2026 தேர்தல்: விக்கிரவாண்டி மாநாடும் விஜய் கட்சி சொல்லும் சேதியும்!
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் வரவிருக்கும் 2026 சட்டசபை தேர்தலில் களம் இறங்க உள்ளது.
இந்த நிலையில், தனது கட்சியின் கொள்கை, இலட்சியம், அரசியல் நிலைப்பாடு உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் விதமாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை வருகிற 27 ஆம் தேதி நடத்த உள்ளார் விஜய்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் நடைபெற உள்ள இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் 85 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டு மேடை 60 அடிஅகலம், 170 அடி நீளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது உள் அலங்கரிப்பு பணி நடைபெறுகிறது. திடலில் பார்வையாளர்கள் அமரும் இடங்களில், பகல்போல் ஜொலிக்க, திடல் முழுவதும் 15,000 ஹை மாஸ் விளக்குகள் அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது.
திடலின் இருபுறமும் மொபைல் கழிப்பறை அமைக்க 300 தடுப்புகள் ஏற்படுத்தி வருகின்றனர். மாநாட்டு முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்படுகிறது. திடலைச் சுற்றி தகர தகடுகளால் மறைப்பு ஏற்படுத்தியுள்ளனர். மாநாட்டு மேடைக்கு விஜய் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் வருவதற்கு தனி சாலை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மாநாட்டுத் திடலுக்குள் யாரும் வர முடியாதபடி, பவுன்சர்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.
மாநாடு வளாகத்தைச் சுற்றிலும் 20,000 மின்விளக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுப் பந்தலில் சுமார் 75,000 இருக்கைகள் போடப்பட உள்ளன. இரவு – பகலாக மாநாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால் நாளைக்குள் மாநாட்டு பந்தல் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் பகுதியில் எதிர்பாராது மழை பெய்தால், பாதிப்பு ஏற்படாத வண்ணம் மணல்பரப்பில் ஜல்லி கற்கள் குவியல் குவியலாக கொட்டப்பட்டு நிலப் பரப்பு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, மாநாடு நடைபெறும் நாளன்று மழை பெய்யாமல் இருக்க நேற்று அதிகாலை தவெக சார்பில் யாகம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திடலின் உள்ளே செல்லும் மின் ஒயர்களை அகற்றி கேபிளாக பூமியில் புதைக்க மின்வாரியம் அனுமதி அளிக்கவில்லை. மாநாட்டுக்குத் தேவையான மின்சாரம் ஜெனரேட்டர்கள் மூலம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிகிறது. பாதுகாப்பு கருதி மாநாடு நடைபெறும் பகுதியில் உள்ள கிணறுகளை, இரும்பு கார்டர்கள் மீது மரப்பலகைகள் அமைத்து மூடப்படுகின்றன. தொண்டர்களுக்கு மாநாட்டுத் திடலில் உணவு வழங்க திட்டமிட்டப்பட்டிருந்தது. ஆனால், கூட்ட நெரிசல் ஏற்படும் எனக் கருதி, மாநாட்டுக்கு வரும் வாகனங்களிலேயே உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக அக்கட்சி நிர்வாகிகள் தரப்பில் கூறப்படுகிறது.
மாநாட்டு முகப்பு செயின்ட் ஜார்ஜ் கோட்டை போல அமைக்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 2026 சட்டசபை தேர்தலை விஜய்யும் அவரது கட்சியினரும் எந்த அளவுக்கு நம்பிக்கையுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் எனத் தெரிகிறது.