‘வேட்டையன்’ விமர்சனம்: சமூகத்தின் முக்கிய பிரச்னையைப் பேசுகிறது!
லைகா தயாரிப்பில் ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ படம், இன்று வெளியாகியுள்ளது. அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியார் உள்பட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
போலி என்கவுன்டரை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் காவல் அதிகாரி வேடத்தில் ரஜினி நடித்திருக்கிறார். கார்ப்பரேட் மோசடி, மனித உரிமை என அனைத்தையும் கலந்து படம் உருவாகியுள்ளது.
என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக வரும் ரஜினிகாந்த், கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸ் அதிகாரியாக பணிபுரிகிறார். கஞ்சா கடத்தல் தொடர்பான புகாரில் ஒருவரை என்கவுன்டர் செய்கிறார் ரஜினி. இதற்கு காரணமாக பார்க்கப்படும் துஷாரா விஜயன், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்படுகிறார்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவனை என்கவுன்டர் செய்கிறார் ரஜினி. ஆனால் அந்த நபர் உண்மைக் குற்றவாளி அல்ல என்பது தெரியவருகிறது. இதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியில் உண்மைக் குற்றவாளிகளை ரஜினி கண்டுபிடிக்கிறாரா என்பது தான் வேட்டையன் படத்தின் கதை.
படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தன்னுடைய ஹீரோயிசத்தைக் காட்டாமல் காவல் அதிகாரியின் கதாபாத்திரத்தை மட்டுமே நிலைநிறுத்தும் வகையில் அட்டகாசமாக நடித்திருக்கிறார் ரஜினி. தன்னால் ஒரு அப்பாவி உயிர் பறிபோய்விட்டதே என்ற விரக்தியில், இறந்தவர் நிரபராதி என்பதை நிரூபிக்க ரஜினி போராடும் காட்சிகள் சிறப்பாக வெளிவந்துள்ளன.
இந்தப் படத்தில் பகத் பாசிலின் கதாபாத்திரம் சுவாரஸ்யத்தைக் கூட்டுகிறது. திருட்டுத் தொழிலில் இருந்து திருந்தி ரஜினிக்கு உதவும் டெக்கியாக மாறி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. மனித உரிமை நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன், தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.
படத்தின் மைய பாத்திரமாக துஷாரா விஜயனின் கேரக்டர் உள்ளது. படத்தில் அவருக்கான காட்சிகள் சிறிதளவே இருந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கும் அளவுக்கு அனுதாப நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
கார்ப்பரேட் முதலாளி கதாபாத்திரத்தில் வரும் ராணா டகுபதி, போலீஸ் அதிகாரியாக வரும் ரித்திகா சிங் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். படத்தின் வில்லன் யார் என்பதை சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லருடன் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
அனிருத்தின் இசையில் ‘மனசிலாயோ’ பாடல் தாளம் போட வைக்கிறது. படத்தின் மிகப் பெரிய பலமாக ஒளிப்பதிவாளர் கதிர் இருக்கிறார். அதே சமயம், படம் பேசியுள்ள கருத்து மிக முக்கியமானது. அதை ரஜினி என்ற ஆளுமை மூலம் இயக்குநர் ஞானவேல் பேசவைத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம். திரைக்கதையில் அவ்வப்போது ஏற்படும் தொய்வுகளைத் தவிர்த்திருந்தால், ரஜினிக்கு அடுத்த பிளாக் பஸ்டராக அமைந்திருக்கும்!