‘வாழை’: ‘சத்யஜித் ரே வரிசையில் மாரிசெல்வராஜ்’… பாராட்டும் பாரதிராஜா… சிலிர்க்கும் சிவகார்த்திகேயன்!
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியாகி உள்ள ‘வாழை’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படம் நேற்று திரைக்கு வருவதற்கு முன்னரே, இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, பாலா உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்களுக்கும், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலருக்கும் திரையிடப்பட்டுக் காட்டப்பட்டது.
படத்தைப் பார்த்த அனைவரும், நெகிழ்ந்து போய் இயக்குநர் மாரி செல்வராஜைப் பாராட்டினர். இயக்குநர் பாலா, நடிகர் சூரி ஆகியோர் மாரிசெல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தனர். அந்த அளவுக்கு படம் அவர்களைக் கவர்ந்ததாக தெரிகிறது.
அவர்களது பாராட்டுகளையும் வீடியோ பதிவுகளையும் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா வீடியோ மூலம் தெரிவித்த பாராட்டையும் அவர் இன்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாரதிராஜாவின் பாராட்டு
அந்த வீடியோவில் பேசிய பாரதிராஜா, “சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களை பார்த்து யோசித்தது உண்டு. ‘வாழை’ அப்படியொரு படம். ‘வாழை’ அப்படியொரு படம். படத்தைப் பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தம் இல்லாத தெருக்கள் என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார், மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.
சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல் படங்களை பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையோ என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களை எல்லாம் விஞ்சுகிற வகையில் என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக ஒரு படம் பண்ணியிருக்கான். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கான் என மார்தட்டி சொல்லுவேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கு மாரி செல்வராஜ் தனது பதிவில், “நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறியிருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குநர் இமயத்திற்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனும் பாராட்டு
அதேபோன்று சிவகார்த்திகேயன் பாராட்டி பேசியுள்ள வீடியோவில், “மிக நெருக்கமான ஒருவரின் கதையைக் கேட்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. மாரி செல்வராஜ் மீண்டும் மீண்டும் தான் ஒரு strong-ஆன இயக்குநர் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். ‘வாழை’ என்னுடைய favourite படமாக மாறியுள்ளது. பல விருதுகள் பெற தகுதியுள்ள படம் இந்த ‘வாழை’ ” எனக் கூறியுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்து மாரிசெல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், ” ‘பரியேறும் பெருமாள்’ வெளியாவதற்கு முன்பே என்னை நேசிக்க ஆரம்பித்த ஆன்மா நீங்கள். ‘கர்ணன்’, ‘மாமன்னன்’… என்று என் ஒவ்வொரு படைப்பு வரும்போதும் முதல் ஆளாய் நீங்கள் என் கைபிடித்து கொண்டாடி தீர்த்த வார்த்தைகளைப் பத்திரப்படுத்தியதை போலவே இன்று ‘வாழை’க்கு நீங்கள் இவ்வளவு ப்ரியத்தோடு தந்திருக்கும் வார்த்தைகளையும் நல்ல தோழனாக பத்திரப்படுத்திகொள்கிறேன். நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முதல் நாள் வசூல் நிலவரம்
இந்நிலையில் ‘வாழை’ படம் முதல் நாளில் பாக்ஸ் ஆபீஸில் மட்டும் ரூபாய் 1.3 கோடி வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மட்டும் இல்லாமல் படத்தினை ஏற்கனவே OTT தளத்திற்கு நல்ல விலைக்கு விற்றுவிட்டதாகவும், தியேட்டர் வசூல் என்பது மாரி செல்வராஜ்க்கு லாபத்தையே ஈட்டித்தரும் எனவும் கூறப்படுகின்றது. படத்தின் புரோமோசனில் மாரி பேசுகையில், “எனக்கு இந்த படம் எவ்வளவு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் நான் இந்தப் படத்தை எடுக்கத்தான் சினிமாவுக்கு வந்தேன்.எனது பெரும் கண்ணீர்தான் இந்தப் படம்” எனக் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.