இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23 அன்று வெளியானது. ‘வாழை’ திரைப்படம். திரைக்கு வருவதற்கு முன்னரே, இயக்குநர்கள் மணிரத்னம், பாரதிராஜா, பாலா உள்ளிட்ட பல்வேறு முன்னணி இயக்குநர்களுக்கும், தனுஷ், கார்த்தி, சிம்பு, சிவகார்த்திகேயன், சூரி உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலருக்கும் திரையிடப்பட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த அனைவருமே நெகிழ்ந்துபோய் மாரி செல்வராஜை பாராட்டி இருந்தனர்.
படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘வாழை’ திரைப்படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. முதல்வாரம் 250 -க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியான நிலையில், படத்துக்கு கிடைத்த பாசிட்டிவான விமர்சனங்களால் இப்படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதனால், இரண்டாவது வாரம் 650-க்கும் அதிகமான திரையரங்குகளில் ‘வாழை’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் ‘வாழை’ பார்த்த முதலமைச்சர்
இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சான் பிரான்சிஸ்கோவில் ‘வாழை’ திரைப்படத்தைப் பார்த்துள்ளார். இதனையடுத்து அப்படத்தை பாராட்டியும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவித்தும் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
‘சிவனணைந்தான்களின் காயங்கள் ஆறும்’
அதில், ” உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழையை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜ் அவர்களுக்கு அன்பின் வாழ்த்துகள்.
பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி. பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம். தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜ் அவர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.
பாராட்டுக்கு மாரி செல்வராஜ் நன்றி
முதலமைச்சரின் இந்த பாராட்டுக்கு நன்றி தெரிவித்து இயக்குநர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தளத்தில், “என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மாண்புமிகு ஐயா மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.