Amazing Tamilnadu – Tamil News Updates

ஒரே மேடையில் விஜய் – திருமா… நவ. 6 விழாவின் பின்னணி என்ன?

ரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கி உள்ள நடிகர் விஜய், கடந்த ஞாயிறன்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற தனது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டை நடத்தினார்.

இதில், “கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும்” என்று அவர் பேசியது தமிழக அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் இந்த கருத்தை சமீப நாட்களாக வலியுறுத்தி வரும் அந்த கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான ஆதவ் அர்ஜுனா, அதிகாரத்தில் அனைவருக்கும் சம பங்கு என்பது அடிப்படை உரிமை என்பதை முதல் மாநாட்டிலேயே பேசிய விஜய்-க்கு வாழ்த்து தெரிவிப்பதாக கூறி இருந்தார்.

விஜய் பேச்சால் ஏற்பட்ட சலசலப்பு

இதனால், விஜய்யின் இந்த அறிவிப்பு திமுக கூட்டணியை சலசலக்க வைக்கும் உத்தியாகவே பார்க்கப்பட்டது. அதே சமயம் விஜய் பேச்சு குறித்து பெரிய அளவில் ரியாக்ட் செய்ய வேண்டாம் என திமுகவினருக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாயின. இருப்பினும், பாசிசம் குறித்து விஜய் கிண்டலாக பேசியதற்கு திமுக இரண்டாம் மட்டத் தலைவர்களிடமிருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டன.

இன்னொரு பக்கம் விஜய்யின் மேற்கூறிய பேச்சால், திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் கட்சிகளுக்கு, குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2026 தேர்தலில் திமுக-விடம் கூடுதல் இடம் கேட்டும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்டும் பேரம் பேசுவதற்கான பலத்தை அதிகரிக்கச் செய்யும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

இதனால், விஜய்யை விசிக விமர்சிக்காது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு மாறாக மாநாடு முடிந்த மறுதினம் அக்கட்சித் தலைவர் திருமாவளவன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவதாக கூட்டணி குறித்து விஜய் தற்போது பேசி இருக்கக்கூடாது என்றும், இது அரசியல் முதிர்ச்சி இல்லாத தன்மை என்றும், விஜய்யின் இந்த நிலைப்பாடு திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக பேசப்பட்டது என்றும் விமர்சித்திருந்தார். அதே சமயம், அவரது அரசியல் வருகையை தான் ஆதரிப்பதாகவும் அவர் கூறி இருந்தார்.

ஒன்றாக மேடையேறும் விஜய் – திருமா…

விஜய் மீதான திருமாவளவனின் இந்த விமர்சனம் திமுக தரப்புக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக இருந்ததோடு, தற்போதைக்கு திமுக கூட்டணிக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் கருதப்பட்டது. ஆனால், இந்த எண்ணத்துக்கு மாறாக விஜய்யும் திருமாவளவனும் வருகிற 6 ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ள அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் ஒன்றாக மேடை ஏற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பின்னணி என்ன?

இது குறித்து விசாரித்தால், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற குரலை விசிக தரப்பில் ஓங்கி ஒலிக்கும் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா புத்தக வெளியீட்டு விழா பின்னணியில் இருப்பது தெரியவந்துள்ளது.

அதாவது, அம்பேத்கர் பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தரப்பில் தயாரிக்கப்பட்டு உள்ள பிரமாண்டமான புத்தகம் ஒன்றில், அம்பேத்கார் பற்றிய பல்வேறு தகவல்கள் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. இந்தியா முழுவதும் உள்ள 38 தலித் எழுத்தாளர்கள் அந்த புத்தகத்தில் தங்களது பங்களிப்பை கட்டுரைகளாக வழங்கி இருக்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவும் அதில் கட்டுரை எழுதி உள்ளாராம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சமீபத்திய பிரமாண்ட மாநாட்டு ஏற்பாடுகள், அக்கட்சியின் சில முக்கிய ‘மூவ்’ போன்றவற்றின் பின்னணியில் ஆதவ் அர்ஜூனா இருப்பதும், இவர் ஏற்கெனவே கடந்த கால திமுக அரசியல் வியூக வகுப்பு குழுவில் இடம்பெற்று முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவரது முயற்சியிலேயே புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர விஜய் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அம்பேத்கரை ஏற்கனவே தமது கட்சியின் கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக ஏற்பதாக விஜய் விக்கிரவாண்டி மாநாட்டில் அறிவித்து இருந்தார். அந்த அடிப்படையிலும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு வர விஜய் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. அம்பேத்கர் குறித்த புத்தகத்தை திருமாவளவன் வெளியிடுவார் என்றும், விஜய் அந்த புத்தகத்தின் முதல் பிரதியை பெற்றுக்கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

திருமாவுடன் ஆதவ் அர்ஜூனா

ஏற்கெனவே விஜய்யின் விக்கிரவாண்டி மாநாட்டைத் தொடர்ந்து தமிழக உளவுத்துறையினர் விஜய், திருமாவளவன், ஆதவ் அர்ஜூனா ஆகியோரை உன்னிப்பாகக் கண்காணிக்கத் தொடங்கி உள்ளதாகவும், இவர்கள் குறித்த தகவல்களைச் சேகரிக்க உளவுத் துறையில் சிறப்பு அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், உளவுத்துறை தற்போது அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் மற்றும் விஜய் இருவரும் மேடையை பகிர்ந்து கொள்ள இருக்கும் தகவலை ஆட்சி மேலிடத்துக்கு பாஸ் செய்துள்ளது.

நவம்பர் 6 தாக்கத்தை ஏற்படுத்துமா?

இது குறித்த தகவல் அறிவாலய வட்டாரத்தில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும், எதையும் எதிர்கொள்ள தயார் என்ற மூடுக்கு திமுகவும் வந்துவிட்டதாகவே அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இதனிடையே, இந்த விழாவில் விஜய்யுடன் ஒரே மேடையில் தாம் பங்கேற்றால் அது திமுக தரப்புக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம் என்பதால், விழாவில் பங்கேற்க திருமா தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படி ஒருவேளை திருமாவளவன் அந்த மேடையில் பங்கேற்காவிட்டாலும், விசிக துணை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜூனா நிச்சயம் மேடை ஏறுவார். அவரது பேச்சு நிச்சயம் திமுக தரப்புக்கு உவப்பாக இருக்காது.

மேலும், விஜய் பேசினாலும் அதுவும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவே இருக்கும் என்பதால், நவம்பர் 6 ஆம் தேதி நிகழ்வை அரசியல் வட்டாரம் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளது.

Exit mobile version