சிறுவயதில் தான் எதிர்கொண்ட சம்பவங்களின் தொகுப்பு தான் வாழை என முன்னரே அறிவித்துவிட்டார், இயக்குநர் மாரி செல்வராஜ். அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறதா வாழை? வாருங்கள் பார்க்கலாம்…
தூத்துக்குடியில் உள்ள புளியங்குளம் கிராமம். அங்கு தன் அம்மா (ஜானகி), அக்கா வேம்புடன் (திவ்யா துரைசாமி) வசிக்கும் சிறுவன் சிவனைந்தன் (பொன்வேல்), குறும்புக்காரனாக இருந்தாலும் படிப்பில் முதல் மாணவனாக இருக்கிறான். குடும்பத்தின் வறுமை காரணமாக பள்ளி விடுமுறை நாட்களில் வாழைத்தார் சுமக்க தனது தாயால் அனுப்பப்படுகிறான். சில காரணங்களுக்காக அவன் வாழை தோட்டத்தில் வேலை செய்வதை விரும்பவில்லை. அவனிடமிருந்து பறிக்கப்படும் அந்த குழந்தை பருவத்துக்கே உரிய மகிழ்ச்சியும், கடுமையான உழைப்பும் அவனை மனதளவில் பாதிக்கிறது. ஆனால், அவன் சூழ்நிலையை புரிந்துகொள்கிறான்.
டான்ஸ் ஒத்திகைகளில் கலந்துகொள்வது போன்ற சிவனைந்தனின் சின்ன சின்ன ஆசைகள், இதனால் ஒரு நாள் வேலைக்கு போகமுடியாமல் போவது , இது அவரது குடும்பத்திற்கு எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது, அதனைத் தொடர்ந்து அவனைத் தாக்கும் சோகம், அவன் எதிர்கொள்ளும் சமத்துவமின்மையும் வாழ்வின் யதார்த்தங்களும் நம்மை கலங்க வைக்கின்றன.
சிறுவர்களின் அசத்தலான நடிப்பு… ரசிக்க வைக்கும் நிகிலா விமல்
சிவனைந்தன் விரும்பும் பள்ளிக்கூடமும் ஆசிரியை பூங்கொடியும், இதற்காக அமைக்கப்பட்ட காட்சிகளும், நமது பள்ளிப் பருவ நினைவுகளைக் கிளறிவிடுவதைத் தவிர்க்க முடியாது. பூங்கொடியாக வரும் நிகிலா விமல் ரசிக்க வைக்கிறார். அவருக்கு இது பெயர் சொல்லும் படமாக அமையும்.
படத்தில், தொழிலாளி வர்க்கத்தின் சுரண்டல், சமூக ஏற்றத்தாழ்வுகள் மற்றும் பணத்தின் முக்கியத்துவம் ஆகியவை அதிர்ச்சியூட்டும் காட்சிகள். பொன்வேலும் அவனது நண்பன் சேகரும் தங்களின் வாழ்க்கை போராட்டங்களில் சிலவற்றை நகைச்சுவை மூலமாகவும், சில சண்டைகள் மூலமாகவும் கடந்து செல்கின்றனர்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து பின்னப்பட்ட இந்தக் கதையில் சிவனைந்தன் என்ற சிறுவனாக நடித்த பொன்வேல், மற்றொரு சிறுவன் ராகுல் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். கலையரசன், திவ்யா துரைசாமியின் காதல் காட்சிகள், படத்துக்கு கூடுதல் மெருகேற்றுகின்றன. எதுவுமே பேசிக் கொள்ளாமல் காதல் காட்சிகளில் இருவரும் அசத்தியுள்ளனர்.
ஈர்க்கும் பாடல்கள்
படத்தில் பசுமை மற்றும் வாழைத்தார் சுமக்கும் பாரத்தை பார்வையாளர்களுக்கு கடத்தியதில் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர், சபாஷ் போட வைக்கிறார். சந்தோஷ் நாராயணனின் இசையும் தென்கிழக்கு, பாதவத்தி பாடல்களும் ரசிகர்களை ஈர்க்கின்றன. குழந்தைப் பருவத்தை மீட்டெடுக்கும் படமாக, ரசிகர்களை தன்வயப்படுத்தியிருக்கிறது.
மயக்கும் மாரிசெல்வராஜின் திரைமொழி
மேலும், நவீன கால மெயின்ஸ்ட்ரீம் சினிமாவின் கதை சொல்லலுக்கான ஒரு அளவீடாகவும் வாழையைப் பார்க்கலாம். காட்சிகள் உருவாக்கமும் அவற்றின் ஒன்றிணைப்பும் கவிதையாய் விரிகிறது. தேனி ஈஸ்வரின் காட்சிகள் மூலம், மனிதனின் பேராசை, பூமியில் உள்ள அமைதியை எவ்வாறு சீர்குலைக்கிறது என்பதைச் சொல்ல, மனிதர்கள், பறவைகள், குளங்கள் மற்றும் ஆடு,மாடுகளுடன் ஒன்றாக வாழும் அவரது மயக்கும் உலகத்தை மாரி நமக்குக் காட்டுகிறார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு கடும் வெயில் நாளில் உங்கள் காலடியில் உள்ள சேற்றையோ அல்லது பசியின் வேதனையையோ சினிமாவாலும் உணர முடியும் எனக் காட்சிகளை திரையில் விரியவிட்டு, உங்களை உலுக்குகிறார் மாரி. ஒரு குறிப்பிட்ட காட்சியில், வறண்ட நாக்கில் காற்றின் சுவையை நீங்கள் உணர முடியும். அந்த அளவுக்கு மாரி செல்வராஜின் திரைமொழி நம்மை காட்சிகளுக்குள் ஈர்த்துச் செல்கிறது.
வாழையில், மாரி செல்வராஜ் தான் யார் என்பதைக் காட்டி, உங்களை மகிழவும், சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து, க்ளைமாக்ஸில் உங்களை உறையச் செய்துவிட்டுச் செல்கிறார். மொத்தத்தில் வாழை, மாரி செல்வராஜின் இதுவரையிலான படைப்புகளில் ஆகச் சிறந்த படம் எனலாம். அது மட்டுமல்லாது அவரை குறிவைத்து சமூக வலைதளங்களில் செய்யப்பட்ட ட்ரோல்களுக்கு சரியான பதிலாகவும் அமைந்துள்ளது.
மாரி செல்வராஜுக்கு பாராட்டு ப்ளஸ் ஒரு அழுத்தமான ஹக்!