Amazing Tamilnadu – Tamil News Updates

ஆட்சியில் பங்கு: விஜய் பேச்சால் மாறப்போகும் 2026 தேர்தல் களம்!

ரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி உள்ள நடிகர் விஜய், எதிர்பார்த்தபடியே தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டிலேயே திமுக-வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அதிலும், “தவெக தலைமையிலான கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும்” என்று பேசியிருப்பது தமிழக அரசியல் களத்தில் பேசுப்பொருளாகி உள்ளது. என்றபோதிலும், அவரது இந்த அறிவிப்பு திமுக கூட்டணியை சலசலக்க வைக்கும் உத்தியாகவே பார்க்கப்படுகிறது.

திமுக மீது நேரடி தாக்குதல் ஏன்?

நேற்று மாலை விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் பேசிய விஜய், பிளவுவாத அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் தனது அரசியல் எதிரி எனக் குறிப்பிட்ட அவர், பாஜக-வையும் திமுக-வையுமே சாடினார். இருப்பினும் குடும்ப அரசியல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் திமுக-வையும் நேரடியாக தாக்கிய அளவுக்கு அவர் பாஜக-வையோ அல்லது பிரதமர் மோடியையோ தாக்கவில்லை. அதேபோன்று அதிமுக குறித்தும் அவர் எதுவும் பேசவில்லை.

தமிழக அரசியல் களத்தில் பொதுவாக ஒரு பேச்சு உண்டு. அதாவது கடந்த காலங்களில் அதிமுக தொடங்கி தமிழகத்தில் தொடங்கப்பட்ட புதிய கட்சிகள் பெரும்பாலும் திமுக-வை எதிர்த்தே தங்களது அரசியல் நிலைப்பாட்டை முன்வைத்து களமாடி உள்ளன. அதாவது, எந்த கட்சி பலமாக உள்ளதோ அல்லது ஆளும் கட்சியாக உள்ளதோ அதை எதிர்த்து அரசியல் செய்தால், புதிதாக தொடங்கப்பட்ட கட்சி குறித்து பேசப்படும். ஊடகங்களிலும் அது குறித்து முக்கியமாக செய்திகள் இடம்பெறும். அதேபோன்று மக்களிடையே அது தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிமுக-வைத் தொடங்கியபோது எம்ஜிஆர் அதனை தான் செய்தார். அவருக்குப் பின்னர் வந்த பல கட்சிகளும் அதையே தான் செய்தன. எம்ஜிஆருக்குப் பின்னர் திரைத்துறையிலிருந்து வந்த பாக்யராஜ், டி. ராஜேந்தர் ( இவர் முதலில் திமுகவுக்கு ஆதரவாக இருந்தார்), சரத்குமார், விஜயகாந்த் எனப் பலரும் கையாண்ட அதே உத்தியைத் தான் தற்போது விஜய்யும் கையில் எடுத்துள்ளார்.

விஜய் பேச்சினால் ஏற்படப்போகும் தாக்கம்

தற்போதைய தமிழக அரசியல் களத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுக, கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி 2024 நாடாளுன்மன்ற தேர்தல் வரை பெற்ற தொடர் வெற்றிகளுக்கு, அதன் கூட்டணி கட்சிகளும் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இந்த கூட்டணியை உடைக்கத்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெரும் முயற்சி மேற்கொண்டதாக கூறப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு அதிமுக தரப்பில் வெளிப்படையாகவே அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க டெல்லியில் உள்ள சில அரசியல் புள்ளிகள் மூலம் ரகசியமாக முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இது குறித்த தகவல் எட்டியதால் தான் உஷாரான திமுக தலைமை, தொகுதி பங்கீட்டின்போது நிலவிய இழுபறியை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்து கூட்டணியை உறுதி செய்தது.

இந்த நிலையில் தற்போதைக்கு கூட்டணி தொடர்கிறபோதிலும், திமுக மீது அதன் கூட்டணி கட்சிகளுக்கு சில அதிருப்திகள் இருக்கத்தான் செய்கின்றன. அதிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ” ஆட்சி அதிகாரத்திலும் பங்கு” என்ற கோஷத்தை முன்வைத்தது திமுக தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 2026 தேர்தல் நெருக்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள இதர கட்சிகளும் ஆட்சி அதிகாரத்திலும் பங்கு கேட்காது என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அந்த வகையில் இது திமுக-வுக்கு ஒரு அச்சுறுத்தல் என்றே சொல்லலாம். ஆனாலும், திமுக மேலிடமும் எதையும் எதிர்கொள்ளும் வகையில், அதாவது கூட்டணி பலம் இல்லாமலேயே தனித்து மெஜாரிட்டி பெறும் அளவுக்கு அதிக தொகுதிகளில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் கட்சி நிர்வாகிகளை முடுக்கி விட்டு வருகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தான், “தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும்” என்ற தவெக தலைவர் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் இந்த கருத்தை சமீப நாட்களாக வலியுறுத்தி வரும் அந்த கட்சியின் இணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தில் அனைவருக்கும் சம பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை முதல் மாநாட்டிலேயே பேசிய விஜய்-க்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி உள்ளார்.

அதாவது தமது கட்சியின் எதிர்பார்ப்பை ஆதவ் அர்ஜுனா மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளார் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இதனால், விசிக மட்டுமின்றி இதர கூட்டணி கட்சிகள் பேரம் பேசும் பலத்தையும் விஜய்யின் பேச்சு அதிகரித்துள்ளது. ஆக மொத்தத்தில் 2026 தேர்தல் களம் கூட்டணி ஆட்சி என்ற முழக்கத்தை முன்வைத்தே இருக்கும் என்பது தெளிவாகி விட்டது.

Exit mobile version