Amazing Tamilnadu – Tamil News Updates

தவெக மாநாடு: அரசியலுக்கு வந்த காரணத்தை சொன்ன விஜய்!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில், தனது கட்சியின் கொள்கை, கோட்பாடுகளை விளக்கிய கட்சித் தலைவரான விஜய், யாரை எதிர்த்து தனது அரசியல் இருக்கும் என்பதை வெளிப்படையாகவே அறிவித்தார்.

பிளவுவாத அரசியல் செய்பவர்களும், திராவிட மாடல் என்ற பெயரில் இருக்கும் குடும்ப சுயநலக் கூட்டமும் தான் தனது அரசியல் எதிரி எனக் குறிப்பிட்ட அவர், பாஜகவையும் திமுக-வையுமே சாடியுள்ளார். இருப்பினும் குடும்ப அரசியல் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும் திமுக-வையும் நேரடியாக தாக்கிய அளவுக்கு அவர் பாஜக-வையோ அல்லது பிரதமர் மோடியையோ தாக்கவில்லை.

தொடர்ந்து தான் அரசியலுக்கு வந்ததற்கான காரணத்தையும் அவர் விளக்கினார். அவரது பேச்சின் முக்கிய ஹைலைட்ஸ் இங்கே…

“அரசியல் பாம்பு, அதை பயமறியா ஒரு குழந்தையை போலக் கையில் பிடித்து விளையாடுகிறேன். அரசியலில் நான் ஒரு குழந்தை என்று மற்றவர்கள் சொல்கிறார்கள். ஆனால் பாம்பைக் கண்டு எனக்கு பயமில்லை. அரசியல் ஒன்றும் சினிமா கிடையாது, போர்க்களம். சீரியஸாக சிரிப்போடு எண்ணங்களை செயல்படுத்துவதுதான் என் வழி. கவனமாகக் களமாடவேண்டும்.

நாம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பது சுயநலம்.. நமக்கு இந்த வாழ்க்கையைக் கொடுத்த என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு அரசியல் என்ற விடை கிடைத்தது. களத்தில் இறங்கினால் தான் ஜெயிக்க முடியும் என நினைத்தேன். இப்போ இறங்கியாச்சு.. எதிரிகள் யார் என்பது அவர்களே முன்னால் வருவார்கள். கட்சி அறிவிப்பின் போதே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதைப் போன்று யார் எதிரி என்பதை தீர்மானித்துவிட்டோம். அப்போது கதறல் சத்தம் கேட்க ஆரம்பித்துவிட்டது. இனி அதிகரிக்கும்.

அறிவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாறவேண்டுமா? அரசியலும் மாறவேண்டும். மேடைகளில் உணர்ச்சிக் கொந்தளிப்புடன் பேச வேண்டிய அவசியமில்லை. இப்போது என்ன பிரச்னை அதற்கு என்ன தீர்வு என்பதைச் சொன்னாலே மக்களுக்கு நம்பிக்கை வந்துவிடும், இன்று இருக்கும் தலைமுறையை புரிந்துகொண்டால்தான் சுலபமாக முன்னெடுத்துச் செல்லமுடியும் மற்ற அரசியல்வாதிகளைப் பற்றிப் பேசி நேரம் விரயம் செய்யப்போவதில்லை, ஆனால் கண்ணை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை” என்றார்.

பெரியாரே எங்கள் கொள்கை தலைவர்; ஆனால்….

“பெரியார் எங்கள் கொள்கை தலைவர். ஆனால், பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போவதில்லை. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை. அண்ணா கூறியபடி, ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனாலும், பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், சமூகநீதி, பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்ன இவை அனைத்தையும் நாங்கள் முன்னெடுக்க போகிறோம்.

பெரியாருக்கு அப்புறம் எங்களின் கொள்கைத் தலைவர் பச்சை தமிழர் பெருந்தலைவர் காமராஜர். காமராஜர் இந்த மண்ணில் மதசார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாகத்துக்கும், செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருப்பதால் அவரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம்.

காமராஜரின் மதச்சார்பின்மை, நேர்மையான நிர்வாகச் செயல்பாடு மற்றும் அம்பேத்கரின் வகுப்புவாதிப் பிரதிநிதித்துவ கோட்பாட்டை நிலைநிறுத்தவும் சாதிய ஒடுக்குமுறையை எதிர்ப்பதுமே நமது நோக்கம். வீரமங்கை வேலுநாச்சியாரும் தவெகவின் கொள்கை வழிகாட்டியாக திகழ்வார். பெண்களைக் கொள்கைத் தலைவராக ஏற்று வந்த முதல் கட்சி தவெக தான். முன்னேறத் துடிக்கும் சமூகத்தில் பிறந்து முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் நமக்கு வழிகாட்டியாக இருப்பார்” என்றும் விஜய் மேலும் அறிவித்தார்.,,

Exit mobile version