“இந்த உழவர் சந்தையை ஆரம்பிச்ச காலத்துல இருந்து வியாபாரம் பண்றேன். என் தோட்டத்து காய்கறிகளை பறிச்சு காலையில விக்கறதுக்கு கொண்டு வர்றேன். மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயணம் இருக்கறதால லக்கேஜுக்கு காசு கொடுக்க வேண்டிய வேலை இல்லை. எங்களை மாதிரி ஏழை விவசாயிகளுக்காக கலைஞர் ஐயா கொண்டு வந்த திட்டத்தை காலத்துக்கும் மறக்க மாட்டோம்” – மதுரையை சேர்ந்த விவசாய பெண்மணி ஒருவரின் நெகிழ்ச்சிக் குரல் இது.
இவர் மட்டுமல்ல, லட்சக்கணக்கான விவசாயிகளின் நேரடி விற்பனை நிலையமாக உழவர் சந்தைகள் மாறிவிட்டன. வியாபாரிகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தால் தங்கள் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளும் காய்கறிகளின் விலை உயர்வால் பொதுமக்களும் சிரமப்பட்டபோது, முதலமைச்சராக இருந்த கருணாநிதியின் எண்ணத்தில் உதித்த திட்டங்களில் ஒன்று தான் உழவர் சந்தை.
கலைஞர் போட்ட அடித்தளம்
1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் இன்றளவும் வெற்றிகரமாக இயங்குவதற்கு காரணம், அதற்காக அன்றைய தி.மு.க., அரசு போட்ட அடித்தளம் தான்.
மதுரையில், 1999 நவம்பர் 14 அன்று திறக்கப்பட்ட உழவர் சந்தை, அனைத்து மாவட்டங்களிலும் கிளை பரப்பியது. சென்னை, பல்லாவரத்தில் இதன் 100 ஆவது கிளையை முதலமைச்சராக இருந்த கருணாநிதி திறந்து வைத்தது கூடுதல் சிறப்பு. இதன் பயனாக வெளிச் சந்தைகளில் விற்கப்படுவதைக் காட்டிலும் குறைந்த விலையில் இன்றளவும் காய்கறிகள் விற்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு உழவர் சந்தையும் தனி அதிகாரி ஒருவரின் கண்காணிப்பில் இயங்கி வருகிறது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 180 உழவர் சந்தைகள் இயங்கி வருகின்றன.
சிறப்பு ஏற்பாடுகள்
1999 ஆம் ஆண்டில் இத்திட்டத்தை கருணாநிதி அறிமுகம் செய்து வைத்தபோது, விவசாயப் பெருமக்களின் நலனுக்காக சில சிறப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார். அவை…
- உழவர் சந்தை தொடங்கும் நேரத்தில் விவசாயிகள் வர ஏதுவாக அவர்களின் கிராமங்களில் இருந்தே நேரடி போக்குவரத்து வசதி
- காய்கறிகளுக்கு பஸ்களில் சுமைக் கட்டணம் அறவே ரத்து
- உழவர் சந்தையில் விற்பனை செய்யும் வகையில் ஒவ்வொரு விவசாயிக்கும் தனி அடையாள அட்டை
.*40 கி.மீ தொலைவுக்குள் விளையும் காய்களை விற்க வேண்டும் என்பது விதி.
*காய்கறிகளுக்கான சந்தை விலையை அதற்கான குழு அன்றாடம் தீர்மானிக்கிறது.
- கூடுதல் விலைக்கு விற்கப்படாமல் தடுக்கும் வகையில் சந்தையின் 4 இடங்களில் காய்கறி விலைப்பட்டியல் வைக்கப்படுகிறது.
-இதன் காரணமாக, விவசாயிகள் உற்பத்தி செய்யும் காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைத்தன. காய்கறிகளை விற்கும் போது கையில் நேரடியாக பணம் கிடைத்ததால் உற்சாகமான விவசாயிகள், குடும்பம் குடும்பமாக உழவர் சந்தைகளில் குவியத் தொடங்கினர்.
தினசரி 150 டன் காய்கறிகள்
இன்றளவும் சுமார் 150 டன் காய்கறிகளுக்கும் மிகாமல் விற்பனையாகிறது. இதனால் தனியார் காய்கறி சந்தைகளை எல்லாம் உழவர் சந்தைகள் ஓரம்கட்டி வெகுகாலம் ஆகிவிட்டது.
ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறும்போது முந்தைய ஆட்சியின் திட்டங்கள் தொடர்வதில் தடைகள் ஏற்படுவது வாடிக்கையாக இருந்தது. உதாரணமாக, கருணாநிதி அவர்களின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகம் அடுத்து வந்த ஆட்சியில் முறையாக பராமரிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
ஆனால், உழவர் சந்தைக்கு அப்படி எந்த சிக்கலும் வரவில்லை. உழவர் சந்தையின் செயல்பாட்டை நிறுத்தினால் விவசாயிகளின் கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்பதால் அ.தி.மு.க ஆட்சியிலும் உழவர் சந்தைகள் சிறப்பாக செயல்பட்டன.
“கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரம், வடவள்ளி, சிங்காநல்லூர், சுந்தராபுரம், சூலூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இடைத்தரகர்களை தவிர்த்தது தான் உழவர் சந்தையின் சாதனை. இன்றளவும் காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது.
வெளிச்சந்தையைவிட குறைவான விலைக்கு தரமான காய்கறிகள் கிடைப்பதால் பெரும் பணக்காரர்கள் பலரும் உழவர் சந்தைக்கு வருகின்றன. இப்படியொரு தொலைநோக்கு திட்டத்தைக் கொண்டு வந்த கலைஞரை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது” என்கிறார், மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெள்ளியங்கிரி.
விலைவாசியைக் கட்டுப்படுத்த ஒரே வழி
“உழவர் சந்தைகளை நாடு முழுவதும் திறந்தால் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியும். விவசாயிகளுக்கும் தங்கள் உற்பத்தி பொருளுக்கு நல்ல விலை கிடைக்கும்” என்பது முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்கும் தீர்வுகளில் ஒன்று.
வேளாண் விளைபொருளுக்கு உரிய விலை கேட்டு தலைநகரில் விவசாயிகள் போராடியதைப் பார்த்து நாடே கண்ணீர் வடித்தது. “உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. அனைத்து மாநிலங்களிலும் உழவர் சந்தைகள் திறக்கப்படும்போது விவசாயிகளின் விலைபொருளுக்கு உரிய விலை கிடைக்கும். அப்போது தான் கலைஞரின் பெருமையை இந்த நாடு அறியும்” என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாக உள்ளது.
உழவர் சந்தைகளில் கோலோச்சும் விவசாயிகளின் கருத்தும் இதே தான்!