Amazing Tamilnadu – Tamil News Updates

‘பாசிசம்’ குறித்து கிண்டல்: பாஜக-வைத் தாங்கிப் பிடிக்கிறாரா விஜய்?

பாஜகவை ‘பாசிச கட்சி’ என்று விமர்சிக்கும் திமுகவை, விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநில மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கிண்டலடித்துப் பேசினார். அத்துடன் திமுக-வை நேரடியாக விமர்சித்த அளவுக்கு அவர் பாஜக-வையோ அல்லது மோடி குறித்தோ எதுவும் பேசவில்லை.

விஜய் தனது மாநாட்டு உரையில், சாதி, மதம், இனம், மொழி, பாலினம், பணம், எனப் பிரிக்கும் பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் தான் எதிர்க்கப் போவதாகத் தெரிவித்தார்.

“இங்க ஒரு கூட்டம்.. ஒரே பாட்டை பாடிக்கிட்டு இருக்கு.. அதாவது யார் அரசியலுக்கு வந்தாலும் அவங்க மேல குறிப்பிட்ட கலரை பூசுகிறார்கள்.. இவங்களுக்கு எப்ப பார்த்தாலும் இந்த பாசிசம், பாசிசம்.. அவங்க பாசிசம்னா நீங்க என்ன பாயாசமா? இந்த மக்கள் விரோத ஆட்சியை ‘திராவிட மாடல்’ ஆட்சி என்று கூறி ஏமாற்றுகிறார்கள். பிளவுவாத அரசியல் செய்பவர்கள் த.வெ.க-வின் கொள்கை எதிரி. திராவிடம், பெரியர், அண்ணா பெயரை வைத்துக்கொண்டு, தமிழ்நாட்டைச் சுரண்டும் ஒரு குடும்பச் சுயநலக் கூட்டம் நமது அரசியல் எதிரி” எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இவரது இந்த பேச்சுக்கு பாஜக தரப்பில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், “பாஜக மீது தான் முன்வைக்கும் விமர்சனங்கள் உண்மையா இல்லையா என்பதில் விஜய்க்கு தயக்கம் இருக்கலாம். அரசியல் எதிரி என விஜய் குறிப்பிட்டது திமுகவை தான். திமுகவை எதிர்ப்பதற்கு வலிமையான கட்சி வந்திருப்பதாக நினைக்கிறேன். இதே வீரியத்துடன் திமுக எதிர்ப்பில் விஜய் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தான், பாஜக-வை விஜய் தாங்கிப் பிடிப்பதாக கருதும் திமுக, “பாசிசத்தின் கோரமுகம் என்ன என்பதை தெரியாமல் விஜய் பேசுகிறாரா அல்லது பாஜக-வுக்கு முட்டுக்கொடுக்கிறாரா..?” என ஆவேச பதிலடிகளைக் கொடுத்து வருகிறது.

“தன் படத்தை வெளியிட இயலாமல் கைகட்டி நின்றார் விஜய்… அது பாசிசம். ஃபாதர் ஸ்டேன் சாமியை சிறையில் தண்ணீர் குடிக்க விடாமல் கொன்றது பாசிசம். போலிஸ் ஆபிசர் சஞ்சீவ் பட் , உமர் காலித் போன்றவர்களை சிறையில் அடைத்து ஜாமீன் தர மறுத்தது பாசிசம். பெண் ஐஏஎஸ் ஆபிசர் முகத்தில் ஆசிட் அடித்தது பாசிசம். பாசிசத்தின் அர்த்தம் விளங்காமல் பேசியிருக்கிறார். திமுக-வுக்கு எதிரியாக தன்னை நினைப்பதற்கோ, சொல்வதற்கோ ஒரு தகுதி இருக்க வேண்டும்” என கவிஞர் சல்மா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேபோன்று மூத்த பத்திரிகையாளர் அருள் எழிலன், ” ஊழலை விட ஆபத்தானது மதவாதமும் சாதியவாதமும். அத்தகைய பாசிசத்தை ‘பாயாசமா’ எனக் குறிப்பிட்டு கிண்டலடிக்கும் விஜய், குஜராத்தில் என்ன நடந்தது, மணிப்பூரில் என்ன நடந்தது என்பதையெல்லாம் தெரிந்து கொண்டாரா இல்லையா..? ஊழலாவது ஒரு நோய். அதை குணப்படுத்தி விடலாம். ஆனால் மதவாதமும் சாதிய வாதமும் மக்களைக் கொல்லும்” எனக் கூறி உள்ளார்.

