள்
கிராமத்து முகச் சாயலுடன் கூடிய கவி பாரதி துர்கா, மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தோன்றியபோது, ‘யார் இவர்?’ என்ற ரீதியில் பார்வையாளர்கள் மத்தியில் புருவங்கள் உயர்ந்தன. தொடர்ந்து விஜய் மாநாட்டுக்கு வரப்போவதை, ‘தளபதி இதோ வந்துவிட்டார்… அதோ வந்துவிட்டார்’ என அவர் அறிவித்ததும், நிகழ்ச்சியின் இடையே அறிவிப்புகளின்போது சில இடங்களில் வெளிப்பட்ட தடுமாற்றம் போன்றவற்றை முன்வைத்து அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. அவருக்கு எதிரான மீம்ஸ்களும் வெளிப்பட்டு, அவை வைரலாகின. குறிப்பாக, ஒரு தொகுப்பாளருக்கு தேவையான குரல் வளம் அவருக்கு இல்லை, பாவனைகள் சரியாக இல்லை, அவருடைய உச்சரிப்பு சரியில்லை, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் வெகு சுமார் என்று ஏகத்துக்கு விமர்சனங்கள் எழுந்தன.
கை தூக்கிவிடுவதில் என்ன தவறு?
அதே சமயம், அவருக்கு ஆதரவான குரல்களும் எழுந்தன. ” எப்போதும் பிரபலங்களே தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க வேண்டுமா? கிராமத்து பின்புலத்தில் இருந்து வந்த இவரைப்போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கி, அவர்களை கை தூக்கி விடுவதில் என்ன தவறு..?” என்றும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
இது தொடர்பாக பிரபல சமூக செயற்பாட்டாளரான எவிடன்ஸ் கதிர், “வாய்ப்பு மறுக்கப்பட்ட தரப்பில் இருந்து வருகின்றன நபர்களிடம் திறமை, தகுதி எல்லாம் பார்க்க கூடாது. அவர்களுக்கான வாய்ப்பினை வழங்க வேண்டும். அவர்கள் சொதப்பக் கூட செய்யலாம். பரவாயில்லை அவர்களை உற்சாகப்படுத்தி அதில் பங்கெடுக்க செய்ய வேண்டும். குரல் எடுபடவில்லை, நல்ல தொகுப்பாளரை நியமித்து இருக்கலாம் என்று விமர்சனம் வருகிறது. இருந்து விட்டு போகட்டும். இப்போது என்ன? அடுத்து சரியாக அந்த பெண்மணி பேசிவிடப் போகிறார்” எனத் தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எரிச்சலா… ஏமாற்றமா?
அதே சமயம், ஒரு மிகப் பெரிய மாநாட்டில், அதுவும் விஜய் மேடையேறும் நிகழ்ச்சி நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலேயே அவ்வாறு கூறியதாக
விமர்சித்தவர்கள், தங்கள் தரப்பு விமர்சனங்களை நியாயப்படுத்தினர். ஆனால், இந்த வாய்ப்பு தங்களுக்கு கிடைக்கவில்லையே என்ற எரிச்சல் அல்லது ஏமாற்றம் காரணமாகவும், அதிகம் பிரபலம் அல்லாத ஒரு கிராமத்து பின்னணி கொண்டவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டதே என்ற பொறாமையாலும் தான், பலர் இவ்வாறு விமர்சிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், விஜய் தன்னுடைய முதல் பிரம்மாண்ட மாநாட்டை தொகுத்து வழங்க தன்னுடைய ரசிகையையே தொகுப்பாளர் ஆக்கியது பலரது பாராட்டைப் பெற்றுள்ளது. இப்படிதான் நிகழ்ச்சியை தொகுக்க வேண்டும், இவர்கள்தான் ஆகச்சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் என்பதையெல்லாம் விஜய் உடைத்தெறிந்திருக்கிறார் என்றும் பாராட்டுகள் குவிந்துள்ளன.
ஆதரவுக்கு நன்றி தெரிவித்த கவிபாரதி துர்கா
இதனிடையே மக்களின் ஆதரவுக்கு ரொம்ப நன்றி என தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ள கவிபாரதி துர்கா, “இந்த பெரிய மேடையை எனக்கு கொடுத்த தவெக தலைவருக்கும், பொதுச்செயலாளருக்கும் ரொம்ப கடமைப்பட்டுள்ளேன். என்னோட நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மக்களோட ஆதரவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. இந்த மாதிரி சப்போர்ட் தான் என்னை மாதிரி ஒரு சாமானிய பெண்ணுக்கு உத்வேகமாக இருக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
ரொம்ப நன்றிங்க… நான் எதிர்பார்க்காத அளவுக்கு எனக்கு நிறைய சப்போர்ட் கிடைத்திருக்கு… ரொம்ப ரொம்ப நன்றி. ப்ளீஸ் சப்போர்ட் மீ ” எனக் கூறி உள்ளார்.
யார் இந்த கவிபாரதி துர்கா?
அடிப்படையில் விஜய் ரசிகையான இவர், தனியார் கல்லூரி ஒன்றில் லெக்சரராக உள்ளார். சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி. ஐந்தாண்டுகளுக்கு முன்னரே விஜய்யின் மக்கள் இயக்கத்தில் சேர்ந்த இவர், திருமணத்துக்குப் பிறகும் கணவர் கொடுத்த சப்போர்ட்டால், விருதுநகரில் நடக்கும் விஜய்யின் மக்கள் இயக்க கூட்டங்களில் எல்லாம் பேசி உள்ளார். அதன் மூலமாகவே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வரைக்கும் கவனம் பெற்று இந்த வாய்ப்பை பெற்று இருக்கிறார்.
வாழ்த்துகள் துர்கா!