மது ஒழிப்பு மாநாடு அறிவிப்பை தொடர்ந்து, ‘ஆட்சியில் பங்கு’ என வி.சி.க முன்வைத்த கோரிக்கை அரசியல்ரீதியாக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘கூட்டணியில் விரிசல் இல்லை’ என முதலமைச்சர் ஸ்டாலின் உடனான சந்திப்புக்குப் பிறகு திருமாவளவன் விளக்கம் அளித்தாலும் சர்ச்சை ஓய்ந்ததாக தெரியவில்லை.
தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி வி.சி.கவின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்று கள்ளக்குறிச்சியில் நடத்தப்பட உள்ளது.
“மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்துக் கட்சிகளும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்” என செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் தெரிவித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், ‘அ.தி.மு.க-வும் மாநாட்டில் பங்கேற்கலாமா?’ எனக் கேட்டார். “எந்தக் கட்சியும் வரலாம். இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை” என்றார் திருமாவளவன்.
இந்தக் கருத்து அரசியல்ரீதியாக விமர்சனத்தை ஏற்படுத்தியது. தி.மு.க.,வுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே மது ஒழிப்பு மாநாட்டை திருமாவளவன் நடத்துவதாகவும் கூறப்பட்டது. இதைப் பற்றி அமைச்சர் மா.சுப்ரமணியனிடம் நிருபர்கள் கேட்டபோது, “மது ஒழிப்பு மாநாட்டிற்கு அ.தி.மு.க-வை அழைத்து, அதற்கு அக்கட்சியினர் சென்றால் நல்லதுதான். நல்ல விஷயத்திற்காக ஒன்று சேருவதாக அர்த்தம்” என்றார்.
தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியும், “அ.தி.மு.க-வை அழைத்திருப்பது வி.சி.க.,வின் விருப்பம்” என்றார்.
இதற்கிடையில், ‘ஆட்சியில் பங்கு-அதிகாரத்திலும் பங்கு’ என்ற தலைப்பில் வி.சி.கவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்த வீடியோ, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
வி.சி.க.,வின் இந்தக் கோரிக்கையை பா.ஜ.க., மகளிர் அணியின் தேசிய செயலாளர் வானதி சீனிவாசன், முன்னாள் தேசிய செயலர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வரவேற்றனர்.
“பட்டியலினத்தவருக்கு பா.ஜ.க முக்கியத்துவத்தைத் தருகிறது. சமூகநீதியைப் பின்பற்றுவது பா.ஜ.க.,தான். பட்டியலினத்தவருக்கு மோடி அரசு தரும் முக்கியத்துவத்தை திருமாவளவன் புதுடில்லியில் பார்த்து வருகிறார். அதன் அடிப்படையில் அவர் ஆட்சி, அதிகாரம் குறித்துப் பேசுகிறார்” என வானதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
அண்ணா அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. நிர்வாக சிக்கலைக் கருத்தில் கொண்டு படிப்படியாக நிறைவேற்ற முயற்சி செய்வோம் என முதலமைச்சர் என்னிடம் தெரிவித்தார்.
அந்தவகையில், வி.சி.க நடத்தும் மாநாட்டில் தி.மு.க சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் செய்தித்தொடர்பு செலாளர் டி.கே.எஸ் இளங்கோவனும் பங்கேற்க உள்ளனர் என்ற உறுதிமொழியை முதலமைச்சர் வழங்கினார்.
மற்றவர்கள், எங்கள் மாநாட்டில் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபனையும், தடையும், தயக்கமும் இல்லை. அடுத்து ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து முதலமைச்சரிடம் எதுவும் பேசவில்லை. அது 1999 ஆம் ஆண்டில் இருந்தே நாங்கள் பேசி வரும் கருத்து தான். அந்தவகையில், தி.மு.க – வி.சி.க இடையே எந்த விரிசலும் நெருடலும் இல்லை. கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்” என்றார்.
அதேநேரம், ஆட்சியில் பங்கு என வி.சி.க முன்வைத்த கோரிக்கை தி.மு.க., வட்டாரத்திலும் இதர கட்சிகள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. வி.சி.க.,வின் கோரிக்கை சரிதானா?
