பொதுவாக திரைப்படங்களில் இடம்பெறும் ஹிட் பாடல்கள் ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான விருப்பங்களையும் நினைவுகளையும் கொண்டிருக்கும். சில, பல ஆண்டுகள் கழித்துக் கேட்கும்போதும், அவர்களை அந்த பழைய நினைவுகளுக்கே கொண்டு சென்றுவிடும். அப்படியான சில பாடல்கள் திரைப்படங்களிலேயே, சில காட்சிகளின் ஊடாக போகிற போக்கில் இசைக்கப்படும்போது அல்லது ஒலிக்கவிடப்படும்போது ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டுவிடும்.
அப்படியான பாடல்கள் இடம்பெற்ற ஒரு சில படங்களைப் பட்டியலிடலாம் என்றால், தங்கர்பச்சான் இயக்கத்தில், பார்த்திபன் – நந்திதா தாஸ், தேவயானி உள்ளிட்டோர் நடிப்பில் 2002 ல் வெளியான ‘அழகி’ படத்தையும், விஜய் சேதுபதி – த்ரிஷா நடிப்பில் 2018 ல் வெளியான 96 திரைப்படங்களையும் குறிப்பிடலாம்.
அழகி-யில் ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை…’
இதில் ‘அழகி’ படத்தில் சின்ன வயசு சண்முகமும் தனுமும் முந்திரிக்காட்டில் இருக்கும் காட்சியில் ரேடியோவில் ஒலிக்கும் ‘கண்ணன் ஒரு கைக்குழந்தை…’ பாடல், படத்தின் இறுதிக்கட்டத்தில் இருவருக்குமான பிரிவையும் பழைய நினைவுகளையும் பார்த்திபன் அசைபோடும் காட்சியில் டேப்ரிக்கார்டில் மீண்டும் ஒலிக்கும். குறிப்பாக பாடலில் வரும்,
“ஏழ்பிறப்பும் இணைந்திருக்கும்
சொந்தம் இந்த சொந்தமம்மா
வாழ்விருக்கும் நாள் வரைக்கும்
தஞ்சம் உந்தன் நெஞ்சமம்மா…”
என்ற வரிகள் அந்த காட்சியின் வலியையும் அடர்த்தியையும் இன்னும் அதிகமாக்கி, பார்த்திபனின் அந்த நிமிட உணர்வை நம் மனசுக்குள்ளும் கடத்தி உலுக்கிவிடும். ‘1976 ஆம் ஆண்டு ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில், சிவகுமார், ராணி சந்திரா உள்ளிட்டோர் நடித்த ‘பத்ரகாளி’ என்ற படத்தில் இடம்பெற்ற இந்த பாடலைத்தான், இயக்குநர் தங்கர்பச்சான் மேற்கூறிய காட்சிக்கும் பொருத்தமாக பயன்படுத்தி இருப்பார். ‘பத்ரகாளி’ படம் வெளியாகி 48 வருடங்கள் ஆகிவிட்டாலும், ஏராளமானோருக்கு இன்னமும் விருப்பத்துக்குரிய பாடல் லிஸ்ட்டில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.
96 ல் ‘யமுனை ஆற்றிலே, ஈர காற்றிலே…’
அதேபோன்று தான் 96 படத்தில் இடம்பெற்ற, ‘தளபதி’ படத்தின் ‘யமுனை ஆற்றிலே, ஈர காற்றிலே…’ பாடல். விஜய் சேதுபதி – த்ரிஷா இடையேயான பள்ளிக்காதல் காட்சிகளை விவரிக்கும் ஜானு – ராம் கேரக்டர்கள் படத்தின் அதி சுவாரஸ்ய பக்கங்கள் என்றால், அதில் நல்ல பாடக்கூடியவரான ஜானு , வகுப்பில் நேயர் விருப்பம் போல ஒவ்வொருவரும் கேட்கும் பாடலையும் பாடி மகிழ்விப்பவர், தனது விருப்பத்துக்குரிய ராம் விரும்பிக் கேட்கும் ‘யமுனை ஆற்றிலே, ஈர காற்றிலே…’ பாடலை மட்டும் பாடாமலே தவிர்த்து வருவார்.
கடைசியில் காதல் தோல்விக்குப் பின்னர், திருமணமாகி ராமை ஜானு மீண்டும் சந்தித்து, இருவரும் பழைய விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சியில், கரன்ட் போய்விட, இருட்டில் விஜய்சேதுபதி மெழுகுவர்த்தியைத் தேடிக்கொண்டிருக்கும்போது, த்ரிஷா திடீரென ‘யமுனை ஆற்றிலே, ஈர காற்றிலே…’ பாடலைப் பாடுவது அந்த காட்சிக்கு பொருத்தமாக மட்டுமல்லாது, நமக்குள்ளும் அவர்கள் இருவருக்கும் இடையேயான அந்த பிரிவையும் துயரத்தையும் கடத்திவிடும்.
