அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தான் வெற்றி பெறுவார் எனத் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள் கூறின். ஆனால், அத்தனை ஆருடங்களையும் அடித்து நொறுக்கிவிட்டு குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக அந்த நாட்டின் அதிபராக ஏற்க உள்ளார்.
மொத்தம் உள்ள 501 இடங்களில், ட்ரம்ப் 277 இடங்களையும், கமலா ஹாரிஸ் 224 இடங்களையும் கைப்பற்றினர். ட்ரம்பை விட வெறும் 3.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார். கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த தோல்விக்கு அந்த நாட்டின் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் தான் காரணம் என கமலா ஹாரிஸின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஜோ பைடனின் வயது மற்றும் கொரோனா தொற்றுக்குப் பிந்தைய பணவீக்கம் குறித்த அமெரிக்க மக்களின் கோபம், அமெரிக்க-மெக்சிகோ எல்லை பிரச்னை போன்ற காரணங்களே ஹாரிஸின் தோல்விக்கு காரணமாக அமைந்ததாக கூறும் அவர்கள், ஜூலைக்குப் பதிலாக ஜனவரியில் அவர் போட்டியிலிருருந்து விலகியிருந்தால், தற்போதைய நிலைமையே வேறாக இருந்திருக்கும் என்கிறார்கள்.
தொடக்கத்திலேயே சொதப்பிய பைடன்…
கமலா ஹாரிஸ் பிரச்சாரத்தின் மூன்று ஆலோசகர்கள் உட்பட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த சில உயர்மட்ட நிர்வாகிகள் இது குறித்து பேசும்போது, பைடன் தேர்தல் சவாலுக்குத் தயாராக இல்லை என்பதைத் தேர்தலுக்கு முன்னதாகவே அடையாளம் கண்டுகொண்டதாக கூறுகின்றனர்.
அதிபர் தேர்தலில் முதலில் பைடன் தான் மீண்டும் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட இருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக பொது நிகழ்ச்சிகளின்போது அவரிடம் வெளிப்பட்ட தடுமாற்றம், மறதி போன்றவை விவாதத்தைக் கிளப்பி, கடைசியில் கமலா ஹாரிஸை களமிறக்கச் செய்தது. இது மக்களிடையே குழப்பத்தையும், ஜனநாயக கட்சி மீது அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
பின்னடைவை ஏற்படுத்திய பைடன் மீதான இமேஜ்
அதிபர் தேர்தலில் மீண்டும் நம்பகமான வேட்பாளராக களமிறங்கும் அளவுக்கு 81 வயதாகும் பைடனுக்கு புத்திக்கூர்மையும் சகிப்புத்தன்மையும் உள்ளதா என்பது குறித்து அவரது சொந்த கட்சியினருக்கே சந்தேகம் எழுந்தது. மேலும், நீண்ட காலத்திற்கு முன்பே அமெரிக்கர்கள் அவரது வயதைப் பற்றி கவலைப்படுவதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. பொது விவகாரங்களுக்கான AP-NORC மையத்தின் கருத்துக்கணிப்பின்படி, 77 சதவீத அமெரிக்கர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பைடனுக்கு இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு செயல்பட முடியாத அளவுக்கு வயதாகிவிட்டதாகக் கூறினர்.
இத்தகைய பின்னணியில் தான், தனது இந்த ஆண்டு ஜூலையில் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தை முடித்தார் பைடன். ஆனால், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா மற்றும் முன்னாள் சபாநாயகர் நான்சி பெலோசி உட்பட ஜனநாயகக் கட்சியின் அதிகாரமிக்க நபர்கள் வலியுறுத்திய பின்னரே, போட்டியிலிருந்து விலகி, ஹாரிஸை ஆதரித்தார். ஆனாலும், தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், தனது ஆட்சி நிர்வாகம், பைடனின் நிர்வாகத்திலிருந்து எந்த விதத்தில் வேறுபடும் என்பதை மக்களிடையே கொண்டு செல்வதற்கு ஹாரிஸ் மிகவும் போராடினார் என்றே சொல்ல வேண்டும். அதாவது, பைடன் போன்றே கமலா ஹாரிஸ் நிர்வாகமும் இருக்கும் என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுவிட்டது.
குறுகிய கால பிரசாரம்
மேலும், தேர்தல் பிரச்சாரத்துக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டதும் ஹாரிஸுக்கு, பைடனிலிருந்து தான் எந்தவிதத்தில் வேறுபட்டவர் என்பதை வெளிப்படுத்துவதில் பின்னடைவை ஏற்படுத்தியதாக அவரது தேர்தல் பிரச்சார வியூக வகுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது, பைடன் இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே போட்டியிலிருந்து ஒதுங்கியிருந்தால், அது ஜனநாயகக் கட்சியினருக்கு தங்களது வலுவான வேட்பாளர் யார் என்பதை தீர்மானித்து, பிரச்சாரத்தை மக்களிடம் தீவிரமாக கொண்டு செல்ல போதுமான அவகாசம் கிடைத்திருக்கும்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்குப் பிறகு அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் அமெரிக்க குடியேற்ற அமைப்பு பற்றிய பரந்த கவலைகள் குறித்து அமெரிக்க வாக்காளர்களிடையே பரவலாக அதிருப்தி காணப்பட்டது. இதுவும் தோல்விக்கு முக்கிய காரணம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.