சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான ‘வேட்டையன்’ திரைப்படம் தமிழகம் உட்பட உலகம் முழுவதும் வெள்ளிக்கிழமை வெளியாகிறது.
ரஜினியின் 50 ஆண்டுக் கால திரையுலகில், அவருக்கு இது 170 ஆவது படமாக அமைந்துள்ள நிலையில், அவரது ரசிகர்களிடையே படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் – ரஜினி காம்பினேஷனும், அமிதாப் பச்சன், ராணா, ஃபஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் இடம்பெற்றுள்ளதும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. இவர்கள் தவிர, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.லைகா நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.
சிறப்பு காட்சிக்கு அனுமதி
போலீஸ் என்கவுன்ட்டரை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில், இப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி கடைசி காட்சியை நள்ளிரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும். அதிகபட்சமாக 5 காட்சிகள் திரையிடலாம் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவாதத்தை கிளப்பிய கதை
‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் லாக்கப்பில் நடந்த சித்ரவதைகளையும், விசாரணை கைதிகள் மீது அரங்கேறிய கொடூரங்களையும் தோலுரித்துக் காட்டிய இயக்குநர் த.செ.ஞானவேல், இந்த படத்தில் போலீஸ் என்கவுன்ட்டரை மையப்படுத்தி எடுத்திருப்பதும், ஹீரோ ரஜினி போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பதும் முரண்பாடாக அமையுமா என்ற விவாதத்தையும் கிளப்பி உள்ளது. ஏனெனில் படத்தின் ட்ரெய்லரில் என்கவுன்ட்டர் தொடர்பாக ரஜினியிடம் கேள்வி எழுப்புவது போன்ற காட்சி காட்டப்பட்டிருந்தது.
‘ரசிகர்களை ஏமாற்றாது…’ – இயக்குநர் த.செ.ஞானவேல்
இது குறித்து த.செ.ஞானவேல் அளித்த பேட்டியில், ” ரஜினி சார் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதில் 50 வருட பார்முலா உள்ளது. அதை யாராலும் உடைக்க முடியாது. அந்த மாதிரிக்குள் உங்கள் கதையை உட்பொதிக்க முடிந்தால் அது வெற்றியைக் கொடுக்கும். ரசிகர்களை ஏமாற்றாமல் ஒரு பொழுதுபோக்கு கதையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.
‘மாஸ்’, ‘கமர்ஷியல்’ மற்றும் ‘மெசேஜ்’ போன்ற சொற்கள் குறுகிய கண்ணோட்டத்தில் அணுகப்படுகின்றன என்று நான் நினைக்கிறேன். உதாரணமாக, ‘ஜெய்பீம்’-ல் வெகுஜன காட்சிகள் இருந்தன – சூர்யா சாருக்கு அல்ல, செங்கேணிக்கு. வெகுஜன தருணங்கள் நடிகர்களுக்கு மட்டுமல்ல, காட்சிகளுக்கும் மட்டுமே என்று நான் நம்புகிறேன். ரஜினி சார் போன்ற ஒருவர் இருக்கும்போது, இதுபோன்ற தருணங்கள் இயல்பாகவே வரும்.
ஸ்கிரிப்டை எழுதும்போதே இதுபோன்ற காட்சிகள் இயல்பாக வரும். மேலும், யார் நாயகனாக நடித்தாலும், ஒவ்வொரு படத்துக்கும் அதன் ஹீரோவின் தருணங்கள் தேவை. சமீபத்தில் வந்த ‘லப்பர் பந்து’ படத்தில் சூப்பர் ஸ்டார்கள் இல்லை. ஆனால், கதை அதன் முன்னணி நடிகர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டதாகவே இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
பட்ஜெட்டும் பாக்ஸ் ஆபீஸ் கணக்கும்
எனவே, படம் ரஜினி ரசிகர்களை ஏமாற்றாது என்றே சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த நிலையில், சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் ‘வேட்டையன்’, ரஜினியின் முந்தைய படமான ‘ஜெயிலர்’ படத்தை விட வசூலை வாரிக் குவிக்குமா என்ற எதிர்பார்ப்பு பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் படம் ரிலீஸாகும் தேதி, ஆயுத பூஜையையொட்டி வரும் தொடர் விடுமுறைக்கு முன் வருவதால், வியாழன் தொடங்கி ஞாயிறு வரையிலான முதல் நான்கு நாட்களிலேயே 250 கோடி ரூபாய் வரை வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் படத்தின் முதல் நாளில் 80 முதல் 90 கோடி ரூபாய் வரை வசூலாகும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வெளியான ரஜினியின் ‘ஜெயிலர்’ படம் மொத்தமாக 650 கோடி ரூபாயை வசூலித்த நிலையில், ரஜினி படங்களிலேயே அதிக லாபத்தைக் குவித்த படங்களில் ஒன்றாக அப்படம் அமைந்தது. இந்த நிலையில், ‘வேட்டையன்’ அந்த சாதனையை முறியடிக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.