‘வேர்களைத் தேடி’ கலாச்சார சுற்றுலா… அயலக தமிழ் இளைஞர்களுக்கு அழைப்பு!

யலகத் தமிழர்களின் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவதின் ஒரு நகர்வாக, பல தலைமுறைகளுக்கு முன்பு அயலகம் இடம் பெயர்ந்து, அங்கு வாழும் அயலகத் தமிழர்களின் குழந்தைகளுக்காக ‘வேர்களைத் தேடி’ என்றொரு பண்பாட்டுப்பயணத் திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இத்திட்டம் மூலம், அயலகத்தில் வாழும் 18 முதல் 30 வயதுக்குட்பட்ட தமிழர்களின் இளைஞர்களை தமிழ் நாடு அரசு செலவில் தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, தமிழ் மற்றும் தமிழர் தம் பெருமிதங்களை உணரும் வகையில், தமிழ்நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு ஒரு பண்பாட்டு பயணம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டிருந்தார்.

அதன் அடிப்படையில், கடந்த ஆண்டு இந்த பண்பாட்டுப் பயணத் திட்டத்தில் அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம் மூலம் நான்கு நாடுகளைச் சோ்ந்த தமிழ் இளைஞா்களைக் கொண்ட முதல் கட்ட பயணம் செயல்படுத்தப்பட்டது. முதற்கட்ட பயணத்தில் (27.12.2023 – 12.01.2024) ஆஸ்திரேலியா, பிஜி, இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 57 மாணவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

அடுத்து இரண்டாம் கட்டமாக கடந்த ஆகஸ்ட் மாதம் தென்னாப்ரிக்கா, உகாண்டா, குவாடலூப், மார்டினிக், பிஜி, இந்தோனேசியா, மொரிசியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மா், மலேசியா, இலங்கை, பிரான்ஸ், ஜொ்மனி ஆகிய 15 நாடுகளைச் சோ்ந்த 100 அயலகத் தமிழ் இளைஞா்கள் வரவழைக்கப்பட்டனர்.

இந்தக் குழுவினா் மாமல்லபுரம், வீராணம் ஏரி, கங்கை கொண்டசோழபுரம், தஞ்சை பெரிய கோயில், கல்லணை, சித்தன்னவாசல் குகை, கட்டபொம்மன் நினைவு இல்லம், ஆதிச்சநல்லூா் தொல்லியல் ஆய்வுத் தளம், குற்றால நீா்வீழ்ச்சி, செஞ்சிக்கோட்டை உள்ளிட்ட இடங்களைக் கண்டுகளித்தனர்.

டிசம்பரில் மூன்றாவது கட்ட பயணம்

இந்த நிலையில், ‘வேர்களைத் தேடி’ திட்டத்தின் மூன்றாவது கட்ட பயணம், வருகிற டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதி வரை பதினைந்து நாட்களுக்கு செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

கல்லணை அணை, திருவள்ளுவர் சிலை, வ.உ.சி நினைவிடம், கீழடி, பாம்பன் பாலம், சித்தன்னவாசல், கானாடு காத்தான் அரண்மனை, சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் தாராசுரம் கோவில், மற்றும் மாமல்லபுரம் கோவில் போன்ற இடங்களுக்கு பங்கேற்பாளர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள். கலாச்சார சுற்றுப்பயணத் திட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கான பயிற்சி பட்டறைகள், தகவல் அமர்வுகள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.

இப்பயணத்தில் கலந்து கொள்ள விரும்பும் அயலகத் தமிழ் இளைஞர்கள் https://nrtamils.tn.gov.in/portal/ryr என்ற வலைதள பக்கத்தில் பதிவு செய்யலாம் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Hotel deals – best prices guaranteed. Integrative counselling with john graham. 陳元溢師傅多年來以卓越的服務能力和廣泛的專業知識為不同人士提供服務,並贏得了廣泛的 客戶讚許 和認可。.