இந்த நிலையில், விஜய்யின் மேற்கூறிய பேச்சு மூலம் அவர் பாஜக-வின் C டீம் என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மிக காட்டமாக விமர்சித்துள்ளார். “அதிமுக என்ற கட்சி தமிழ்நாட்டில் எடுபடாது என்பது தெரிந்து தான் அவர்களைப் பற்றிப் பேசவில்லை. அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்ப்பதற்காகத்தான் விஜய் அவர்கள் குறித்து எதுவும் பேசவில்லை.

ஊழலைப் பற்றி பேச வேண்டுமெனில் 2011 – 2021 வரையிலான ஆட்சியில் நடந்த ஊழலைப் பற்றி தான் பேச வேண்டும். 2021- 2026-இல் எந்த ஒரு ஊழலும் நடைபெறவில்லை. யாராலும் பேச முடியாது, ஏனென்றால் நாங்கள் எந்த ஒரு தவறுக்கும் இடம் கொடுக்கவில்லை. பழுத்த மரத்தில் தான் கல்லடி படும். அந்த வகையில், திமுகவை தாக்கி பேசினால் தான் மக்கள் மத்தியில் ஏதாவது சென்று பேச முடியும் அதனால் பேசுகின்றனர்” என அவர் கூறி உள்ளார்.

அதேபோன்று தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவு, “தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பற்றி நிறைய விஷயங்கள் வருகிறது. அவர் புதுச்சேரியில் உள்ள பாஜக தலைவருடன் நெருக்கமாக இருப்பதாகவும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதாகவும், தகவல்கள் வருகிறது. விஜயே A டீம், B டீம் இல்லை என சொல்வதை வைத்துப் பார்க்கும் போது சந்தேகம் ஏற்படுகிறது. அவர் பாஜக B டீம் எனச் சொல்கிறார்கள்.ஏற்கனவே பாஜகவில் இருந்து ரஜினியை அரசியலுக்கு கொண்டுவர முயற்சித்தார்கள், அவர் வரவில்லை. அவருக்கு பதிலாக தற்போது விஜய்யை ஏற்பாடு செய்திருப்பார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது” என விமர்சித்துள்ளார்.

‘ சோ கருத்தை எதிரொலிக்கிறார்..’

மேலும் திமுக மேடைகளில் கட்சித் தலைவர்கள் கட்சி நிர்வாகிகளைப் பற்றி பேசும்போது, ‘ அவர்களே… ‘ எனக் குறிப்பிட்டுப் பேசுவதையும் விஜய் தனது மாநாட்டு உரையில் கிண்டலடித்து இருந்தார். “மேடையில் இருக்கிறவர்களுக்குத் துண்டு போடுவது, பெயர்களைச் சொல்வது என்பது இடுப்புல துண்டு கட்டி, ‘சாமி…’னு சொல்வதைத் தூக்கி எறிய திராவிட இயக்கம் செய்த எதிர்வினை. அதனால், சோ இந்த மேடை கலாசாரத்தை நக்கல் செய்த அதே குரலில் விஜய் பேசுகிறார் ” என்றும் சமூக வலைதளங்களில் திமுக ஆதரவாளர்கள் பதிவிட்டுள்ளனர்.

தொடர்ந்து விஜய்யின் விமர்சனத்துக்கு திமுக தரப்பில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசியல் களம் தகிக்கத் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் இந்த தகிப்பு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்!

Exit mobile version