“இருப்பதை இழக்காமல் இருந்தால் போதும்”
–பொள்ளாச்சி உமாபதி (தி.மு.க கலை, இலக்கிய பகுத்தறிவு அணியின் மாநில செயலாளர்)
” தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை செயல்படுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை. தனி தலைமையுடனும் தெளிவுடனும் பயணிப்பது தான் சரியாக இருக்கும். விடுதலைச் சிறுத்தைகளின் கோரிக்கையை ஏற்றால் அடுத்து காங்கிரஸ் உள்பட மற்ற கூட்டணிக் கட்சிகளையும் கூட்டணி அரசில் சேர்க்க வேண்டும். இது ஆட்சி அதிகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியொரு சூழல் அமைந்தால் திராவிட மாடல் அரசை எதிர்பார்க்க முடியாது.
கூட்டணியில் இருந்து வெளியில் செல்லும் முயற்சியின் ஒருகட்டமாக இவ்வாறு பேசப்படுகிறதா எனத் தெரியவில்லை. முதலில் மதுஒழிப்பு மாநாட்டை முன்வைத்துப் பேசினர். தற்போது ஆட்சியில் பங்கு எனப் பேசுகின்றனர். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று.
2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஒன்றை அமைத்து கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் வி.சி.க., ம.தி.மு.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகள் தனி அணியாகப் போட்டியிட்டன. தேர்தல் முடிவில் அனைத்து இடங்களில் அந்த அணி தோற்றது. அதே தேர்தலில் தி.மு.க தோற்றாலும், ‘கம்யூனிஸ்டுகள் இல்லாத சட்டசபையா?’ என கருணாநிதி வேதனைப்பட்டார்.
அதன்பிறகு வி.சி.க.,வுக்கு தொடர்ச்சியான வெற்றியை இந்தக் கூட்டணி கொடுத்து வருகிறது. மீண்டும் மக்கள் நலக் கூட்டணி போல ஒன்றை அமைத்து, இருப்பதையும் அவர்கள் இழக்காமல் இருக்க வேண்டும். வி.சி.கவுக்கு மக்கள் மத்தியில் நற்பெயர் இருக்கிறது. தனித்து செல்வதன் மூலம் அவர்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகளை அவர்கள் அறிவார்கள்.
வி.சி.க., இல்லாவிட்டாலும் தி.மு.க தலைமை பெருவாரியாக வெற்றி பெறும். இதை தொலைநோக்குப் பார்வையுடன் வி.சி.க அணுக வேண்டும். மற்றபடி, இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை முதலமைச்சர் தீர்மானிப்பார்” என்றார்.
“ஆட்சியில் பங்கு கேட்பது ஏன்?”
-சமரன் (ஊடக பொறுப்பாளர், வி.சி.க)
“விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தொடங்கும்போதே, ‘எளிய மனிதனுக்கும் ஜனநாயகம், கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ என்பது தான் தாரக மந்திரமாக முன்வைக்கப்பட்டது. ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
தேர்தல் நேரத்தில் கடுமையாக உழைக்கிறோம். தலித் மக்களின் வாக்குகள் தான் வெற்றிக்கு காரணமாக இருந்தது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். அப்படியிருக்கும்போது, ‘ஆட்சியில் ஏன் பங்கு தரக் கூடாது?’ என்ற கேள்வி எழத் தானே செய்யும்?
வேறு மாநிலங்களில் வெற்றி வாய்ப்புக்கு உதவி செய்த கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருகின்றனர். தமிழ்நாட்டில் அப்படியொரு முயற்சி ஏன் சாத்தியமாகக் கூடாது. ஜனநாயகம் பரவலாக்கப்பட வேண்டும் என்பது தான் அனைவரின் நோக்கம்.
தேர்தல் காலங்களில் பெரும்பான்மைக்கான இடங்களைக் கையில் வைத்துக் கொண்டு தான் இதர இடங்களை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குகின்றனர். மீண்டும் தி.மு.க ஆட்சிக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் ஒதுக்கப்படும் இடங்களைப் பெற்று போட்டியிடுகிறோம்.
அதற்கான வாய்ப்புகள் இருந்தால் அவர்கள் கொடுக்கட்டும். இதனால் கூட்டணியில் பிளவு ஏற்பட வாய்ப்பில்லை. மக்களுக்கான பிரச்னைகளில் பொதுநலத்துடன் பங்கெடுப்பதில் வி.சி.க தெளிவாக இருக்கிறது. இதற்கும் கூட்டணிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை” என்றார்.