Amazing Tamilnadu – Tamil News Updates

2026 தேர்தலில் தவெக தனித்துப் போட்டியா..? குழம்பும் கட்சிகள்… விஜய் முடிவு என்ன?

ரவிருக்கும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்கும் என அதன் தலைவர் நடிகர் விஜய் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். ஆனால், விஜய் கட்சிக்கு அதிகபட்சம் 15 சதவீத அளவுக்கே வாக்காளர்களிடம் ஆதரவு காணப்படுவதாக அண்மையில், இந்தியா டுடே – சி வோட்டர் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே தேர்தலில் வெற்றி பெற வலுவான கட்சியுடன் கூட்டணி தேவை. தற்போதைய சூழலில் திமுகவுக்கு நிகராக வலுவான உட்கமைப்பு கொண்ட கட்சியாக அதிமுக தான் உள்ளது. அதிமுகவும் 2026 தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வந்தது. அதற்காக அதிமுக தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இது தொடர்பாக இருதரப்புக்கும் பொதுவானவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் கூறப்பட்டது.

அதிமுக கூட்டணிக்கு தயங்கும் விஜய்

ஆனால் வெற்றிபெற்றால் யார் முதல்வர் என்பதில் தான் பிரச்னையே எழுந்ததாகவும், ‘எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்கவா நான் கட்சித் தொடங்கினேன்..? ‘ என்ற ரீதியில் விஜய் யோசிக்கத் தொடங்கியதால் மேற்கொண்டு அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனிடையே, பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர் தற்போது தவெக-வுக்கான தேர்தல் ஆலோசனைகளை வழங்க நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அதிமுக உடனான கூட்டணிக்கு வலியுறுத்தியதாகவும், ‘தேர்தலில் வெற்றி பெற்றால் ஆந்திராவில் பவன் கல்யாண் எப்படி துணை முதலமைச்சராக பதவியை ஏற்றுக்கொண்டாரோ அதேபோன்று நீங்களும் முதலில் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என விஜய்யிடம் கூறியதாகவும் தகவல் வெளியானது. அதே சமயம், விஜய் இந்த ஆலோசனையை ஏற்கவில்லை எனச் சொல்லப்படுகிறது. “ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், 2031 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் தனித்து ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு கட்சியை வளர்த்துவிடலாம்” என விஜய் கூறியதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டுடைத்த பிரசாந்த் கிஷோர்

இந்த நிலையிலேயே, அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டி அளித்த பிரசாந்த் கிஷோர், ” தமிழக மக்கள் தேடும் நேர்மையான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் தகுதி விஜய்க்கு உண்டு. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு பெரிய ஆச்சரியத்தை தரும். விஜய் மிகப் பெரிய சக்தியாக உருவெடுப்பார். அவர் தனித்துப் போட்டியிடவே விரும்புகிறார். நிச்சயம் கூட்டணி கிடையாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை இணைக்க அதிமுக முயற்சிக்கும், ஆனால், தவெக உறுதியாக தனித்தே போட்டியிடும். தனித்து நிற்பதுதான் எங்களின் நிலைப்பாடு” எனக் கூறி இருந்தார்.

சீறத் தொடங்கிய அதிமுக

இந்த நிலையில், விஜய்யின் மனவோட்டம் அதிமுகவுக்குத் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இது நாள் வரை தவெக-வை பெரிய அளவில் விமர்சிக்காமல் இருந்து வந்த அக்கட்சி விமர்சிக்கத் தொடங்கிவிட்டது. மேலும், ” 2026 தேர்தல் வரை தவெக தான் எதிர்க்கட்சி. விஜய்தான் எதிர்க்கட்சி தலைவர்” என அக்கட்சியின் முதலமாண்டு நிறைவு விழாவில் பேசிய அதன் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசி இருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், “சட்டப்பேரவையில் இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக அதிமுக வரும்” என்று அதன் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 1 ஆம் தேதி கூறினார்.

கூட்டணி குழப்பத்தில் சிறிய கட்சிகள்

இதனிடையே, “தேர்தலில் வெற்றி பெற்றால் தங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும்” என கடந்த ஆண்டு இறுதியில் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தவெக மாநில மாநாட்டில் விஜய் அறிவித்திருந்தார். அதனை மனதில் கொண்டு 2026 தேர்தலில் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என எண்ணியிருந்த சிறிய கட்சிகள் மத்தியில் பிரசாந்த் கிஷோரின் பேட்டி குழப்பத்தை ஏற்படுத்தியது.

இன்னொருபுறம், ” தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தற்போதே கூட்டணி நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க வேண்டாம். அதுவும் கட்சியின் தேர்தல் வியூக ஆலோசரான பிரசாந்த் கிஷோர், அது குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பது சரியாக இருக்காது” என விஜய்க்கு நெருக்கமானவர்களும் , கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் தவெக பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் உடன் தொடர்புகொண்டு பேசியதாக தெரிகிறது.

விஜய் முடிவு என்ன?

இதனையடுத்து அவர், இதனை விஜய்யின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில், அவரது அறிவுறுத்தலின் பேரில், பிரசாந்த் கிஷோரின் கருத்துக்கு மறைமுகமாக மறுப்பு தெரிவிக்கும் வகையில், ” ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல.

எனவே, அதிகாரபூர்வமற்றவர்கள் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்” என ஆனந்த் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஆனந்தின் இந்த கருத்து மூலம், கூட்டணி விஷயத்தில் விஜய் இன்னும் ஒரு உறுதியான முடிவுக்கு வரவில்லை எனத் தெரிகிறது.

‘திமுக கூட்டணியில் பிளவு இல்லை; தொடரும்’ என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதிபட கூறி வரும் நிலையில், 2026 தேர்தலின் போதும் அதே நிலை நீடிக்கலாம் எனத் தெரியவந்தால் விஜய்யின் முடிவில் மாற்றம் இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

Exit mobile version