வாழையில் ‘தூதுவளை இலை அரைச்சி…’
அந்த வகையில், தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23 ஆம் தேதி வெளியான ‘வாழை’ படத்தில் சந்தோஷ் நாராயணின் இசையில் இடம் பெற்றுள்ள பாடல்களும் தழை வாழை விருந்தின் தித்திப்பு என்றே சொல்லலாம். அதிலும் யுகபாரதி வரியில், பாடகர் தீ பாடிய‘தென்கிழக்கு தேன் சிட்டு’ பாடல் மென்மையான கிளாசிக்கல் மெலடி. கூடவே இடம் பிடித்துள்ள ‘ஒரு ஊர்ல ராஜா’, ‘ஒத்த சட்டி சோறு’, ‘பாதகத்தி’ ஆகிய பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
இது ஒருபுறம் இருக்க, காட்சி ஓட்டத்தின் நடுவே, ஆங்காங்கே ஒலிக்கும் சில பழைய படங்களின் பாடல்களுக்கு ரசிகர்களிடையே செம வரவேற்பு. படத்தில் சிவனணைந்தான் கதாபாத்திரத்தில் வரும் சிறுவன் தனது டீச்சரின் பெயரை நினைவூட்டும் விதமாக பாடும் ‘மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும் வஞ்சிப் பூங்கொடி…’ ( படம் – சக்கரை தேவன்), “இதயம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்கொடி தான் பூத்ததம்மா…’ பாடல்களை பாடும் காட்சிகளும் தியேட்டரில் கைதட்டல் அள்ளுகின்றன என்றால், பள்ளியின் ஆண்டு விழாவுக்கான டான்ஸ் ரிகர்சலுக்காக பூங்கொடி டீச்சர் (நிகிலா விமல்) , ‘எட்டுப்பட்டி ராசா’ படத்தில் தேவா இசையில் இடம்பெற்ற ‘பஞ்சுமிட்டாய் சேலை கட்டி’ பாடலுக்கு தியேட்டரே ஆடுகிறது.
இவற்றுக்கெல்லாம் ஹைலைட்டாக அமைந்த பாடல் என்றால், அது படத்தில் காதல் ஜோடியாக காட்டப்படும் கலையரசன் – திவ்யா துரைசாமி இடையேயான காதலை உணர்த்தும் காட்சியில் ஒலிக்கும் ‘தூதுவளை இலை அரைச்சி… தொண்டையில தான் நனைச்சி’ பாடல் தான் . காட்சிக்கு பொருத்தமாக, செமையாக செலக்ட் செய்து இடம்பெறச் செய்துள்ளார் இயக்குநர் மாரிசெல்வராஜ். ‘வாழை’ படத்தில் இப்பாடலை தியேட்டருக்குள் கேட்டபோது, முழுதாக கேட்க மாட்டோமா என ஏங்க வைத்துவிடுகிறது.
அதிலும், அந்த பாடலில் இடம்பெறும்
“நாள் தோறும் காத்திருந்தேன், நானே தவமிருந்தேன்…
உனக்காக தான், கண்ணே உனக்காக தான்…”
என்ற வரிகள், படம் வெளியான 90 களுக்கே நம்மை இழுத்துச் செல்கிறது.
இந்த பாடல் 1994 ஆம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் வெளியான ‘தாய் மனசு’ என்ற படத்தில், அவரே எழுதி, தேவா இசையில் இடம்பெற்று பட்டித்தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிய பாடல். அதிலும் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நடைபெறும் கொடை விழாவில் நையாண்டி மேளம் வாசிப்பவர்கள், இப்பாடலை தவறாமல் வாசிப்பார்கள். நாதஸ்வரம் வாசிப்பவர் அப்பாடலை தனது நாயனத்தில் இசைக்க, அதற்கு ஈடாக நையாண்டி மேளம் வாசிக்கப்பட, கேட்பவர்கள் மனதை துள்ளலும் துயரமும் கலந்துகட்டி அடிக்கும்.
அதன் அத்தனை உணர்வையும் தனக்குள் உள் வாங்கிக்கொண்டவரல்லவா மாரிசெல்வராஜ்?. அதனால் தான், இப்பாடலை படத்தின் ஓட்டத்தின் இடையே இடம்பெறச் செய்ததோடு மட்டுமல்லாது, வாழை படத்தின் Making காட்சிகள் வீடியோவிலும் அப்பாடலை நையாண்டி மேள இசையோடு வெளியிட்டுள்ளார். இதற்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு.
இதனால் ‘வாழை’ படம் வெளியானதிலிருந்து ‘தூதுவளை இலை அரைச்சி…’ பாடலை இணையத்திலும் யூடியூப்பிலும் தேடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 90 களில் அடித்த ‘ஹிட்’ டுக்கு ஈடாக தற்போது மீண்டும் இப்பாடல் இளையதலைமுறையினரையும் முணுமுணுக்க வைத்துள்ளது.