Amazing Tamilnadu – Tamil News Updates

காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறாரா விஜய்?

ரவிருக்கும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய், விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை அடுத்த மாதம் 27 ஆம் தேதி நடத்த உள்ளார். பல்வேறு நிபந்தனைகளுடன் காவல்துறை அனுமதியும் கிடைத்துவிட்ட நிலையில், மாநாட்டு ஏற்பாடுகளை கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முடுக்கிவிட்டுள்ளார்.

விக்கிரவாண்டி வி.சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுவர் விளம்பரங்கள் செய்யும் பணிகளில் கட்சியினர் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். முதல் கட்ட ஆயத்த பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், புஸ்ஸி ஆனந்த் தலைமையில் மாநாடு தொடர்பாக பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள், அணித்தலைவர்கள் பங்கேற்றனர். தொகுதிக்கு 5 பொறுப்பாளர்களை நியமித்து மாநாட்டிற்கு கட்சியினரை அழைத்து வர ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அது குறித்தே இக்கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறாரா?

இந்த நிலையில், கடந்த பல மாதங்களாகவே செய்தியாளர்களின் சந்திப்பின் மூலம் விஜய் உடன் கூட்டணி அமைக்கும் விருப்பத்தை வெளிப்படுத்தி வந்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விஜய்யைக் கடந்த மே மாதம் நேரில் சந்தித்து அரசியல் நகர்வுகள் மற்றும் கூட்டணி தொடர்பாகவும் பேசியதாக கூறப்பட்டது. இருப்பினும் சீமானுடன் கூட்டணி அமைக்கும் விஷயத்தில் விஜய் மிகுந்த தயக்கம் காட்டியதாக தெரிகிறது.” 8 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் அரசியலுக்கு வந்த நான் தான் பெரியவன்” என சீமான் பேசி வரும் நிலையில், அவருடன் கூட்டணி அமைப்பது சரியாக வருமா என அவர் யோசிப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், கூட்டணி அமைப்பது தொடர்பாக விஜய்யின் மனவோட்டம் என்னவாக உள்ளது என்பது குறித்து, சீமான் தற்போது புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “விஜய்யை சமீபத்தில் சந்தித்தேன். அதன் பிறகு மற்றொரு சந்திப்பும் நடைபெற இருந்தது. எனினும், திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மற்றும் ரிலீஸ் வேலைகள் இருந்ததால் சந்திப்பு நடைபெறவில்லை. இரண்டு மாதங்கள் முன் நடத்திய சந்திப்பில் அரசியல் பேசினோம்.

சேர்ந்து போட்டியிடுவது பற்றிதான் பேசினோம். இறுதியில் அவர் என்ன முடிவு எடுப்பார் என்று தெரியவில்லை. அவருக்கு ஆலோசனை வழங்குபவர்கள் தேசிய கட்சி யாரேனும் கூட்டணியில் இருந்தால் நல்லது என்று நினைக்கலாம். அவரும் என்னிடம், காங்கிரஸ் எப்படி என்று கேட்டார். காங்கிரஸை வைத்துக் கொண்டு நாம் என்ன பேசுவது என்று கூறுமாறு கேட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் திமுக மீது சில அதிருப்திகளை வெளிப்படுத்தி வரும் நிலையில், ஒருவேளை வரவிருக்கும் 2026 தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் போகும் பட்சத்தில், அக்கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என கருதியே விஜய் இவ்வாறு சீமானிடம் கேட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

Exit mobile version